உள்ளூர் செய்திகள்

இயற்கை வாசம் செய்யும் கொல்லிமலை!

பூமிப்பந்தின் இயற்கை சங்கிலியை, தன் விருப்பம் போல இழுத்து வளைக்கும் மோசமான மனிதர்களால், மாசுபடாத மலைதான் கொல்லிமலை.கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும் கிடைக் காத, சுத்தமான காற்று, கற்கண்டு போல தண்ணீர், கண்கொள்ளா பசுமை, உடலுக்கும், மனதிற்கும் இதம் தரும் குளிர்ச்சி, மூலிகை சுவாசம், கபடமில்லாத மக்களை கொண்டுள்ளது கொல்லிமலை.நாமக்கல் மாவட்டதில், கிழக்குத் தொடர்ச்சி மலையில், 1,300 மீட்டர் உயரத்தில், 280 சதுர கி.மீ., பரப்பளவில், விரிந்து, படர்ந்து, அடர்ந்த மூலிகை காடுகளுடன் அமைந்துள்ளது கொல்லிமலை.கடையெழு வள்ளல்களில் ஒருவரும், ஒரே அம்பில் சிங்கம், கரடி, மான், காட்டுப்பன்றி, உடும்பை வீழ்த்திய வீரருமான, வல்வில் ஓரி, கி.பி., 200ல், ஆண்ட மண் இது.சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூற்றில் இடம்பெற்ற தலம், மேலும், இளங்கீரனார், அவ்வையார், பெருஞ்சித்திரனார் போன்ற சங்ககால புலவர்களாலும் பாடப்பெற்ற இடம்.இங்கு, 1,100 படிகளில் இறங்கிச் சென்று பார்த்தால் ஆனந்தமும், குளித்தால் பரவசமும் தரும் ஆகாய கங்கை அருவி உள்ளது. பெயருக் கேற்றாற்போல, 180 அடி உயரத்தில் இருந்து அருவி விழுவது, வெள்ளியை உருக்கி ஊற்றினாற்போல அற்புதமாக உள்ளது.இந்த அருவிக்கு செல்லும் வழியில், கோரக் சித்தர் உள்ளிட்ட சில சித்தர்கள் வாழ்ந்த குகைகள் உள்ளன. பல ஆண்டு காலமாக பராமரிப்பு இல்லாமல் இருப்பதால், குகைக்குள் போக முடியாத அளவிற்கு, வவ்வால்களின் நெடி உள்ளது.பல படி இறங்கி, ஆகாயகங்கை அருவிக்கு போக முடியாதவர்கள், அறப்பளீஸ்வரர் கோவில் அருகே ஓடும் அருவியில் குளித்து மகிழலாம்.மேலும், 1300 ஆண்டு கால பழமை வாய்ந்த அறப்பளீஸ்வரர் கோவில் போகலாம். இந்நாளில் எட்டுக்கை அம்மனாகவும், முன்னாளில் கொல்லிப் பாவையாகவும் அழைக்கப்பட்ட அம்மனை தரிசிக்கலாம். வாசலூர்பட்டி படகு துறையில், படகுவிட்டு சந்தோஷப்படலாம். தாவரவியல் பூங்காவில் உள்ள, 'கிங்காங்' மனிதக் குரங்கையும், படகு வீட்டையும் பார்த்து ரசிக்கலாம். இன்னும் சீக்குப்பாறை, வியூபாயின்ட் போன்ற இடங்களைப் பார்த்து மகிழ்ச்சி அடையலாம். அரசு மூலிகை பண்ணையில் உள்ள கருநெல்லி, ஜோதிப்புல் போன்ற மூலிகையையும் பார்க்கலாம்.இங்குள்ள மலைப்பாறைகளில் விளையும் ஆட்டுக்கால் போன்ற வடிவத்தில் இருக்கும், முடவாட்டுக்கால் சூப் சாப்பிட்டு, களைப்பை போக்கிக் கொள்ளலாம்.இங்கு விளையும் காபி, தேயிலை, மிளகு, பலா, அன்னாசி, வாழை, பப்பாளி போன்றவைகளை உண்டும் மகிழலாம். தேவைக்கேற்ப, குறைந்த விலைக்கு வாங்கி வந்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து சந்தோஷப்படலாம்.நாமக்கல்லில் இருந்து, 55 கி.மீ., தூரத்தில் உள்ள கொல்லிமலைக்கு, நாமக்கல், சேலம், ராசிபுரம், சேந்தமங்கலம் போன்ற இடங்களில் இருந்து பஸ்கள் விடப்படுகின்றன. 70 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதையில் வளைந்து, நெளிந்து, மேகம் வந்து மலை முகடுகளை தொட்டு செல்லும் இயற்கை காட்சியை பார்த்தபடி சென்றால், 2 மணி நேர பயணத்திற்குள் கொல்லிமலையை அடையலாம்.கொல்லிமலை என்பது ஒரு தொடர்ச்சியான மலை என்பதால், ஒரு குறிப்பிட்ட இடம் என்று இல்லாமல் பார்க்க வேண்டிய இடங்கள் பரந்து, விரிந்து உள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் வருகை என்பது மிக, மிகக் குறைவாகவே இருப்பதால், இங்கு வாகன வசதி கிடையாது. பஸ்சில் வந்தால், நிறைய இடங்களை பார்க்க முடியாது. ஆகவே, வாடகை அல்லது சொந்த வாகனங்களில் வருவது நல்லது.இங்கு, பி.எஸ்.என்.எல்., தவிர, வேறு எந்த தொலைபேசி தொடர்பும் தற்போதைக்கு கிடைக்காது என்பதை யும் நினைவில் வைத்துக் கொள்ளவும்.நன்றாக உள்ள கொல்லிமலையை, மாடர்ன் தியேட்டர்ஸ் காலந்தொட்டு, ஏதோ ஒரு அமானுஷ்யம் நிறைந்த, ஆவிகள் உலாவும், மர்ம பிரதேசமாக தப்பாய் சித்தரித்து வருகின்றனர். உண்மையில் அப்படி எல்லாம் எதுவுமில்லை, இது இயற்கை வாங்கி வந்த வரம், அழகின் சிகரம். அமைதி விரும்பிகளுக்கு ஏற்ற நிம்மதியான தேசம். மற்றபடி பேய், பிசாசை எல்லாம் நாம் கூட்டிக்கொண்டு போனால்தான் உண்டு.நல்ல சாப்பாடு கிடைக்கிறது, தங்குவதற்கு சொற்பமான விடுதிகளே உள்ளன.இந்த இடத்தின் அருமையை உணர்ந்து, முன் இங்கிருந்த ஆட்சியாளர்கள், சுந்தரமூர்த்தியும், சகாயமும் இங்கு சுற்றுலாவை மேம்படுத்த செய்த பணிகள் நிறையவே உண்டு. இதை, இங்குள்ள மக்கள் நன்றியுடன் நினைவு கூர்கின்றனர்.***எம்.ஆர்.ஜே.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !