வெண்ணிலா தெரிந்தது!
வாசு, முகநுாலில் மூழ்கியிருந்தபோது, ''சித்ராக்கா,'' என, அழைத்தபடி வந்தாள், மாடி குடியிருப்பில் உள்ள சங்கீதா.சமையல் அறையிலிருந்து புன்னகையுடன் வந்த சித்ரா, ''வா, சங்கீதா... குட் மார்னிங்,'' என்றாள்.''அக்கா... கல்லுாரியில, இன்னிக்கு, 'வாழ்ந்து பார்க்க வேண்டும்'ன்னு தலைப்புல, பேச்சு போட்டி. எவரெஸ்ட்ல ஏறி, சாதனை பண்ணினாளே ஒரு இளம்பெண். அவள் பேரும், தகவலும் வேணும்க்கா,'' என்றாள்.யோசிக்காமல் உடனே, ''அவள் பெயர், அருணிமா. இரவு பயணத்தின்போது, தங்கச் சங்கிலியை அறுத்து, ரயிலிலிருந்து தள்ளி விட்டனர், ரவுடிகள். ரெண்டு தண்டவாளங்களுக்கு நடுவில் விழுந்தாள். அவள் கால் மேல், ரயில் ஏறியது. மயக்கமானாள்.''இரவு முழுக்க, 30 ரயில்கள், அந்த தண்டவாளங்களை கடந்துருக்கு; எலிகளும், பெருச்சாளிகளும், அவள் ரத்தத்தை ருசிச்சிருக்கு... அடுத்த நாள் காலை, ஒரு விவசாயி, அவளை பார்த்து, ஆம்புலன்சை கூப்பிட்டார். ஒரு ஆண்டு ஆஸ்பிடல் வாழ்க்கை. இடது காலை முழுமையா வெட்டி எடுத்துட்டாங்க... ''மெல்ல மன அதிர்ச்சியிலிருந்து வெளில வந்து, செயற்கை கால் பொருத்தி, மலையேற்ற பயிற்சி எடுத்து, எவரெஸ்ட் சிகரத்தை தொட்டாள், அருணிமா. அதுக்குப் பின் இந்தோனேஷியா, சுவிஸ், கனடா மலைச் சிகரங்களில் ஏறினாள். அண்மையில், அண்டார்டிகாவின், வின்சன் மலைச் சிகரத்தையும் தொட்டு, 'பத்ம' அவார்டும் வாங்கிட்டா,'' என்றாள், சித்ரா.''வாவ்... ரொம்ப நன்றி... எப்படிக்கா இவ்வளவு, 'அப்டேட்'டா இருக்கீங்க... உண்மையிலேயே நீங்க பெரிய ஆள்க்கா. வரேன் அங்கிள்,'' என்று சிரித்தபடியே கிளம்பியவள், ''கிச்சனிலிருந்து வாசனை வருதே... என்னக்கா?'' என்றாள், சங்கீதா.''ரவா பொங்கலும், பரங்கிக்காய் கூட்டும்... இரு, சாப்பிட்டு போகலாம்!''''வாவ்... 'ரெசிப்பி' சொல்லுங்க... எனக்கு நேரமாச்சு,'' என, சிட்டு போல பறந்தாள், சங்கீதா.''வாசு... ராத்திரி, வறட்டு இருமலா இருந்தது, உங்களுக்கு... கடுக்காய், சீரகம், பெருஞ்சீரகம், பனங்கல்கண்டு போட்டு, கஷாயம் வெச்சிருக்கேன். தரட்டுமா?'' என்றபடியே, அவன் தலையை கோதினாள், சித்ரா.''ம்!'' என்றான்.''இன்னிக்கு ஆபிஸ்ல, 'ஸ்பெஷல் மீட்டிங்' இருக்கு, வாசு... கொஞ்சம் முன்னாடி கிளம்பி, உங்களோடயே வரேன். சிக்னல்ல இறக்கி விட முடியுமா?''அவள் பக்கம் திரும்பாமல், ''நோ வே,'' என்றான்.''உங்களுக்கு, வேற வேலை இருக்கா, வாசு?''''இல்ல... நல்லா துாங்க போறேன். ரெண்டு நாளா, 'பிரசன்டேஷ'னுக்கு தயார் செய்ததுல, நாக்கு தள்ளிப் போச்சு. மதிய சாப்பாடு தயார் பண்ணி வச்சுட்டு, நீ கிளம்பு,'' என, எழுந்தான். படுக்கையில், 'தொப்'பென்று விழுந்து, காலால் கதவை மூடினான்.ஒரு கணம், அவள் விழிகள் கசிந்தன.'இன்று ஓய்வு எடுக்கப் போகிறேன்; டிபன் வேண்டாம், சாப்பாடே சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று சொல்லக் கூடாதா... நீயும்தானே உழைத்து, களைத்து வருகிறாய். எளிமையாக செய்து கொள் என்று அக்கறை காட்டக் கூடாதா... என்ன கோபம், சங்கீதா பாராட்டியதாலா... இது முதல் முறை அல்லவே...'வாசுவின், 'ஆடிட்டிங்' வேலை பற்றி, யாராவது பாராட்டி பேசும்போது, உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறாளே... கறுப்பும் - வெள்ளையுமாக அவன் பொருத்தமான உடை அணியும்போது, பரவசப்படுகிறாளே... நுாலகத்திலிருந்து, 'கிளாசிக்'கான புத்தகத்தை எடுத்து வரும்போது, எத்தனை முறை பாராட்டி இருக்கிறாள்...'அந்த மனசு, ஏன் இல்லை அவனுக்கு. இந்த குணம், இப்படியே வளர்ந்தால், என்ன ஆகும். அவளும், பொறுமையின் எல்லையை கடக்க நேர்ந்தால்...' என, பெருமூச்சுடன் நின்றாள், சித்ரா.வாசலில் வண்டியை நிறுத்தி வாசு, உள்ளே நுழையும்போது, அம்மாவின் கைவண்ணத்தில் பட்டாம்பூச்சி கோலம் வரவேற்றது; ஊதுபத்தியின் வாசனை, நாசியைத் துளைத்தது. 'ஒருமையுடன் உனது திருவடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்...' என்று, மெல்லிய பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.''கண்ணா... வா, வா... இன்னிக்கு உன்னை பாக்கணும்ன்னு நெனச்சேன். நீயே வந்துட்டே,'' என, வரவேற்றாள் அம்மா.''ம்!'' என்றான்.''தலைவலியா... காபி தரட்டுமா?''''வேண்டாம்,'' என, 'தொப்'பென சரிந்தான்.''களைப்பா இருக்கே... பசியா... பொங்கல் பண்றேன்; சாப்பிடறியா?'' என்று ஆதரவாக நெற்றியில் கை வைத்த, அம்மாவின் விரல்களை விலக்கினான்.''என்னப்பா பிரச்னை, வீட்டுலயா, இல்ல ஆபிஸ்லயா?'' என்றாள் மென்மையாக.''அய்யோ, நீயும் ஏம்மா, அவளை மாதிரியே தொணதொணன்னு?'' சலித்துக் கொண்டான்.மொபைல் போன் அழைத்தது.''இரு, பேசிட்டு வரேன்,'' என்று, அவனை பார்த்தபடி எழுந்தாள்.'என்ன மாயப் பிறவிகள் இந்த பெண்கள் என்று தோன்றியது அவனுக்கு. எவ்வளவு துல்லியமாக கண்டுபிடித்து விடுகின்றனர். முகமொழி, உடல்மொழி என்று, சுலபமாக கண்டுபிடிக்க முடிகிற அளவுக்கா இருக்கிறேன்...' என, நினைத்துக் கொண்டான்.''இந்தா, சுக்கு பொடி போட்ட மோரை குடி,'' என்று நீட்டிய அம்மா, ''சித்ரா எப்படி இருக்கா... அவளுக்கும் ஆபிஸ் வேலை, வீட்டு வேலைன்னு பாவம் ரொம்ப, 'பிசி'யா இருக்கா... இந்த வாரக் கடைசில ரெண்டு பேரும் சின்னதா ஒரு, 'பிக்னிக்' போயிட்டு வாங்க, வாசு!''''நீ வேற... அவளுக்கு ஒரு பிரச்னையும் இல்ல. எல்லா இடத்துலயும் சர்வாதிகாரி. என்ன சமைக்கிறாளோ அதை சாப்பிடணும், எங்க, 'டிராப்' பண்ண சொல்றாளோ, அங்க விடணும். எப்போ கிளம்பணும்ன்னு நெனக்கிறாளோ, அப்போ கிளம்பணும். எல்லாரும் பிரமிப்பா பாக்கணும். பெரிய தலைவி மாதிரி பந்தாவா எல்லாரையும் அதிகாரம் பண்ணணும். மைகாட், தலைவலிம்மா அவ... எல்லாம் தனக்கு தான் தெரியும்ற திமிர்,'' என்று, வெறுப்பை உமிழ்ந்தான்.பொறுமையாக கேட்டு, ''வாசு... சின்ன வயசுல நீ எப்படி இருப்பே, என்ன பேசுவே, எப்படி நடந்துப்பேன்னு சொல்லட்டுமா,'' என்றாள்.''என்ன?''''வீட்டுல, அப்பா எப்படி இருப்பார் ஞாபகம் இருக்கா... நான், எவ்வளவு அம்சமா ரங்கோலி போடுவேன். தெருவே, ரசிச்சு பாராட்டும். பெண்கள் கூட்டம், துணிகளை கொடுத்துகிட்டே இருக்கும்; புது புது டிசைன்ல, ரவிக்கை, 'நைட்டி' தைப்பேன்...''என் ரசப்பொடிக்கும், வத்தக்குழம்புக்கும் எப்பவும், 'டிமாண்ட்!' எல்லா பத்திரிகைகளுக்கும் கடிதம், கவிதைகள்ன்னு எழுதுவேன். சின்ன சின்னதா பரிசுகள் வந்து கொண்டே இருக்கும். உன்னை, 'கிரிக்கெட் டோர்னமென்ட்'டுக்கு கூட்டிட்டு போவேனே நினைவிருக்கா, வாசு?''''ம்... இருக்கும்மா.''''அப்பல்லாம் மைதானத்துல, நாலஞ்சு மணி நேரம் விளையாடுவே... நீ, 'தேர்ட் டிவிஷன்' விளையாடற வரைக்கும் நாந்தான் கூடவே இருந்து, பஸ் பிடிச்சு, உன்னை கூட்டி வருவேன். அந்த நேரங்களை வீணாக்காம, டில்லி சித்திக்கு, குளிர் காலத்துல கொடுக்கறதுக்கு, உல்லன் கையுறை, சாக்ஸ் பண்ணுவேன்.''''தெரியும்மா... நல்லாவே தெரியும், சொல்லு,'' என்றான்.''அப்பாக்கு உங்க மேல ஏன் பொறாமைன்னு கேப்பே... உங்க மதிப்பு தெரியலயே அப்பாக்குன்னு என்கிட்டே கத்துவே... ஒருநாள் கூட, உங்க சமையலயோ, கோலத்தையோ, தையலையோ பாராட்ட மனசு வராம, குத்தம் கண்டுபிடிச்சு கத்தறாரேன்னு கோபப்படுவே...''தான் மட்டும் தான் ராஜா என்பதில், திடமாக இருந்தார். அம்மாவின் அன்பும், திறமையும் தான் வீட்டை ஒரு கோவிலாக மாற்றுகிறது என்ற உண்மை அறிந்தும், அறியாதவராக இருந்தார், அப்பா. அவ்வளவு கோபம் வரும் உனக்கு.''வெளியில், அம்மாவிற்கு எவ்வளவு மதிப்பு, மரியாதை. வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கு தேவையான அத்தனை நற்பண்புகளும், நல்லெண்ணமும் கொண்ட அம்மாவை, ஏன் புழுவை போல நடத்துகிறார், அப்பா என்று, அவ்வளவு ஆத்திரம் வரும். அப்பாவிடம், நீ சண்டை போட்டதுண்டு. ''ஆனால், நான் தான், 'விடு கண்ணா... வெளியில் போய் வரும் மனிதருக்கு, நிறைய பிரச்னைகள் இருக்கும். எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. வீட்டில் தான், 'ரிலாக்ஸ்' செய்ய முடியும். அப்பாவுக்கு எல்லாம் தெரியும்...' என்று தன்மையாக பேசி, உன்னை குளிர்விப்பேன்.''நாற்காலியை இழுத்து, அவன் எதிரில் போட்டு அமர்ந்தவள், ''வாசு... அம்மாவுக்கு ஒரு நியாயம், மனைவிக்கு ஒரு நியாயமா?'' என்றாள் மென்மையாக.''புரியல!''''சித்ரா மேல, ஏன் உனக்கு கசப்பு, வெறுப்பு... உண்மையா யோசிச்சுப் பாரு, என்னை போல தான் அவளும்... இல்லை, என்னை விட பல மடங்கு திறமைசாலி. சாப்ட்வேர் இன்ஜினியர், கார் ஓட்டறா, 'டாட்டூ' போட தெரியும், வீட்டுல செடி வளர்க்கிறா, 'வெஸ்டர்ன்' உடையோ, சேலையோ பாந்தமா உடுத்திக்கிறா... ''வகை வகையான சமையல் செய்யறதுல, அடிச்சுக்க முடியுமா அவளை... இந்த திறமைகளை எல்லாம் நீயும் பாக்கறே இல்ல, பாராட்டி ஒரு வார்த்தை சொல்லியிருக்கியா... அவள் எதிர்பாக்கறவள் இல்ல, ஆனாலும், ஒரு கை குலுக்கல், ஒரு நன்றி, ஒரு பாராட்டுன்னு செஞ்சிருக்கியா?''மவுனமாக இருந்த அவன் மனதில், ஏதேதோ நினைவுகள் ஓடின.''படிப்போ, வேலையோ, அறிவோ மனதை விரிவுபடுத்தணும், கண்ணா... வலிமையா, உறுதியா இருக்கிறவன் நிச்சயம் தன்னை சுத்தி இருக்கிற நல்ல விஷயங்களை உணர்வான்; பாராட்டுவான். அதிலும், மனைவி என்கிறவள், 100 சதவீதம் அன்புக்காக வாழ்கிறவள்; அன்பை மட்டுமே யாசிக்கிறவள்; அன்பை மட்டுமே பகிர தவிக்கிறவள்...''தன்னிடம் ஆயிரம் திறமைகள் இருந்தாலும், துணைவனிடமிருந்து அதுக்கான அங்கீகாரத்தை எதிர்பார்ப்பவள். அது, பலகீனம் தான். ஆனால், அழகான, தோழமையான, பொறுப்பான வாழ்க்கைக்கு, சின்ன சின்ன பலகீனங்களும் அழகுதானே...''நீ, சித்ராவை, உன் தோழியாக பார்க்கணும். ஒரு மனிதனால் இந்த உலகில் அனுபவிக்க முடிந்த மிகப்பெரிய ஆசிர்வாதம், வாழ்க்கை துணை தான். அதை அருமையாக மாற்றிக் கொள்வதும், அழித்துக் கொள்வதும், உன் கையில் தான் இருக்கு, வாசு!''நேசிக்கப்படும் எதுவும் தொலைந்து போகாது என்று தோன்றியது. சித்ராவின் மென்மையான முகம், மனதில் வந்தது.அன்பு ஆளுகிற இடத்தில், அதிகாரத்திற்கு இடமேயில்லை என்பதை உணர வைத்த அம்மாவின் கரங்களை, நேசத்துடன் பற்றினான்.சாளரங்களின் ஊடாக வெண்ணிலா, மிக அழகுடன் தெரிந்தது.வி. உஷா