உள்ளூர் செய்திகள்

பாடம்!

சந்தோஷத்தில், ''அப்பா அப்பா...'' என்று, ஓடி வந்தான், அருண்.வாசலில் பழைய பேப்பர்களை, எடைக்கு போட்டுக் கொண்டிருந்த மூர்த்தி, ''என்னப்பா?'' என்றார்.''பேங்க்லேர்ந்து, 'லோன்' சம்பந்தமா பேசினாங்க. நம் சுயதொழில் கடன், 'சாங்ஷன்' ஆயிடுச்சாம். இன்னிக்கே வரச் சொன்னாங்க,'' என்றான், அருண்.''அப்படியாப்பா?'' என்று, மகிழ்ந்தார்.''இவ்வளவு சீக்கிரமா, 'பிராசஸ்' ஆகும்ன்னு நான் எதிர்பார்க்கலப்பா. ரொம்ப ஆச்சரியமா இருக்கு. 10:00 மணிக்கு போகலாமா?'' என்றான், அருண்.''நானும் எதிர்பாக்கல, அருண். இத்தனைக்கும் நமக்கு சிபாரிசு எதுவும் இல்லை. புதுசா தொழில்ல இறங்கப் போகிற புது தலைமுறை வேற. ஆயிரம் கேள்வி கேட்டு, ஆறு மாசம் இழுத்தடிப்பாங்கன்னு நினைச்சேன். இவ்வளவு குறுகிய காலத்தில், 'சாங்ஷன்' பண்றாங்கன்னா ரொம்ப நல்ல விஷயம்,'' என்றார், மூர்த்தி.''ஆமாம்பா... 'செக்லிஸ்ட்' கொடுத்திருக்காங்க. எல்லாத்தையும் எடுத்து வெச்சுகிட்டு நாம கிளம்பலாம்பா?'' என்று, விரைந்தான்.''என்னங்க... இப்படி சிட்டுக்குருவி மாதிரி பறக்கிறான். நேற்று வரை ஈரத்துணியாட்டம் அறையில சுருண்டு கிடந்தான்,'' என்று கரகரத்தாள், அருணின் அம்மா, சரோஜா.''ஆமாம் சரோஜா... 10 லட்சம் ரூபாய் கடன், 10 லட்சம் ரூபாய் மானியம்ங்கிறது சின்ன விஷயமா? மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கணும், கார் உதிரி பாகங்கள் தயாரிக்கணும்ங்கிறது அவனுடைய கனவு.''பிளஸ் 2லேர்ந்து இதை சொல்லிக்கிட்டே இருப்பான். 'நீ, கார் கம்பெனியில வேலைக்குப் போடா'ன்னு சொல்லுவே,'' என்றார், மூர்த்தி.''ஆமாம். ஆனால், அவன், நான் சொன்னதை பெரிசா எடுத்துக்கிட்டதே இல்ல. உங்க 'சப்போர்ட்'தான் முழுசா இருக்கே. அந்த தைரியம்,'' என்றாள், சரோஜா.''உண்மை தான். அருண் எல்லாரையும் போல இல்லை. நல்ல படிப்பாளி. எதையும் ஆழமா யோசிச்சு செய்வான். படிக்கும்போது கூட மனப்பாடம் செய்ய மாட்டான். புரிஞ்சுகிட்டு எழுதுவான். அதனால தான், அவன் சொன்னதை எல்லாம் சரின்னு ஏத்துகிட்டேன்.''சின்ன சின்ன கம்பெனிகள்ல சேர்ந்து அனுபவம் அடையறது, சப்ளையர்கள் பத்தி தெரிந்து கொள்வது, ஆட்டோமொபைல் துறையில புதுசா என்ன வருது... இப்படி, அவன் இந்த ஆறு ஆண்டுகளில் நிறைய கத்துகிட்டான். அந்த நம்பிக்கை தான்,'' என்றார், மூர்த்தி.''இருந்தாலும், இதெல்லாம் பெரிய தொகை இல்லீங்களா? வேலைன்னா சம்பளம் கியாரண்டியா வந்துடும். சொந்த, 'பிசினஸ்'னா, அப்படி நிச்சயம் எதுவும் கிடையாது. அயராம உழைக்கணும், அலையணும். நாம நடுத்தரக் குடும்பம். பயமா இருக்குங்க,'' என்றாள், சரோஜா. ''பயப்படாதே சரோஜா... எல்லாம் நல்லபடியா நடக்கும்,'' என்றார்.வங்கி வேலை முடிய, இரண்டு மணி நேரம் ஆனது. ஆரம்பம் முதல் உதவியாக இருந்த அதிகாரிகள், ஊழியர்களுக்கு நன்றி சொல்லி, அவர்கள் கிளம்பினர்.''சைட்ல போய் ஒரு தடவை பார்க்கிறேன், அப்பா. திறப்பு விழாவுக்கு இன்னும், 10 நாள் இருக்குன்னாலும், 'ப்ளான்ட்' அமைக்கிறதுக்கு அது போதுமான்னு தெரியல,'' என்று சொல்லி, வீட்டு வாசலில் அப்பாவை இறக்கி விட்டான், அருண்.''சரிப்பா... பத்திரமா போயிட்டு வா,'' என்றார்.வாழை இலையில், வடையும், பாயசமும் சுண்டி இழுத்தன. கொஞ்சம் கவலையுடன் பரிமாறிய சரோஜாவைப் பார்த்து, ''கவலைப்படாத... இனிமேல் எல்லாம் நல்ல காலம் தான்,'' என்று சொல்லி சிரித்து, அவர் மதிய உறக்கத்திற்குப் போனார்.எழுந்தபோது, வெளியில் சூழலே தலைகீழாக மாறியிருந்தது. சுட்டெரிக்கும் சூரியனை அப்புறப்படுத்தி விட்டு கருமேகங்கள் வான் முழுக்க பந்தல் அமைத்திருந்தன.அருண் இன்னும் வரவில்லை.'என்ன ஆனது... இன்னும் அவன் சாப்பிடவில்லையே?'அவனை மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது, அது அணைந்திருந்தது.''சரோஜா... அருண், இன்னுமா வரல?'' என்று, குரல் கொடுத்தார்.''ஆமாங்க, பேட்டரி சார்ஜ் தீர்ந்து போச்சாம். வர, 7:00 மணி ஆகும்ன்னு போன்ல சொன்னான்.''''என்ன, 7:00 மணியா... எங்கே போயிருக்கான்?''''நண்பர்களைப் பார்க்க. 'அப்பாகிட்ட, பகல் சாப்பாடு நண்பர்களோட சாப்பிட்டேன்'னு சொல்லச் சொன்னான்.'''அப்படியா? யாரு கதிர், வேணுகோபால் ரெண்டு பேரையும் பார்க்க போயிருக்கானா? இருக்கும் இருக்கும்...' என்று, தனக்குள் சொல்லிக் கொண்டார்.''ரெண்டு பேரும் நல்ல சூட்டிகையான ஆளுங்க. கதிர், மார்க்கெட் இடத்தில், கார் ஷோரூம் வெச்சு வெற்றிகரமா இருக்கான். வேணுகோபால், ஒரகடத்துல, 'டன்லப்' ஏஜென்சி எடுத்து வேகமா முன்னேறிகிட்டு இருக்கான். நல்லது, போய் பார்த்துட்டு வரட்டும்,'' என்றார். காபியைக் கொடுத்தபடி, ''இல்லீங்க. அவன், அவங்களைப் பார்க்கப் போகல. தியாகு, பழனி ரெண்டு பேரையும் பார்த்துட்டு வரேன்னு சொன்னான்,'' என்றாள், சரோஜா.''என்ன சொல்ற?'' என்று பதறியவரின் நெஞ்சு, படபடத்தது.தியாகுவும், பழனியும் தோற்றுப் போனவர்கள். இதே வேகத்துடனும் இதே ஆர்வத்துடனும் ஆட்டோ, மினி லாரி என்று தொழில் ஆரம்பித்தனர். இரண்டே ஆண்டுகளில் சரிவை சந்தித்து, வாங்கிய கடனைக் கட்ட முடியாமல், வாடிக்கையாளர்களையும் திருப்திப்படுத்த முடியாமல், தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு, வீட்டில் சுருண்டனர்.'அவர்களையா பார்க்கப் போயிருக்கிறான், அருண்? அய்யோ, இது சரியில்லையே...' என, நினைத்துக் கொண்டார். வாசலில் பைக் வந்து நின்றது.''என்னப்பா, காபிய குடிக்காம வெச்சிருக்கீங்க? கொடுங்க, நான் சூடு பண்ணிக் கொண்டு வரேன்,'' என்று புன்னகைத்தான், அருண்.''ஏம்பா, அந்த தோத்தாங்குளி பசங்களையா பார்த்துட்டு வரே. எதையும் சரியா பண்ணத் தெரியாம தோற்றுப் போய், வீட்டில் முடங்கிக் கிடக்கிறாங்க. அவங்களையா போய் பார்க்கணும் நீ?''''உண்மை தான், அப்பா. வெற்றி பெற்றவன் மகிழ்ச்சி அடைகிறான் தான். ஆனால், தான் எப்படி வெற்றி பெற்றோம் என்று அவனுக்கு சரியாகச் சொல்லத் தெரியாது. ஆனால், தோற்றவனுக்கு தான் ஏன் தோற்றோம், எந்த இடத்தில் தோற்றோம், எந்த கவனக் குறைவால் தோற்றோம்ன்னு தெளிவாகத் தெரியும்.''செய்யக் கூடாத எதைச் செய்தோம் என்ற கள நிலவரம் தெரியும். தியாகு, சரியான பணியாட்களை வைக்கவில்லை, அங்கீகரிக்கப்பட்ட கம்பெனி பொருட்களை வாங்கவில்லை.''விளம்பரம் மிக அதிகமாக செய்து, நிறைவான சேவை கொடுக்க முடியாமல் தடுமாறி தோற்று விட்டான், பழனி. இதை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு தொழிலில் இறங்கு என்று அவர்கள் கூறினர்.''எனக்கு நல்ல அனுபவ பாடமாக இருக்கு. அவர்களை, ஆலோசகர்களாக வைத்துக் கொண்டு, என்னையும் வளர்த்து, அவர்களுக்கும் உதவுவேன், அப்பா. சரிதானே?'' என்றான்.மகன் பேசப் பேச, அவர் மலைத்துப் போனார். விழிகளில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. வி. உஷா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !