உள்ளூர் செய்திகள்

கோமாதா (நம்) குலமாதா!

ஜன.,15 - மாட்டுப்பொங்கல்கோமாதா எனும் பசு, ரிஷபம் என்னும் காளை ஆகிய இரண்டும், நம் வாழ்வோடு, ஒன்றிப் போனவை. இன்று, உழவுக்கு இயந்திரங்கள் வந்திருந்தாலும், இன்னும் கிராமப் புறங்களில் சில இடங்களில் காளைகள் தான் வயலை உழுகின்றன.பிறந்த குழந்தை முதல், வயதாகி உயிர் விடும் நேரத்திலும், பால் நம் வாழ்வோடும், உயிரோடும் ஐக்கியமாகியுள்ளது. இப்படி, நம் வாழ்வின் ஆதி முதல் அந்தம் வரை, வாழ்வோடு ஒன்றிப் போனது பசு. இவற்றை, நன்றியோடு நினைவு கூர்ந்து, அவற்றுக்குரிய மரியாதையை செலுத்தும் நாள் தான், மாட்டுப் பொங்கல்.இந்நாளில், காளைகள் மற்றும் பசுக்களின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி, பொங்கல் வைத்து, அவற்றிற்கு படைத்து வணங்குவதுடன், அன்று ஒருநாள், அந்த ஜீவன்களுக்கு ஓய்வு கொடுக்கிறோம்.பசுக்களின் உடலில், முப்பத்து முக்கோடி தேவர்களும் வசிப்பதாக ஐதீகம். இதனால் தான், கிரகப்பிரவேசம் நடத்தும் போது, பசுவை நம் வீட்டுக்கு அழைத்து வருகிறோம்; பசும்பால் காய்ச்சி, சர்க்கரை இட்டு விருந்தினருக்கு கொடுக்கிறோம். மேலும், பசுஞ்சாணம், கோமியம் உள்ளிட்ட பொருட்களால், வீட்டை சுத்தம் செய்கிறோம்.மாட்டுப்பொங்கலை, மாலையில் இடுவது தான் மரபு. வாசலில், பலகை இட்டு, அதன் மேல் வாழை இலை விரித்து, அதில், நெல், பச்சரிசி, வெல்லம், கரும்புத்துண்டு, மஞ்சள் கிழங்கு, பனங்கிழங்கு, வாழைப்பழம் வைக்க வேண்டும். சாணம் மற்றும் செம்மண்ணை, தனித்தனியாக கைப்பிடி அளவு பிடித்து, ஒன்றை பிள்ளையாராகவும், மற்றொன்றை அம்மனாகவும் கருதி, இலை ஓரத்தில் வைக்க வேண்டும்.பின், இலை முன் பொங்கல் பானையை வைத்து, மாடுகளையும், கன்றுகளையும் தெய்வப்பசுக்களான காமதேனு மற்றும் நந்தினியாக கருதி, தீபாராதனை காட்டி, பொங்கலை, மாடு, கன்றுகளுக்கு உண்ண கொடுக்க வேண்டும். பின், பிறருக்கு இடையூறு ஏற்படாத வகையில், மாடுகளை உலா வரச் செய்ய வேண்டும்.வீடுகளில், மாடு இல்லாதவர்கள், அருகில் தென்படும் மாடுகளுக்கு அகத்திக்கீரை, பழம் கொடுத்து வணங்கலாம்.பசுக்களை பாதுகாக்காத நாடு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போகும் என்பது மகான்களின் கருத்து. புயல், மழை என, பல இயற்கை இடர்களை சந்திக்க காரணமே, பசுக்களை பாதுகாக்காததன் விளைவு தான்.இதை, 'கோ சம்ப்ரசஷணம்' என்று காஞ்சி மகாபெரியவர் குறிப்பிட்டு, 'நீங்கள் வேறு ஒன்றும் செய்ய வேண்டாம்; அன்றாடம், சமைக்கும் போது வீணாகும் காய்கறி கழிவுகளை சேகரித்து, மாடுகளுக்கு கொடுங்கள்; பெருத்த புண்ணியம்...' என்கிறார்.வாயில்லா ஜீவன்களை ஆதரித்தால், நம் வாழ்வு மலரும். எதிர்கால சந்ததி, மகிழ்ச்சியுடன் வாழும். இதை மனதில் வைத்து, மாட்டுப்பொங்கலை, மகிழ்வுடன் கொண்டாடுவோம்!தி.செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !