உள்ளூர் செய்திகள்

நல்லதே செய்வோம்!

'அவர், அதை செய்யவில்லை; இவர், இதை செய்யவில்லை...' என்று பலரும், பலரையும் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். சற்று யோசித்துப் பார்த்தால்... இதற்கு, திருச்சியில் விளக்கம் கிடைக்கும் போல் தெரிகிறது. திருச்சி மலைக்கோட்டையில், மவுன சுவாமிகள் மடத்தை, 18ம் நுாற்றாண்டின் பிற்பகுதியில், வைத்தியலிங்க தம்பிரான் என்பவர் நிர்வகித்து வந்தார். அக்காலத்தில், தாயுமான சுவாமிகளுக்கென்று பல அறக்கட்டளைகள் இருந்தன. அவற்றையும், தம்பிரானே நிர்வாகம் செய்து வந்தார்.அக்காலத்தில், புதுக்கோட்டை மன்னராக விளங்கிய தொண்டைமான், தாயுமான சுவாமிகளுக்கென்று ஓர் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தார். நாள்தோறும், சுவாமிக்கு, சுத்தமான சாதம், நைவேத்தியம் செய்யப்பட்டு, ஆளுக்கு இரண்டு பட்டை சாதங்களாக, தேசாந்திரிகளுக்கு வழங்கப்படுவது வழக்கம்.அந்த பட்டை சாதங்களை வாங்கி உண்பவர்கள், குழம்பு, பொரியல் என வேறு எதுவும் இல்லாமல், வெறும் சாதத்தை மட்டும் உண்டு செல்ல வேண்டிய நிலை; வேறு வழியற்ற நிலையில், அதை உண்டு, திருப்தி இல்லாமலே சென்றனர், தேசாந்திரிகள்.இதை அறிந்த தம்பிரான், அவசரமாக ஓர் ஏற்பாடு செய்தார். 'தொண்டைமான் சத்திரம்' எனும் பெயரில், தானே ஒரு சத்திரம் கட்டி, நான்கு விதமான பொரியல் வகைகள், பருப்பு, வடை, பாயசம், நெய் மற்றும் தயிர் என சுவாமிக்கு நைவேத்தியம் செய்து, நாள்தோறும், 12 பேருக்கு சாப்பாடு போட்டார்.அது மட்டுமல்ல, 'இது, புதுக்கோட்டை மன்னர் தொண்டைமான் தர்மம்... மனதார அவரை வாழ்த்திச் செல்லுங்கள்...' என்று சொல்லவும் செய்தார். உண்டவர்களும், உளமாற தொண்டைமானை பாராட்டி சென்றனர். அவர்களின் பாராட்டு, மன்னரை எட்டியது. ஆம்... தகவல் அறிந்து, ஆச்சரியப்பட்டார், புதுக்கோட்டை மன்னர்.'என்ன இது... ஆச்சரியமாக இருக்கிறதே... 12 பேருக்கும், ஆளுக்கு, இரண்டு பட்டை சாதம், அதுவும் வெறும் அன்னம் மட்டும் தான் ஏற்பாடு செய்திருந்தோம்...' என்று நினைத்தார், மன்னர்.சில நாட்களில், திருச்சியில் இருந்து சுப்பிரமணியப் பிள்ளை என்பவர், புதுக்கோட்டை மன்னரை காண வந்தார்.அவருக்கு, திருச்சி தகவல்கள் நன்றாகவே தெரியும்.அதனால், அவரிடம், 'தொண்டைமான் சத்திரம் என்ற பெயரில், திருச்சியில் எந்தவொரு சத்திரத்தையும் ஏற்பாடு செய்யவில்லை. இருந்தாலும், என் பெயரை சொல்லி, நாள்தோறும், வடை, பாயசத்துடன், 12 பேர்களுக்கு உணவு இடப்படுகிறதாமே! எப்படி...' என, கேட்டார்.'மன்னா... ஏற்பாடுகள் எல்லாம், மவுன சுவாமிகள் மடம் வைத்தியலிங்க தம்பிரான் தான் செய்கிறார். ஆனால், உங்கள் ஏற்பாடு என்றே சொல்லி செய்து வருகிறார்...' என்றார், வந்தவர்.மன்னரின் வியப்பு அதிகமானது.'தனக்கு வரவேண்டிய புகழை, மற்றொருவருக்கு விட்டுக் கொடுப்பதென்றால், அவர் எவ்வளவு பெரியவராக இருக்க வேண்டும்...' என்று வாய்விட்டு சொன்ன மன்னர், அந்த தர்மம் தொடர்ந்து நடைபெற, தொண்டைமான் சத்திரத்திற்கு, சில கிராமங்களை எழுதி வைத்தார்.அடுத்தவர்களை எதிர்பார்க்காமல், பேருக்கும், புகழுக்கும் ஆசைப்படாமல், ஒருவர் செய்யும் நற்காரியம், நன்மைகளையே விளைவிக்கும் என்பதை விளக்கும், வரலாற்று நிகழ்வு இது. முடிந்த வரை நல்லதை செய்வோம்; முன்னேற்றம் தேடி வரும்! பி.என்.பரசுராமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !