உயிரே உனக்காக.... (37)
இதுவரை: தன் இ-மெயிலுக்கு கவிதா அனுப்பி இருந்த கடிதத்தை படிக்க ஆரம்பித்தாள் மதுரிமா. அதில், விமான பயணத்தின் போது, நரேனை முதன் முதலில் சந்தித்ததையும், அப்போது பேசிய விவரத்தையும் எழுதியிருந்தாள் கவிதா. மேலும், நல்ல நண்பர்களாக இருக்கும் பொருட்டு, தன் வீட்டுக்கு நரேனை அழைத்ததையும், அவன் வருகைக்காக காத்திருந்ததையும் எழுதி இருந்தாள் —கவிதாவின் கடிதத்தை, அதற்கு மேலும் படிப்பதா, இல்லை அத்துடன் நிறுத்தி விடுவதா என்று யோசித்துப் பார்த்தாள் மதுரிமா. அவளுக்குத் தலையை லேசாக வலிக்க ஆரம்பித்தது. சூடாக ஒரு கப் காபி குடித்தால் தேவலாம் போல் தோன்ற, மதுரிமா படிப்பதை பாதியில் நிறுத்தி, சமையல் அறைக்குள் வந்தாள்.சமையல் அறையில் மதுவின் அம்மா வாஷ் பேசினில் பாத்திரங்களை அலம்பிக் கொண்டிருந்தாள்.''என்னம்மா... பாத்திரங்களை நீ அலம்பிட்டு இருக்க... வேலைக்காரி வரலையா?''''அந்தக் கழுதை வந்திருந்தா, நான் ஏன் இதை செய்யப் போறேன்... வரல.'''' வரலையா... ஏன் வரல, இன்னைக்கு வர மாட்டேன்னு நேத்தே சொன்னாளா?''''சொல்லல... இப்பத்தான் போன் செய்தாள்... அவளுக்கும், அவ புருஷனுக்கும் எதுவோ பிரச்னையாம்; போன்ல ஒரே ஒப்பாரி.''''ஏம்மா... என்ன பிரச்னையாக இருக்கும்?''''என்ன பிரச்னையா இருந்தா நமக்கு என்ன மது... அவ பிரச்னையை தெரிஞ்சுக்கிட்டு, நாம என்ன செய்யப் போறோம்?''''என்னம்மா அப்படி சொல்ற? என்ன பிரச்னைன்னு தெரிஞ்சா, நாம ஏதாச்சும் உதவி செய்யலாம் இல்ல...''''இதோ பார் மது... புருஷன், பொண்டாட்டிக்குள்ள எத்தனையோ பிரச்னைகள் இருக்கும். அவங்களோட எல்லா பிரச்னைகளுக்கும், எல்லாராலேயும் உதவி செய்திட முடியாது. சில பிரச்னைகளை அவங்களாத்தான் தீர்த்துக்கணும்.''''அவங்களால தீர்த்துக்க முடியலேன்னா...''''என்ன கேள்வி இது... தீர்க்க முடியலேன்னா, காலத்துக்கும் அப்படியே வாழ்ந்துட்டுப் போக வேண்டியதுதான். அது, அவளோட விதி; அவ வாங்கி வந்த வரம். நாம என்ன செய்ய முடியும்?''''அம்மா... உன்னை ஒண்ணு கேக்கலாமா?''''என்ன கேக்கப் போற... எங்கிட்ட எதையும் ஏடா கூடமா கேக்காதே... உன் எல்லா கேள்விக்கும் என்னால பதில் சொல்லிட்டிருக்க முடியாது.''மது அவளைப் பற்றியோ, தன்னைப் பற்றியோ ஏதாவது கேட்டு வைத்து, தன்னை இக்கட்டில் மாட்டி விடுவாளோ என்ற பயத்தில், மதுவின் தாய் சாமர்த்தியமாக நழுவப் பார்த்தாள்; ஆனால், மது விடுவதாக இல்லை.''இல்லம்மா... இது, ரொம்பவும் சாதாரணமான கேள்விதான்.''''சரி... சரி... வேணாம்ன்னா விடவாப் போறே... கேளு.''மது, உடனே அவள் கேள்வியைக் கேட்டு விடவில்லை. சில வினாடிகளுக்கு கண்களை மூடியபடி யோசித்தாள்...''அம்மா அதுக்கு முன், லேசா தலையை வலிக்குது. சூடா ஒரு கப் காபி போட்டுத் தர்றீயா?''மதுவின் தாய், பாத்திரம் தேய்ப்பதை நிறுத்தி, அவள் மகளின் முகத்தை பாசத்துடன் ஏறிட்டுப் பார்த்தாள். மதுவின் முகம் லேசாக வாடிப் போய் இருப்பதைப் போல் உணர்ந்து, மனசுக்குள் பதறிப் போனாள்...''தலையை வலிக்குதா... என்னாச்சு மது... டாக்டர்கிட்ட போலாமா?''''அதெல்லாம் ஒண்ணும் வேணாம். சூடா ஒரு கப் காபி போதும்; சரியாயிடும்.''மதுவின் தாய் காபி தயாரிக்க முற்பட்டாள். மது பிரிட்ஜைத் திறந்து, பாலைக் கொண்டு வந்து அம்மாவிடம் கொடுத்தபடி கேட்டாள்... ''இப்ப நான் கேக்கலாமா?''''சரி... கேளு.''''வேலைக்காரி விஷயத்துல அது அவள் வாங்கி வந்த வரம்ன்னு சுலபமா சொல்லிட்டே... ஏம்மா, புருஷன் அமையறதுல எல்லாப் பெண்களுமே சரியான வரம் வாங்கிட்டு வர்றது இல்லையோ?''''ஏன் அப்படி கேக்கற... அதுக்காக எல்லா பெண்களுமே கஷ்டப்பட்டுகிட்டா இருக்காங்க; எத்தனையோ பேர் புருஷனோட காலத்துக்கும் சந்தோஷமா வாழ்ந்துகிட்டுத்தானே இருக்காங்க?''''அப்படி நம்ம பார்வைக்கு அவங்க சந்தோஷமா தெரியறாங்க. ஆனா, அவங்க உண்மையிலேயே சந்தோஷமா வாழறாங்களா? இப்போதைக்கு இதுதான் என்னோட சந்தேகமே!''''இப்படி சந்தேகப்பட ஆரம்பிச்சிட்டா, வாழ்க்கையில் எல்லா விஷயத்திலேயும், எல்லார் மேலேயும் சந்தேகப்பட்டுக்கிட்டே செத்துப் போக வேண்டியதுதான். ஆனா, வாழ்க்கைங்கறது வெறும் சந்தேகம் மட்டுமே இல்ல மது. வாழ்க்கைங்கறது மிகப்பெரிய ஒரு நம்பிக்கை.''''இல்லம்மா... நான் ஒத்துக்க மாட்டேன். நம்பிக்கைங்கற பேர்ல, நம்மை நாமே சமாதானப் படுத்திக்கிறோம்... இதுவும் ஒரு மாதிரியான காம்ப்ரமைஸ்... இந்த சமாதானத்துக்குத்தான் நாம சந்தோஷம்ன்னு பேரு வெச்சிருக்கோம்.''மதுவிடம் காபி கோப்பையை நீட்டியபடி அவள் தாய் கேட்டாள்...''எங்கிட்ட இதையா நீ கேக்க நினைச்ச?''''நான் கேக்க நினைச்சது இது இல்ல... வேலைக்காரி விஷயத்துல அவ வாங்கி வந்த வரம்ன்னு சொன்னியே... ஏம்மா, உன் விஷயம் எப்படிம்மா; நீ வாங்கிட்டு வந்தது வரமா... இல்ல...''''உண்மைதான் மது... இந்த விஷயத்துல நான் வரம் வாங்கிட்டு வரல; நான் வாங்கிட்டு வந்தது சாபம்தான்.''சொல்லும் போதே அம்மாவுக்கு நெஞ்சை அடைத்து, கண்களில் நீர் திரண்டது. அம்மா முந்தானையில் கண்களைத் துடைத்து, ''சரி... இப்ப எதுக்கு என்னோட விஷயம்... நான் அதை என்னைக்கோ மறந்துட்டேன்.'''எதை மறந்து விட்டதாக அம்மா சொல்கிறாள்... அப்பா இவளுக்கு வாழ்வை மறுத்து, வேறு யாரோ ஒரு பெண்ணிற்கு கொடுத்து, இவளை அழ வைத்ததையா?'''அம்மா... நீ என்னைத் தப்பா நினைக்கலேன்னா நான் ஒண்ணு கேக்கட்டுமா?''''மது... நீ என்ன கேக்க வரேன்னு எனக்குப் புரியுது... உன்னோட அப்பா மனசுல இன்னொருத்தி வர்ற அளவுக்கு நான் என்ன தப்பு செஞ்சேன்னு தானே!'''என்னோட அம்மா ஒன்றும் முட்டாள் இல்லை... புத்திசாலிப் பெண்தான். நான் கேட்க வந்ததை எத்தனை சரியாக யூகித்து விட்டாள்...'மது எதுவும் சொல்லாமல், மவுனமாக இருந்தாள். அவளது மவுனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டு, அவள் தாயே தொடர்ந்து பேசினாள்...''என் மனசார நான் எந்தத் தப்பும் செய்யல... இதை மத்தவங்க நம்பறதை விட, என் பொண்ணு, நீ நம்பணும். ஆனா, ஒரு ஆண் அவன் மனைவியைத் தவிர்த்து, இன்னொரு பெண்ணை நேசிக்கறதுக்கு அந்த மனைவி தப்பு செஞ்சிருக்கணும்ன்னு நினைக்கறதே பெரிய தப்பு; அதுக்கு அவசியமும் இல்ல.''''அப்புறம்... மனைவி எந்த தப்புமே செய்யாத போது, ஒரு ஆணுக்கு, இன்னொரு பெண் மேல ஏம்மா ஆசை வருது?''''அதுக்கு ஆயிரம் காரணம் இருக்கு மது. இது, ஒரு அம்மாவும், பொண்ணும் பேசற விஷயம் இல்ல... இந்த விஷயத்துல ஆண்களுக்கு நிறைய எதிர்ப்பார்ப்புகள் இருக்கு; ஏராளமான ஆசைகள் இருக்கு. ஆண்கள் ரொம்பவும் வித்தியாசமானவர்கள் மது.''''வித்தியாசமானவர்களா... எந்த விதத்துல?''''எல்லா விதத்திலேயும் தான்... ஒரு ஆணோட எதிர்பார்ப்பில, ஆசையில் ஒரு பெண், 99 விஷயங் கள்ல அவனோட ஒத்துப் போயிருப்பா... ஆனா, ஏதோ ஒரு விஷயத்துல அவனோட மாறுபட்டிருப்பா.''இதை சொல்லும் போது, அம்மாவின் பார்வை ஜன்னல் வழியே வெகு தூரத்துக்கு வெளியே சென்று, எதையே தேடுவதைப் போல் உணர்ந்தாள் மதுரிமா. ஒரு சிறிய மவுனத்துக்குப் பின், அம்மாவே பேசினாள்...''ஆனா, அந்த ஆண், அந்தப் பெண் அவனோடு ஒத்துப் போன அந்த, 99 விஷயங்களைப் பற்றி யோசிக்காம, அவ, அவனோட மாறுபட்ட அந்த ஒரு விஷயத்தைப் பற்றி மட்டும் அதிகமா யோசிக்க ஆரம்பிச்சுடறான்... பிரச்னையே அங்கேதான் ஆரம்பமாகுது.''''ஏம்மா... இது, ஆண்களுக்கு மட்டும் தானா... இதே மாதிரி ஒரு பெண் யோசிக்க ஆரம்பிச்சா என்னவாகும்?''''இந்தக் காலத்துப் பெண்கள், இதைப்பற்றி இப்ப ரொம்பவே யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க... சம உரிமைன்னு பெண்கள் கோஷம் போட்டுக்கிட்டு, தெருவுக்கே வந்து கொடி பிடிக்கறது எதுக்காக மது? எல்லாத்துக்காகவும் தான். ஆனால், நிறைய ஆண்களுக்கு இதுல சம்மதம் இல்ல.''மது யோசித்துப் பார்த்தாள்... அம்மா சொல்வது உண்மை தான். அதனால் தான், பெண்களுக்கான, 33 சதவீதமே இன்னும் முட்டியும், மோதியும் தடுமாறிக் கொண்டிருக்கிறது. எல்லா விஷயங்களிலும், குறிப்பாக, கணவன் - மனைவி என்ற அவர்களது தாம்பத்ய வாழ்க்கையில், அவர்கள் உரிமை, எதிர்ப்பார்ப்புகள், ஏன் ஆசைகள் சமம் என்ற நிலைமை வந்து விடுமானால், என்ன நடக்கும்? பெண்கள் சகித்துக் கொண்டு கட்டுப்பாட்டிற்காகவும், கவுரவத்திற்காகவும் வாழப் பழகிக்கிட்ட ஒரு வாழ்க்கையை, நிறைய ஆண்களால் வாழவே முடியாது. ஆண்களின் இதயம் மூச்சுத் திணறலில் முடிந்தே போகும்.இந்த விஷயத்தில் பெண்களின் நிலைமை மிகவும் பரிதாபமானதுதான். என்னைப் போலவும், என் அம்மாவைப் போலவும் வாழ நினைக்கும் பெண்களின் எண்ணிக்கை, நாளடைவில் குறைந்து போகலாம். கணவனுக்கு எதிராகவும், கணவனையும் மீறி வேறு ஒரு ஆணை நினைத்துப் பார்க்கும் கவிதா போன்ற பெண்கள் வீறுகொண்டு எழும் போது, இவர்களின் சமூக ஒழுக்கம் என்ற கூச்சல் என்னவாகும்? தனி மனித உணர்வில் பெண்களுக்கான விடுதலை என்பது முழுமையாய் கிடைத்துவிடும்.தன்னளவில் சுதந்திரமாய் வாழ்ந்து கொண்டிருக்கிற ஆண்களின் சுயநலத்தை பெண்களுக்குள் தோன்றும் இந்த நெருப்பு சுட்டெரித்து, சாம்பலாக்கி விடும். ஆயிரம் விஷயங்களில் ஆளுமை பெற்றிருக்கும் ஆண்கள், இந்த ஒருவிஷயத்தில் பெண்களிடம் தோற்று, காலத்திற்கும் அடிமையாகிக் கிடக்கும் ஒரு அவல நிலை ஏற்பட்டு விடும். இதை, ஆண் என்பவன் நன்றாகவே உணர்ந்து வைத்திருக்கிறான். அதன் காரணமாகவே நம் அனைத்து சாத்திரங்களும் ஆணாதிக்கக் கொடியை உயரத் தூக்கிப் பிடித்து, பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றன...தன்னைப் பற்றியும், தன் அம்மாவைப் பற்றியும் யோசித்து வருத்தப்பட்ட மதுரிமா, பொதுவான பெண்கள் பற்றி யோசிக்க ஆரம்பித்த போது கோபப்பட்டாள். இதே கோணத்தில் யோசித்துப் பார்த்தால், ஒரு வேளை கவிதாவின் மேல் தவறில்லை என்ற முடிவுக்கு வந்து விடுவோமோ! அதெப்படி... கவிதாவுடன் சம்பந்தப்பட்டிருப்பது அவளுடைய கணவன் நரேன் அல்லவா? அதை எப்படி ஏற்க முடியும்?பெண்களுக்கே இயல்பான பயமும், பொறாமையும் அவளது தர்க்கவாதங்களைப் பின்னுக்குத் தள்ளி, மதுவுக்கு கவிதாவின் இ-மெயிலை நினைவுப்படுத்தியது. காபி கோப்பையை, சமையல் மேடையில் வைத்துவிட்டு, மறுபடியும் அவளது அறைக்கு வந்து, கம்ப்யூட்டர் முன்பாக அமர்ந்தாள் மதுரிமா.கவிதாவின் இ-மெயிலில், நரேனின் கார் அவள் வீட்டு காம்பவுண்டிற்குள் நுழைந்து, போர்டிகோவில் வந்து நின்றது. காரின் கதவைத் திறந்து, வெளியே வந்த நரேன், கவிதாவை நோக்கி ஒரு மெல்லிய புன்னகையுடன் நடந்து வர, மதுரிமா கடிதத்தை மேலே தொடர்ந்து படிக்க ஆரம்பித்தாள்...மது... வெளிப்படையாக வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன்... வீட்டிற்குள் வந்த உன் இன்றைய கணவன் நரேனை, நான் அன்று எப்படி வரவேற்றேன் தெரியுமா? என்னுடைய முதல் பார்வையிலும், முதல் சிரிப்பிலேயுமே நரேனை வீழ்த்திக் காட்ட வேண்டும் என்ற ஒரு வெறியிலும், வேகத்திலும் நான் நரேனை வரவேற்று, கைகளைப் பற்றிக் குலுக்கினேன்; ஆனால் நரேன்...'நான் அத்தனை சுலபத்தில் சாய்ந்து விடுகிறவன் அல்ல...' என்ற உறுதியோடு, என் கைகளின் பிடியில் இருந்து, தன்னை விடுவித்து, களங்கமற்ற மனதோடு சிரித்தபடி நின்றதை, என்னால் இப்போதும் மறக்க முடியாது.அன்று, நரேன், தன் வீட்டிற்கு வந்த சம்பவத்தை அப்படியே திரைப்படம் போல் விவரித்திருந்தாள் கவிதா.மது... நட்பு விஷயத்தில் நரேன் மிகவும் தெளிவாக இருப்பதை என்னால் உணர முடிந்தது. இருந்தும், நரேனை கடைசியாக நான் ஒரு கேள்வி கேட்டேன். அது என்ன கேள்வி தெரியுமா?'நரேன்... பெண்களின் விஷயத்தில் உங்களின் இந்த அணுகுமுறை என்னிடத்தில் மட்டும் தானா? இல்லை எல்லாப் பெண்களிடமும் இப்படித்தானா?''அதெப்படி... எல்லாப் பெண்களிடமும் நான் இப்படித்தான் இருக்கப் போகிறேன் என்று சொன்னால், அது நான் சொல்லும் மிகப் பெரிய பொய்யாக இருக்கும்... அதிலும், பெண்ணை முற்றிலுமாய் ஒதுக்கி, சாமியாராக வாழ வேண்டும் என்ற எண்ணம் எதுவும் எனக்கு இல்லை. என் எதிர்கால மனைவி பற்றியும், நானும், அவளும் சேர்ந்து வாழப் போகும் இந்த வாழ்க்கை பற்றியும், எனக்குள்ளும் நிறையவே கற்பனைகளும், கனவுகளும் உண்டு கவிதா...''உண்மையிலேயே அந்தப் பெண் ரொம்பவும் கொடுத்து வைத்தவள்தான். அந்தப் பெண் யாரென்று முடிவு செய்து விட்டீர்களா நரேன்?'''கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்ட மாதிரிதான்... உங்களை மாதிரியே அவளும் நம் தமிழகத்தை சேர்ந்தவள்தான்...''நிஜமாகவா... அது யாரென்று நான் தெரிந்து கொள்ள லாமா நரேன்?'ஆவலைக் கட்டுப்படுத்த முடியாதவளாய் நான் கேட்டேன். அந்த பெண் யாரென்று நரேன் எத்தனை சந்தோஷமாக சொன்னார் தெரியுமா?'மதுரிமா... நான் மணந்து கொள்ள ஆசைப்படும் பெண்ணின் பெயர். பெயரே வித்தியாசமாகவும், அழகாகவும் தோன்றவில்லையா கவிதா? மதுரிமா ஒரு கதக் டான்சர். அடுத்த வாரம் இந்த மதுரிமாவைப் பார்ப்பதற்காக, நான் சென்னைக்குப் புறப்படுகிறேன். நாரதகான சபாவில், மதுரிமாவின் நாட்டிய நிகழ்ச்சியில்தான், நான் முதல் முதலாக அவளை சந்திக்கப் போகிறேன். அதன் பிறகு, என் வாழ்க்கையின் முடிவு வரையில், பெண் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களுமே, இந்த மதுரிமா என்ற ஒரே பெண்ணோடு மட்டும்தான்...'அதற்கு மேலும் கவிதாவின், 'இ-மெயிலை' படிக்க முடியாமல், மதுரிமாவிற்கு நெஞ்சை அடைத்து, அவளது அழகிய கண்களில் நீர் முட்டி மறைத்தது. — தொடரும்.- தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர்