உயிர் காத்த நாய்க்கு விருது!
ஜப்பான் நாட்டின் சியா நகரில் உள்ளது, வகாபா-குவில் பகுதி. இங்குள்ள, குதிரையேற்ற பயிற்சி கிளப்புக்கு வந்த, 50 வயது நபர் ஒருவருக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்தார்.இதை, மற்றவர்கள் கவனிக்காத நிலையில், அங்கிருந்த ஐந்து வயதான குமி என்ற மங்கிரோல் வகை நாய், இடைவிடாமல் குரைத்து, அங்கிருந்தவர்களின் கவனத்தை திருப்பியது.நாயின் அருகில் கிடந்த நபரை பார்த்து அதிர்ச்சியடைந்து, உடனே, அவரை மருத்துவமனையில் சேர்த்து, உயிரை காப்பாற்றினர். உயிரை காப்பாற்றிய குமி நாய்க்கு, வீரதீர விருது வழங்கி கவுரவித்தது, ஜப்பான் தீயணைப்பு படை.குமி பொதுவாக, குரைக்கவே செய்யாதாம். ஏதாவது வித்தியாசமாக இருந்தால் மட்டுமே குரைக்குமாம். — ஜோல்னாபையன்