உள்ளூர் செய்திகள்

உயிரே உனக்காக! (19)

இதுவரை: ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி நகருக்கு, நடன நிகழ்ச்சிக்காக சென்றிருந் தாள் மதுரிமா. அங்கிருந்து, நரேனுக்கு போன் செய்தாள். தான், கவிதா வீட்டிற்கு சென்றதையும், அங்கு, அவளது மாஜி கணவன் ஆண்டர்சனை சந்தித்தது பற்றியும் கூறினான் நரேன். இது, மதுரிமாவிற்கு குழப்பத்தை அளித்தது. அதனால், நடக்க இருந்த இரண்டு நாட்டிய நிகழ்ச்சிகளையும் ரத்து செய்யப் போவதாக, தன் தாயிடம் கூறினாள் —உண்மையிலேயே மதுரிமா சொன்னதைக் கேட்டு, அவள் தாய் அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தாள். அவளது வார்த்தைகள், அவள் தாயின் காதில் இன்னமும் ஒலித்துக் கொண்டே இருந்தன...— 'நோ மோர் புரோகிராம்... ரெண்டு நிகழ்ச்சிதானே... ரெண்டையும் கேன்சல் பண்ணிடலாம்; உடனே, அமெரிக்கா திரும்பியாகணும்!'மதுரிமாவின் இத்தனை வருட நாட்டிய அனுபவத்தில், இதுவரை நடக்காத ஒன்று இது. இப்படி தடாலடியாக, தான் ஒப்புக் கொண்ட எந்த நிகழ்ச்சியையும் இதுவரை கேன்சல் செய்ததில்லை.இப்போது, இவளுக்கு என்னவாயிற்று... எதற்காக இப்படி ஒரு முடிவு?மதுரிமாவின் திருமணத்திற்கு முன் நடந்த ஒரு விஷயம், அவள் தாயின் நினைவில் வந்தது.மாலை, 6 மணிக்கு, மதுரிமாவின் கதக் நடனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய நாள் மாலையிலிருந்தே அவளுக்கு லேசான காய்ச்சல் தொடங்கி, மறுநாள் காலையில் அவள் உடல் கனலாகக் கொதித்துக் கொண்டிருந்தது.'இன்னைக்கு புரோகிராமை கேன்சல் பண்ணிடலாம்; நான் வேணும்ன்னா சபா செக்ரட்டரிகிட்ட பேசிப் பார்க்கட்டுமா?''என்னம்மா... புரிஞ்சுதான் பேசறீயா?''அதுக்கில்ல மது... உடம்பு இப்படி கொதிக்குதே!''எல்லாம் சரியாயிடும்... நீ வழக்கமா போடுவியே... கஷாயம். அதை போட்டுக் கொண்டு வா. ரெண்டு வேளை குடிச்சா ஜுரம் போயிடும்!''புரிஞ்சுட்டுப் பேசு மது... உடம்புக்கு முடியாம உன்னால எப்படி ஆட முடியும்?''நீ தான் புரியாமப் பேசற... எந்த ஒரு கலைக்கும் உடம்புங்கறது ரெண்டாம் பட்சம்தான்; மனசுதான் முக்கியம். ஆடியே ஆகணும்கற தெம்பும், தைரியமும் மனசு நிறைய இருக்கும்மா; அது போதும். ஆடி முடிச்சதுக்கப்புறம் நீயே அசந்து நிக்கற மாதிரி ஆடுறேனா, இல்லையான்னு பாரு...'சொல்லிவிட்டு அத்தனை ஜுரத்திலும், அழகாய்ச் சிரித்தது, அவள் தாயின் நினைவில் இப்போதும் பசுமையாக...'லாஸ் ஏஞ்சல்சில் உள்ளூர் நிகழ்ச்சி ஒன்றையே உடல்நலம் சரியில்லாத நேரத்திலும் ரத்து செய்ய மறுத்த மதுரிமா, இப்போது, வெளிநாட்டில் நிகழ்த்தப்படும் இந்த நிகழ்ச்சியை, இத்தனை சுலபமாக கேன்சல் பண்ணச் சொல்கிறாள் என்றால்... அவளுக்கு மனம் சரியில்லை என்று தானே அர்த்தம். திடீரென்று, என் மகளின் மனம் சரியில்லாமல் போகும் அளவிற்கு என்ன நடந்துவிட்டது!'''மது... உன் மனசுக்குள் எதையோ நெனச்சு குழம்பற மாதிரி தோணுது. என்ன நடந்தது?''அம்மாவின் கேள்விக்கு உடனே பதில் கூறவில்லை; ஏதோ யோசனையில் மவுனமாக இருந்தாள்.''சொல்லு மது... மாப்பிள்ளை கிட்டேயிருந்து ஏதாவது போன்?''அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. தன் மனக் குழப்பத்திற்கு, தன்னுடைய கணவன்தான் காரணமாய் இருக்கக்கூடும் என்று, எப்படி இந்த அம்மாவால் தீர்மானிக்க முடிகிறது?'சோ... என் விஷயத்தில் மட்டுமல்ல... பெரும்பாலானப் பெண்களின் பிரச்னையே அவர்களின் கணவன்மார்கள் தான். இது, பெண்களுக்கு இறைவன் விதித்திருக்கும் பொதுவான சாபமோ?' தன்னோடு சேர்ந்து மற்ற பெண்களுக்காகவும் வருத்தப்பட்டாள்.''ஆமா... போன் செஞ்சார்!''''சரி... என்ன சொன்னார்?''மிகவும் சுலபமாக கேள்வி கேட்டு விட்டாள் அம்மா; ஆனால், அதற்கான பதில் அத்தனை சுலபமாக அம்மாவிடம் சொல்லக் கூடியதா? ஆனாலும், சமாளிப்பதற்காக பேசினாள்...''அம்மா... நான் எந்த குழப்பத்திலும் இல்லை; இப்ப நீதான் எது எதையோ நெனச்சி குழம்புற.''''நான் குழம்பறேனா... என்ன சொல்ற'''' பின்னே என்னவாம்... நான் புரோகிராமை கேன்சல் பண்றதுக்கும், என் புருஷன் எனக்கு போன் பண்றதுக்கும் என்னம்மா சம்பந்தம்? நீ ஏன் ரெண்டையும் முடிச்சுப் போட்டுப் பாக்கற? இதுக்கும், அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.''''சரி... நீ எதுக்காக புரோகிராமை கேன்சல் பண்ற?''''எனக்கு உடம்பு சரியில்லேன்னு வெச்சுக் கோயேன்.''அவள் சொன்ன காரணம் சரியானது அல்ல என்பது அவளுக்கே தெரிந்தது...''உடம்பு சரி இல்லையா... முன் ஒரு தடவை நீ என்ன சொன்னேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா?''''என்ன சொன்னேன்?''''மறந்துட்டியா... 'நாட்டியம் ஆடறத்துக்கு, உடம்பு ரெண்டாம் பட்சம்; மனசுதான் முக்கியம். மனசு சரியா இருந்தா ஆட முடியும்...'ன்னு சொன்னே!''''ஆமா... சொன்னேன்... அதுக்கென்ன இப்போ?''''அதுக்கென்னவா... உனக்கு இப்ப மனசு சரியில்லேன்னு அர்த்தம். சொல்லு... உன் மனசை பாதிக்கற அளவுக்கு இப்ப என்ன நடந்துடுத்து?''தான் சொன்னதை வைத்தே, தன்னை மடக்கப் பார்க்கும் தன் தாயின் சாமர்த்தியத்தை நினைத்துப் பார்த்தாள் அவள்.''இதுவரைல ஒண்ணும் நடக்கல...''''அப்படின்னா... இனிமே ஏதாவது நடக்கும்ன்னு அர்த்தமா?''''எதுவும் நடக்கக் கூடாதுன்னு ஆசை.''''கொஞ்சம் புரியற மாதிரி சொல்லு.''''எனக்கே இன்னும் சரியாப் புரியலம்மா.''அதற்கு மேலும் அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்க விரும்பாதவளாக எழுந்து கொண்டாள்.''அம்மா... நான் கல்சுரல் அகாடமி வரை போய், செக்ரட்டரியைப் பார்த்துட்டு வரேன். நீ நாம அமெரிக்கா திரும்பற ஏற்பாடுகளை கவனி. அநேகமா நாளைக்கு பிளைட்ல நாம் புறப்பட்டுருவோம்.''அம்மாவின் பதிலுக்கு காத்திருக்காமல், வெளியே நடந்தாள் மதுரிமா.போர்ட்டிகோவில் நின்று கொண்டிருந்த காரின் பின் சீட்டில் ஏறி அமர்ந்தாள்.காரில் புறப்பட்டு செல்லும் தன் மகளைப் பார்த்தபடியே, ஒன்றும் புரியாதவளாய் நின்று கொண்டிருந்தாள் மதுரிமாவின் தாய். என்ன நடந்தது என்பது அவள் உள் மனதிற்கு புரியவில்லை. அதே நேரத்தில், ஏதோ நடந்திருப்பது மட்டும் நன்றாகவே புரிந்தது.உள்ளே வந்தவள் சற்று நேரத்திற்கு ஹாலில் குறுக்கும், நெடுக்குமாக நடந்தாள். அவளது தாயுள்ளம் ஓரிடத்தில் நிலை கொள்ளாமல் தவித்தது. மதுரிமாவின் மனதுக்குள் புகுந்து, அவளை சலனப்படுத்திக் கொண்டிருக்கும் விஷயம் எதுவென்பதை உடனே அறிந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வு தோன்ற... அவளது மாப்பிள்ளை நரேனை போனில் தொடர்பு கொண்டாள்.அலுவலகத்தில், வேலையில் மும்முரமாய் இருந்தான் நரேன். வைத்தீஸ்வரன், விடுமுறையில் ஆஸ்திரேலியா சென்று விட்டதால், அவர் பார்க்க வேண்டிய வேலைகளும், அவன் தலையில் விழுந்திருந்தன. நரேனுக்கு, வைத்தீஸ்வரன் மேல் கோபம் கோபமாய் வந்தது. அந்த நேரம், அவனது மொபைல் போன் ஒலிக்க...''ஹலோ... நரேன் ஸ்பீக்கீங்...''மறுமுனையில் மதுரிமாவின் தாய்.கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை நரேன்.''ஆன்ட்டி... நீங்களா? நான் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கல... ரியலி சர்ப்ரைசிங்.''''எப்படி இருக்கீங்க நரேன்?''''ஐ ஆம் பைன்... நீங்க எப்படி இருக்கீங்க? மது என்ன செய்துக்கிட்டு இருக்கா?''''வெளில போயிருக்கா நரேன்.''''வெளிலேயா... எங்கே?''''அவளோட புரோகிராமை கேன்சல் பண்றதுக்கு.''''வாட்... புரோகிராமை கேன்சல் செய்யவா... ஏன்... எதுக்கு?''''நான் கேட்டுப் பார்த்துட்டேன்; சொல்ல மாட்டேங்கறா.'''எதற்காக புரோகிராமை கேன்சல் செய்கிறாள்?' மதுவின் தாய் சொன்ன விஷயம் நரேனை யோசிக்க வைத்தது.''கேன்சல் பண்ணிட்டு, என்ன செய்யப் போறாளாம்?''''உடனே அமெரிக்காவுக்குத் திரும்பணுமாம். துணி மணியெல்லாம், 'பேக்' பண்ணச் சொல்லிட்டு, கல்சுரல் அகாடமிக்குப் போயிருக்கா.''போனில் கடைசியாக அவனிடம், 'தயவு செய்து கவிதாவை மீண்டும் சந்திக்காதீங்க... டிரை டு அவாய்டு ஹர்...' என்று சொல்லி அழுதது, அவன் நினைவுக்கு வந்தது.''ஆன்ட்டி... மது, இந்த முடிவுக்கு வர்றதுக்கு அப்படி என்ன நடந்தது?''மறுபடியும் மதுவின் தாயிடத்தில் ஒரு சின்ன மவுனம்.''ஆன்ட்டி... உங்களத்தான் கேட்கிறேன்... என்ன நடந்தது?''''உங்களோட போன் வந்ததுக்கப்புறம்தான், இந்த முடிவுக்கு வந்திருக்கா நரேன்... அவகிட்ட போன்ல என்ன சொன்னீங்க?''அவளது கேள்விக்கு அவனால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. தாயிடம் சொல்வதற்கு மகளே சங்கடப்பட்ட ஒரு கேள்விக்கான பதிலை, அவனால் மட்டும் சட்டென்று சொல்லிவிட முடியுமா?மவுனமாக இருந்தான்.''எதுவாக இருந்தாலும் சொல்லுங்க... நான் தப்பா எடுத்துக்க மாட்டேன். தைரியமாக சொல்லுங்க... நான் மதுவை சமாதானப் படுத்துறேன்.''''ஆன்ட்டி... நான் எதுவுமே சொல்லல... அவதான் சொன்னா.''''அவதான் சொன்னாளா... என்ன சொன்னா?''''கவிதாவை இனிமே சந்திக்காதீங்க... அவளை அவாய்டு பண்ணுங்கன்னு!''ஏதோ ஒரு உணர்வின் வேகத்திலும், அவசரத்திலும் கவிதாவை பற்றி, மதுரிமா அவனிடம் சொன்னதை, அவள் தாயிடமே சொல்கிறோம் என்பதை மறந்தவனாக, வாய் தவறி சொல்லி விட்டான் நரேன்.''கவிதாவா... யாரு கவிதா?''அவளால் பேச முடியாமல் வார்த்தைகள் அவள் நெஞ்சை அடைப்பதை நரேனால் உணர முடிந்தது. தன் தவறை உணர்ந்த அவனுக்குள், பதற்றம் அதிகரித்தது.''ஆன்ட்டி... நத்திங் சீரியஸ். அந்த கவிதா ஜஸ்ட் ஒரு ஏர்-ஹோஸ்டஸ். நாலஞ்சு தடவை நான் டிராவல் செய்த பிளைட்ல பாத்திருக்கேன். மதுவுக்கும் அவளைத் தெரியும்.''''மதுவுக்கு, கவிதாவைத் தெரியுமா?''''அது வந்து... கவிதாவை, மதுவுக்கு நான்தான் அறிமுகப்படுத்தினேன்.''''நீங்கதான் அறிமுகப்படுத்தினீங்களா... என்னன்னு அறிமுகப்படுத்தினீங்க?''''எனக்கு தெரிஞ்சவங்கன்னு!''''தெரிஞ்சவங்கன்னா... அந்தக் கவிதாவை, உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும் நரேன்?''இந்தக் கேள்வி அவனை கோபப்படுத்தியது. 'இதென்ன இப்படி ஒரு கேள்வி. ஒரு மாமியார், தன் மருமகனிடம் இப்படியா கேள்வி கேட்பது? தன் மகளுக்காக வக்காலத்து வாங்கும் தாய், ஒரு வக்கீல் வடிவில் நின்று, அவனை கோர்ட்டில் நிறுத்தி, குறுக்கு விசாரணை செய்வது போல்... அம்மாவுக்கும், பொண்ணுக்கும் என் மீது இந்த கவிதா விஷயமாக ஒரே மாதிரியான சந்தேகம்...'''சொல்லுங்க நரேன்... கவிதாவை எந்த அளவுக்குத் தெரியும்?''அவள் விடுவதாக இல்லை. அவளது சந்தேகக் கணை, மீண்டும் அவன் மேல் பாய்ந்து, அவனை காயப்படுத்தியது.''ஆன்ட்டி... உங்க பெண்ணோட வாழ்க்கை இம்மியளவும் பாதிக்கப்படாத அளவுக்குத் தெரியும். இந்த விஷயத்தை இத்தோட விடுங்க. தயவு செய்து மதுவோட சேர்ந்து, நீங்களும் பெரிசு பண்ணாதீங்க... ப்ளீஸ்!''போனைத் துண்டித்து விட்டான் நரேன். மதுவின் அம்மாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.'பேசிக் கொண்டிருப்பது மாமியார் என்ற மரியாதை கூட இல்லாமல், எதற்காக போனைத் துண்டிக்க வேண்டும். 'மதுவோட சேர்ந்து நீங்களும் பெரிசு பண்ணாதீங்க!' இதற்கு என்ன அர்த்தம்? இது விஷயமாக மதுவுக்கும், நரேனுக்கும் இடையே ஏதோ பனியுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. மது உடனடியாக அமெரிக்கா புறப்பட வேண்டும் என்றும், நடன நிகழ்ச்சியை ரத்து செய்வதாக சொன்னதிலும் எவ்வித தவறுமில்லை. ஆஸ்திரேலிய நடன நிகழ்ச்சி என்பது பெரிய விஷயம்தான்; ஆனால், மதுரிமாவின் வாழ்க்கை என்பது அதைவிடப் பெரிய விஷயம். யார் இந்த கவிதா? அவள் யாராகவாவது இருந்துவிட்டுப் போகட்டும். கவிதா யார் என்ற கேள்வியைக் காட்டிலும், என் மகளின் வாழ்க்கை, இவளால் என்னவாகப் போகிறது? இதுதான் இப்போதைய கேள்வி. மதுரிமா என்னிடம் கூட சொல்லாமல், இந்த கவிதாவை மனசுக்குள் சுமந்து, என்னவெல்லாம் வேதனைப்பட்டிருப்பாள்...' அமெரிக்காவிற்குத் திரும்பிவிட வேண்டும் என்ற எண்ணம் மதுரிமாவைக் காட்டிலும், அவளுக்குள் அதிகமாகியது.'நேராக அந்த கவிதாவை சந்திக்க வேண்டும்... நீ விளையாட, என் பெண்ணின் வாழ்க்கைதான் கிடைத்ததா? என்று, அவள் நாக்கை பிடுங்கிக் கொண்டு சாகும்படியாக நாலு வார்த்தை கேட்க வேண்டும். மது வந்தவுடன், கவிதாவைப் பற்றி மேலும் விசாரித்துக் தெரிந்து கொள்ள வேண்டும்!'மதுரிமாவிற்காக காத்திருந்தாள்.மாமியாரின் போன் கால், நரேனின் நிம்மதியை அடியோடு அகற்றி, மதுரிமா மீது ஆத்திரம் கொள்ள வைத்திருந்தது.'சே... என்ன பெண் இந்த மதுரிமா... ஒன்றுமில்லாத ஒரு விஷயத்தை, எதற்கு பூதக் கண்ணாடியில் பார்த்து, இத்தனை மிரள்கிறாள். தான் மிரண்டது போதாதென்று, இப்போது அவள் அம்மாவிடம் வேறு சொல்லி, அவளையும் சாமியாட வைத்திருக்கிறாள்!'நரேனுக்குக் கூடவே கவிதாவைப் பற்றிய நினைவும் தோன்றியது.'பாவம் கவிதா. இந்த மதுரிமா எனக்கு வாய்த்ததைப் போலவே, அவளுக்கும் ஆண்டர்சன் வடிவில் ஒரு கணவன். மனிதர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்?'அதற்கு மேல் வேலை பார்க்க விரும்பமில்லாமல், அவனது கேபினிலிருந்து வெளியே வந்தான்.அவனுக்குள் ஏனோ கவிதாவைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது; ஆனால், எதற்காகப் பார்க்க வேண்டும் என்ற கேள்விக்கான பதில் அவனிடத்தில் இல்லை.வாழ்க்கையில் சில நேரங்களில், சில விஷயங்கள் இப்படித்தான் தன்னிச்சையாகவும், அனிச்சையாகவும் நடந்து கொண்டிருக்கின்றன.காரில் ஏறி அமர்ந்து, ஸ்டீரியங்கைப் பிடித்தபடி, 'கவிதா இந்த நேரத்தில் எங்கே இருப்பாள்... வீட்டில் இருப்பாளா அல்லது விமானத்தில் பறந்து கொண்டிருப்பாளா?' என்று, யோசித்தான் நரேன்.கவிதாவை மொபைல் போனில் தொடர்பு கொண்டான்.போன் ஒலிக்கவில்லை. மாறாக, தொலைபேசி நிறுவனத்தின் சேவைப் பிரிவிலிருந்து, யாரோ ஒரு பெண்ணின் அழகான குரல் ஆங்கிலத்தில் ஒலித்தது.'நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நபரின் தொலைபேசி தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது...'கடிகாரத்தைப் பார்த்தான்; மாலை, 5 மணி. 'இந்த நேரத்தில் எதற்காக கவிதா போனை ஸ்விட்ச் ஆப் செய்திருக்கிறாள்? ஒரு வேளை தூங்கிக் கொண்டிருப்பாளோ?' குழப்பமான, யோசனையுடன் அவனது கார் அலுவலகத்தை விட்டு வெளியேறி, கவிதாவின் வீட்டை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்தது.நாளையோ, நாளை மறுநாளோ, ஆஸ்திரேலியாவிலிருந்து, அமெரிக்காவிற்கு மதுரிமா திரும்பிவிடக் கூடும்.'எனவே, இன்றே கவிதாவை சந்தித்து, அவள் கணவன் ஆண்டர்சனைப் பற்றித் தன்னிடம் கொட்டித் தீர்த்ததைப் போல, நானும் கவிதாவிடம், மதுரிமா பற்றியும், அவள் அம்மா பற்றியும் முன் கூட்டியே சொல்லி வைப்பது நல்லது!'நரேனின் கார், கலிபோர்னியாவின் சிமென்ட் சாலையில் வேகமாக சென்று கொண்டிருக்க, அவன் மொபைல் போன் ஒலித்தது.போனை எடுத்துப் பார்த்தான்; கவிதாவின் நம்பர்!''கவிதா... குட் ஈவினிங்... வேர் ஆர் யூ நவ்?''அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல், கவிதா விசும்புவதைப் போல் நரேனின் காதில் ஒலித்தது.''கவிதா... ஆர் யூ க்ரையிங்? வாட் ஹேப்பண்ட். ப்ளீஸ் டெல் மீ.''''நரேன்... கொஞ்சம் ஸ்டேஷன் வரைக்கும் வர முடியுமா?''''ஸ்டேஷன்... வாட் ஸ்டேஷன்?''''கலிபோர்னியா போலீஸ் ஸ்டேஷன்.''''போலீஸ் ஸ்டேஷனா... நீ எதுக்கு அங்கே போனே!''''கம்ப்ளெயின்ட் கொடுக்க வந்திருக்கேன்.''''கம்ப்ளெயின்ட்டா... யார் மேல?''''நரேன்... என்னோட குழந்தையைக் காணோம். ஐ ஆம் டோட்டலி அப்செட்.''மறுமுனையில் கவிதா அழும் குரல், அவனுக்கு தெளிவாகக் கேட்டது. — தொடரும்.- தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ. நடராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !