உள்ளூர் செய்திகள்

அன்பு நிலைக்கட்டும்!

அக்., 2 நவராத்திரி ஆரம்பம்அம்பாளை, முப்பெரும் தேவியராகக் கருதி வழிபடும் விழாவே நவராத்திரி. இது, பெண்களுக்கான விழா.கல்வி, செல்வம் மற்றும் ஆற்றல் எனும் முப்பெரும் சக்திகளையும், முப்பெரும் தேவியராக காட்டுகின்றன, நம் புராணங்கள். இவர்கள், நம் இல்லத்தில் நிலைத்திருக்க, பெண்களின் பங்களிப்பு முக்கியமானது.குடும்பத்தலைவர் பணிக்கு செல்கிறார், தொழில் செய்து, சம்பாதிக்கிறார்; ஆனால், அவரது சம்பாத்தியத்தை, நிர்வாகம் செய்வதில் பெரும் பங்கு, இல்லத்தரசிகளுக்கே இருக்கிறது. பொருளாதார ரீதியாக மட்டுமின்றி, குடும்பத்தின் பெரும்பங்கு பிரச்னைகளை, பெண்களே சுமக்கின்றனர். இதனால், அவர்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில், நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.மிகுந்த செல்வச் செழிப்பு மிக்க பணக்காரர் ஒருவரின் கனவில் வந்த லட்சுமி தாயார், 'மகனே... நீ செய்த பூர்வ புண்ணியம் காரணமகவே, இதுவரை உன் வீட்டில் தங்கினேன். அந்த புண்ணியம் தீர்ந்து விட்டது; எனவே, நான், இவ்வீட்டை விட்டுப் போகிறேன்; என்னை வழியனுப்பிவை. அதற்கு முன்னதாக, நாளை மாலை உனக்கு நான் காட்சியளிப்பேன்; அப்போது நீ விரும்பும் வரத்தைக் கேட்கலாம்...' என்றாள்.தூக்கத்திலிருந்து விழித்த பணக்காரர், இக்கனவைப் பற்றி, மனைவி, இரு மகன்கள், மருமகள்களிடம் கூறினார். உடனே, பணக்காரரின் மனைவி, 'லட்சுமி தேவி வரம் தருவதாக கூறியிருக்கிறாள் அல்லவா... நீங்கள், 1,000 கிலோ தங்கம் கேளுங்கள்...' என்றாள். மூத்த மகனோ, 'தங்கம் மட்டும் போதாது; வைரம், வைடூரியமும் கேளுங்கள்...' என்றான். இளைய மகன், 'அப்பா... காலம் முழுவதும் சாப்பாட்டுக்கு பிரச்னை வரக்கூடாது என்று கேட்டு விடுங்கள்; அதற்குத் தானே இந்தப் பாடுபடுகிறோம்...' என்றான்.அப்போது, இளைய மருமகள், 'மாமா... அவர்கள் சொல்வது எல்லாம், தற்காலிக இன்பத்தையே தரும்; மேலும், லட்சுமி சென்று விட்டால், இவையாவும் அவளோடு போய்விடும். அதனால், இக்குடும்பத்தில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் என்றும் அன்பு மாறாமல், ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருக்க வேண்டும்; ஒற்றுமையாக திகழ வேண்டும் எனக் கேளுங்கள். குடும்ப ஒற்றுமை இருந்தால், எவ்வளவு பெரிய கஷ்டத்தையும் சமாளித்து விடலாம்...' என்று யோசனை சொன்னாள்.பணக்காரருக்கும் அதுவே சரியென்று பட்டது. மறுநாள் லட்சுமியிடம், சின்ன மருமகள் சொன்னபடியே வரம் கேட்டார்.உடனே, லட்சுமிதாயார், 'செல்வந்தனே... இந்த வரத்தை கேட்டதன் மூலம், நீ, என்னை இங்கேயே கட்டிப் போட்டு விட்டாய். அன்பிருக்கும் இடத்தை விட்டு, என்னால் அசைய முடியாது; அதனால், அங்கே செல்வமும் நிலைத்திருக்கும்; செல்வம் உள்ளவர்கள் முயற்சித்தால், கல்வி கை கூடும்; கல்வியும், செல்வமும் மனிதனுக்கு பெரும் ஆற்றலை கொடுக்கும். ஆக, கலைமகளும், மலைமகளும் என்னோடு வாசம் செய்வர்...' என்று சொல்லி மறைந்தாள்.நம் வீட்டிலும் அன்பும், செல்வமும் நிலைத்திருக்க, முப்பெரும் தேவியரை வணங்குவோம்!தி.செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !