கற்போம்... தெளிவு பெறுவோம்!
வாழ்க்கையில், நாம் செய்யும் ஒவ்வொரு கடமைக்கும் ஒரு வயது உள்ளது; ஆனால், கற்பதற்கு மட்டும் வயதோ, சூழலோ எதுவுமில்லை. ராமநாதபுரத்தில் வசித்து வந்தார், ராமானுஜன் என்பவர். கல்வியறிவு அற்றவர்; ஒருசமயம், அறிஞர்கள் கூடி விவாதித்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்த ராமானுஜன், தன் கருத்தாக ஏதோ ஒன்றை சொல்லப் போக, அனைவரும் சிரித்து, 'இது, படிச்சவங்க விவாதம் நடத்தற இடம்; இங்கெல்லாம், நீ பேசப்படாது. உன்னை மாதிரி முட்டாள்கள் கூடின சபையில வேணா நீ பேசலாம்...' என்றனர், ஏளனமாக!அதனால், சோமசுந்தரக் கவிராயர் எனும் அறிஞரிடம் சென்று, தனக்குக் கல்வி கற்பிக்குமாறு வேண்டினார், ராமானுஜன். அவரோ, 40 வயது கடந்த ராமானுஜருக்கு கல்வி கற்பிக்க மறுத்தார். ஆனாலும், தன் கல்வி ஆர்வத்தை பலவாறு வெளிப்படுத்தி, சம்மதிக்க வைத்தார்.'இவருக்குத்தான் கல்வியில் எவ்வளவு ஆர்வம்...' என்று வியந்து, 'நிகண்டு, நன்னுால்' முதலான நுால்களைக் கற்பித்தார், சோமசுந்தரக் கவிராயர். நுால்கள் பலவற்றையும் படித்து, தேர்ச்சி பெற்ற ராமானுஜன், தீவிர உபாசனையால், கலைமகளை தரிசித்து, அருள்பெற்று, கல்விமானாக விளங்கினார்.பின், சென்னை வந்து, ஞானிகள் மற்றும் இசைவாணர்கள் பலரையும் வெளிப்படுத்திய வடசென்னை, வண்ணாரப்பேட்டையில் தங்கினார்.அங்கிருந்த பிள்ளையார் கோவில் ஒன்றில் அனுமாரையும் வைத்து, அக்கோவிலுக்கு 'சஞ்ஜீவி ராயன் கோவில்' என, பெயரிட்டார்; அன்று முதல், அக்கோவில், சஞ்ஜீவிராயன் கோவில் என வழங்கப்பட்டது. அக்கோவில் இருக்கும் வீதி, 'சஞ்ஜீவிராயன் கோவில் தெரு' எனவும் அழைக்கப்பட்டது.தன் கடைசி காலம் வரை, நாள் தோறும் இத்திருக்கோவிலுக்குச் சென்று, ஐங்கரனையும் - ஆஞ்சநேயரையும் வழிபடுவதை, வழக்கமாக வைத்திருந்தார், ராமானுஜன்.ராமானுஜனின் கல்விப்பெருமை எங்கும் பரவ, மாணவர்கள் பலர் வந்து இவரிடம், தமிழ் கற்றனர். அவர்களில், ஜி.யு.போப்பையர், அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார், மழவை மகாலிங்கையர் முதலானோரும் உண்டு!'ராமானுஜ கவிராயர்' என, பெரும்புகழ் பெற்று விளங்கிய ராமானுஜன் நன்னுாலுக்கு எழுதிய உரை, அபூர்வமான மேற்கோள்களுடன், பெரும் அறிஞர்களால், இன்று வரை பாராட்டப்படுகிறது. ஆங்கிலேயர்கள், ஆங்கில - தமிழ் அகராதி ஒன்றைத் தொகுத்தபோது, உடனிருந்து பெரும் உதவி செய்தவர், ராமானுஜ கவிராயர்-.கல்வி கற்க வயது ஒரு தடையில்லை; விடாமுயற்சி வேண்டும் என்பதை விளக்கும் வரலாற்று நிகழ்ச்சி இது! பி.என்.பரசுராமன்அறிவோம் ஆன்மிகம்!ஆலயத்தின் எந்த திசையில் விழுந்து வணங்குவது நல்லது?கிழக்கு, மேற்கு நோக்கிய சன்னிதிகளில், வடக்கே தலை வைத்தும்; தெற்கு, வடக்கு நோக்கிய சன்னிதிகளில், கிழக்கே தலை வைத்தும் வணங்க வேண்டும்.'நாம் கால் நீட்டும் பின்புறத்தில் எந்த சன்னிதியும் இருத்தல் கூடாது; கொடி மரத்தின் முன் விழுந்து வணங்கினால், அங்கு, எந்த தெய்வ சன்னிதியும் இருக்காது. எனவே தான், இங்கு மட்டுமே விழுந்து வணங்க வேண்டும்...' என்று வகுத்துள்ளனர், நம் முன்னோர்.