நூற்றாண்டு நாயகர் - ஜெமினி கணேசன் (6)
காற்று எப்போதும் ஒரே திசையில் வீசிக் கொண்டிருக்காது, திசை மாறும். உறவு முந்தி வந்தால், பிரிவு பின்னால் வரும்.காதல் சிறகை காற்றினில் விரித்து, வான வீதியில் பறந்த, கணேசன் - புஷ்பவல்லி எனும் ஜோடி, திசை மாறின. நடிகை, புஷ்பவல்லி, கணேசனை கண்டதும், காதல் கொண்டதும், அந்தக் காதல் கொடி எவ்வளவு வேகமாக மேல் நோக்கி படர்ந்ததோ, அதே வேகத்துடன் இறங்கியது.நான்கு ஆண்டுகள் தொடர்ந்த அவர்களின் காதல் ராஜ்ஜியம், மூன்றாம் ஆண்டின் இறுதியில், முறிந்தே போனது. அவர்கள் காதலின் நினைவாக, ரேகா, ராதா என, இரண்டு குழந்தைகள் பிறந்தனர். தெலுங்கிலும், தமிழிலும், கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தார், புஷ்பவல்லி. கணேசனோ சிறு சிறு வேடங்களில் தோன்றி, வில்லன், இரண்டாம் நாயகன் என்று வளர்ந்து, 10வது படத்தில் தான், கதாநாயகன் ஆனார்.'உங்களின் காதல் முறிவுக்கு பின்னால் இருப்பது யார்...' என, ஒரு பேட்டியில், ஜெமினி கணேசனிடம் கேட்ட போது, அவரது மனம் திறந்த பதில்:புஷ்பவல்லி, என்னை அடைவதிலும், தன்வசப்படுத்திக் கொள்வதிலும் கொண்டிருந்த ஆர்வமும், அவசரமும், என்னை விட்டுப் பிரிவதிலும் இருந்தது. நான்கு ஆண்டு நட்பை, என்னைப் புரிந்து கொள்ளாமலேயே, காதலை முறித்துக் கொண்டார், என்றார். அடுத்து, ஜெமினி கணேசன் வாழ்வில், இன்னொரு சுந்தரத் தெலுங்கு அழகி நுழைந்தார்.'ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை...' என்று, கண்ணதாசன் பாடியது போல, இன்னொரு பெண், தன் காதலன் வாழ்வில் வந்தால், பெண்கள் என்ன செய்வரோ, அதைத் தான் செய்தார், புஷ்பவல்லி. கணேசனின் புதிய காதலால் வருத்தமுற்று, ஒதுங்கிக் கொண்டார்.ஜெமினி நிறுவனத்தில், நட்சத்திரங்களை தேர்வு செய்யும் பொறுப்பாளராக கணேசன் இருந்த சமயத்தில், 12 வயது நிரம்பிய, ஒரு அழகிய சிறுமியை அழைத்து வந்தார், ஆந்திரக்காரரான, கே.வி.சவுத்ரி. 'இவள், என் மகள், நடனமும், நடிப்பும் வரும். நடிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும்...' என, கேட்டார்.அந்தப் பெண் கொஞ்சம் மாநிறத்தில் இருந்தாள். அவளுடைய குறுகுறுப்பான கண்களும், துறுதுறுவென்ற சுபாவமும், அவள் சரளமாக தமிழ் பேசிய அழகும், கணேசனை வெகுவாக ஈர்த்தன. அவளாகவே சில வசனங்களை பேசி, நடித்துக் காட்டினாள். அவள் பேச்சில், சிரிப்பில், நடிப்பில் ஒரு நளினம், அழகு இருந்தது. குச்சுப்புடி நடனம் ஒன்றை, அழகாக ஆடிக் காட்டினாள். நடிப்பின் மேல் அவள் கொண்டிருந்த ஈடுபாடும், அதில் இருந்த நேர்த்தியையும், பார்த்த கணேசன், 'இவளுக்கு வாய்ப்பு கொடுத்தால், நல்ல நடிகையாக வருவதற்கான அறிகுறிகள் இருக்கின்றன. உதடுகள் பேசாமலேயே பேசுகின்றன. வருங்காலத்தில், இவள் ஒரு சிறந்த நடிகையாக வருவாள்...' என்று, அவளது விண்ணப்பத்தில் குறிப்பு எழுதி, அனுப்பி வைத்தார். அப்போது, ஜெமினி நிறுவனத்தில் தயாரான படங்களில் அந்தப் பெண்ணுக்கு எந்த வேடமும் கொடுக்க முடியவில்லை. ஜெமினி ஸ்டூடியோவை விட்டு விலகிய நிலையில், பெண் என்ற படத்தில், ஜெமினி கணேசனை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்திருந்தார், ஏவி.எம்., செட்டியார். ஒரு நாள், ஏவி.எம்., ஸ்டூடியோவில், கணேசனை சந்தித்த, கே.வி.சவுத்ரி, 'என் மகளுக்கு, நீங்கள் தான் வாய்ப்பு கொடுக்கவில்லை. அவளை, தேவதாஸ் படத்தில், நாகேஸ்வர ராவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கின்றனர். ஏவி.எம்., செட்டியார் கூட, ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார்...' என்றார். 'அப்படியா... ரொம்ப நல்ல விஷயம்...' என்ற கணேசன், அருகில், புன்னகை பூத்த முகத்துடன் நின்று கொண்டிருந்த அப்பெண்ணை பார்த்தார்.மூன்றாண்டு இடைவெளி, அவளை மேலும் அழகியாக மாற்றியிருந்தது, இயற்கை. கண்களால் கவிதை பேசும் அந்த பேரழகி தான், சாவித்திரி. அவளை பார்த்ததும், கணேசனுக்குள் என்னமோ செய்தது. மீண்டும் ஒரு காதல் ஆரம்பம்.— தொடரும்சபீதா ஜோசப்