வாய் விட்டு சிரிக்க...
ஒருவர், ஒரு கிலோ மைசூர் பாகு வாங்க, பலகார கடைக்கு போனார். 'மைசூர்பாகு இன்னைக்கு போட்டது தானே?''ஆமாங்க. இன்னைக்கு போட்டது தான். நீங்க சந்தேகப்படக் கூடாதுன்னு தான், ஒவ்வொரு மைசூர்பாகிலேயும் இன்னைய தேதியை முத்திரை குத்தியிருக்கோம்...''பரவாயில்லையே. இவ்வளவு நேர்மையா வியாபாரம் பண்றீங்களே, ரொம்ப சிரமமாச்சே...''ஆமாங்க, முத்திரை குத்தி முடிக்கிறதுக்கே மூணு நாளாயிடுச்சு...'பேய் கதைகளை பரப்பி, தேவையில்லாத அச்சத்தை உருவாக்குவதே சிலருக்கு வாடிக்கை. பெற்றோர், பிள்ளைகளை மிரட்ட, இந்த வித்தையை அடிக்கடி கையாளுவர். ஆனால், இந்த கால பிள்ளைகள், அதையெல்லாம் நம்பி ஏமாறுவதில்லை.பலகாரம் வைத்திருக்கும் அறையில் பேய் இருப்பதாக சொல்லி, பிள்ளை அங்கு போகாமல் தடுக்க நினைத்தாள், அம்மா. அப்படியும் மறுநாள் பலகாரம் குறைவதை கவனித்து, பையனிடம் விசாரித்தாள். 'நான் அங்கு போனது உண்மை. ஆனால், அந்த நேரம், பலகாரங்களை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது, பேய்...' என்று ஒரு போடு போட்டு, ஓடி விட்டான், பையன்.இப்ப உள்ள பையன்கள் ரொம்ப விபரமானவர்கள். ஒரு பையன் திடீர்ன்னு, 'அம்மா, நான் எப்படி நம் வீட்டுக்கு வந்தேன்...' என்று கேட்டான்.நேரடியா இதுக்கு பதில் சொல்ல முடியாத அந்த அம்மா, 'காக்கா எடுத்து வந்து போட்டுச்சு...'ன்னாங்க.'தம்பி எப்படி வந்தான்...''கொக்கு எடுத்து வந்து போட்டுச்சு...''அப்போ, கல்யாணத்துக்கு முந்தியே, நீயும், அப்பாவும் குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் பண்ணிக் கிட்டீங்களா...'ன்னான்.பையனோட நெத்தியடி கேள்வியிலே நிலைகுலைஞ்சு போயிட்டாங்க, அந்த அம்மா.ஒரு வீட்டில், கணவனை பார்த்து, 'நாலு வேளைக்கு வர்ற மாதிரி புளியோதரை தயார் பண்ணியாச்சு. இட்லி பார்சல் தயார். பிளாஸ்க்கில் காபி எடுத்து வச்சுட்டேன். அது காலியானதும், திரும்பவும் ஓட்டலில் வாங்கி நிரப்பிக்கலாம்...' என்றார், மனைவி.'எந்த கோவிலுக்கு போறோம்...' என்றார், கணவர்.'கோவிலுக்கா... என்ன மறந்துட்டீங்களா, தீபாவளிக்கு புடவை எடுக்க, ஜவுளி கடைக்கு போகணும்ன்னு சொல்லியிருந்தேனே...' என்றார், மனைவி.ஒரு ஜவுளிக்கடையின் அறிவிப்பு பலகையில்:'புடவை எடுக்க வந்திருக்கிறவர்கள், தயவு செய்து நாள் முழுவதும் தங்க வேண்டாம். புதிதாக வருகிறவர்களுக்கு வாய்ப்பளிக்கவும்!'இந்த பிரச்னையை தீர்க்க, இன்னொரு ஜவுளிக் கடையில்: 'எங்கள் ஜவுளிக் கடை மேலே, லாட்ஜ் வசதி உள்ளது. எவ்வளவு நாட்களானாலும் தங்கி புடவை எடுக்கலாம்...' என்று எழுதி வைத்திருந்தனர்.இளசை சுந்தரம்