நூற்றாண்டு நாயகன் - ஜெமினி கணேசன் (4)
பேச்சில், சிரிப்பில், செயலில், வாழ்வில் மென்மையான போக்கை கடைப்பிடிப்பவர்களை அனைவருக்கும் பிடிக்கும். அப்படி அனைவராலும் கொண்டாடப்பட்ட கலைஞர் தான், ஜெமினி கணேசன். ஜெமினி கணேசன் அழகன் என்றால், புஷ்பவல்லி பூலோக ரம்பை என்று சொல்லக்கூடிய அளவுக்கு பேரழகி. அவர் பின்னால், பல, 'ஹீரோ'க்கள் மற்றும் தொழிலதிபர்கள் சுற்றிக் கொண்டிருக்க, புஷ்பவல்லியோ வளர்ந்து வரும் இளம் நடிகர் கணேசன் மீது, காதல் கொண்டார். மிஸ் மாலினி படம் வெற்றி பெற்றது. தன் கதாபாத்திரம் பேசப்படுவது பற்றி, அடுத்த படங்கள் வருவது குறித்தெல்லாம், பெரிதாக நினைக்கவில்லை. அவர் கவனத்தில் இருந்தது, அழகிய இளைஞன் கணேசன் மட்டும் தான். அடுத்தடுத்த படப்பிடிப்புகளில், கணேசனை சந்திக்கும் வாய்ப்புகளை தேடினார்.பெண்களை பார்க்கவும், பேசவும் கூச்சப்படும் கணேசன், புஷ்பவல்லியின் ஜாடை மாடைகளை, கண்களின் பேச்சுகளை நேருக்கு நேர் எதிர்கொள்வதை தவிர்த்தார்.ஒருபக்கம் பாய்ந்து வரும் காதல் கணைகள், இன்னொரு பக்கம், சிறிய வேடங்களிலிருந்து கதாநாயகனாக புரமோஷன் எப்போது... தொழிலில் முன்னேற வேண்டுமே போன்ற கவலைகள், கணேசன் முன் இருந்தது.ஜெமினியின் அடுத்த படம், சக்ரதாரி. இதில், புஷ்பவல்லி முக்கிய வேடமேற்க, கணேசனுக்கு, கிருஷ்ணர் வேடம்.'இந்த தோற்றத்தில் நீங்கள் ரொம்ப அழகா, பொருத்தமா, மனம் கவரும் கிருஷ்ணனாக இருக்கிறீர்கள்...' என, புஷ்பவல்லி இரு பொருள்பட கூறிய பாராட்டுக்கு, 'நன்றி' என்ற ஒற்றை வார்த்தை சொல்லி, நகர்ந்து விட்டார், கணேசன்.அடுத்து, மூன்று பிள்ளைகள் படத்தில், மூன்று, 'ஹீரோ'க்களில், கணேசனும் ஒருவர். அதில், அவருக்கு ஜோடியாக நடித்தவர், சூரியபிரபா. இவர், புஷ்பவல்லியின் அக்கா. அக்காவை பார்க்க வருவது போல் வந்து, கணேசனை பார்ப்பார், கை பிடித்து குலுக்குவார், புஷ்பவல்லி. ஆனாலும், கணேசன் பிடி கொடுக்காமல், ஒரு புன்னகையுடன் கடந்து விடுவார்.ஜெமினி தயாரிப்பான, சம்சாரம் படத்தில், இரண்டாம் நாயகன் வேடம் எதிர்பார்த்த கணேசனுக்கு, சிறிய வேடமே கிடைத்தது. இதனால், வருத்தமுற்றவர், ஜெமினி நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.கேமராமேன் ராம்நாத் கொடுத்த சிபாரிசு கடிதத்துடன், நாராயணன் கம்பெனியில், நிரந்தர நடிகராக சேர்ந்து விட்டார். விநியோகஸ்தராக இருந்த நாராயணன், அப்போது பட தயாரிப்பில் இறங்கி இருந்தார்.அவர்கள் தயாரித்த, தாய் உள்ளம் என்ற முதல் படத்தை, ஜெமினி நிறுவன ஆஸ்தான கேமராமேன், கே.ராம்நாத் இயக்குகிறார் என்று முடிவானதும், ஏக சந்தோஷம், கணேசனுக்கு. தாய் உள்ளம் படத்தில், தனக்கு, 'ஹீரோ' வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்திருந்தார். கடைசியில், அதுவும் கைமாறி, ஆர்.எஸ்.மனோகர், கதாநாயகன் ஆனார்.'அடுத்த படத்தில், நீ தான் ஹீரோ...' என்று, பட அதிபர், நாராயணன் கொடுத்த வாக்குறுதியை ஏற்று, தாய் உள்ளம் படத்தில், வில்லன் வேடமேற்றார்.இப்படி, பல படங்களில் ஒப்பந்தமாகி, முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்க, அவரை சந்திக்க, சந்தர்ப்பங்களை தேடிக் கொண்டிருந்தார், புஷ்பவல்லி.ஒருநாள், கடற்கரையில் ஜெமினி கணேசன் உட்கார்ந்திருந்தபோது, அவர் அருகில், அழகி ஒருவர் வந்தமர்ந்தார். ஜெமினி திரும்பிப் பார்க்க, காதல் சிறகை காற்றில் விரித்த புஷ்பவல்லி, 'ஹாய், கணேஷ்...' என்றார்.அப்போது, 'ஹீரோயின்' ஆக நடித்துக் கொண்டிருந்தார், புஷ்பவல்லி. ஜெமினியை விட அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். ஜெமினி கணேசன், தன்னிலை விளக்கமாக, 'எனக்கு கல்யாணம் ஆகி, ஒரு அழகான மனைவி இருக்கிறாள்...' என்றார்.'எனக்கு தெரியும்...''எனக்கு, ஒரு குழந்தை இருக்கிறது...''அதுவும் தெரியும்...''நான், சினிமாவில் வளர்ந்து வரும் நடிகன்...''நல்லாவே தெரியும். உங்க அந்தஸ்தை, பணத்தை நான் எதிர்பார்க்கவில்லை. உங்கள் காதலை மட்டுமே கேட்கிறேன்...' என்ற, அந்த வார்த்தைகளில் ஆட்டம் கண்டது, ஜெமினி கணேசனின் உள்ளம்.'வாழ்க்கையில் மனைவியை மட்டுமே காதலித்து வந்த நான், புஷ்பவல்லி காதலில் சிக்கிக் கொண்டேன். கடற்கரையில் உட்கார்ந்திருந்த என்னை தேடி வந்த, புஷ்பவல்லி, என் மீது கொண்ட காதலை, மிக உருக்கமாக சொன்னாள்.'அதை என்னால் தடுக்க முடியவில்லை. கடற்கரை காற்றும், நான் சொன்ன பதில்களும், அவள் மனதுக்கு சுகமாக அமைந்தன. அன்று, எங்களுக்குள் ஏற்பட்ட காதல் உறவுக்கு அது அடித்தளமாக அமைந்தது...' என்று, ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார், ஜெமினி கணேசன்.அதே நேரத்தில், கணேசனின் வாழ்வில் அடுத்த புயல் வீச தயாராக இருந்தது. — தொடரும்சபீதா ஜோசப்