மிஸ்டு கால் உறுப்பினர்!
ஜகஜ்ஜால பிரதாபனின் கைபேசி சிணுங்கியது. சட்டைப்பையிலிருந்து எடுத்து பார்த்ததில், குறுஞ்செய்தி வந்திருந்தது; பொத்தானை அழுத்தி வாசித்தான்...'அன்பரே... ஊதா கட்சியில் சேர வேண்டுமா? கீழ்க்கண்ட எண்ணுக்கு, 'மிஸ்டு கால்' கொடுங்கள் 9988776655' என்றிருந்தது.ஜகஜ்ஜால பிரதாபனின் கண்கள், குயுக்தியாய் மின்னின. உதடுகளை வளைத்து, சுழித்து, பற்களால் வலிக்காமல் கடித்தான். நெற்றியும், புருவங்களும் யோகா செய்தன.கைபேசி எடுத்து, குறுஞ்செய்தியில் வந்த எண்ணுக்கு, 'மிஸ்டு கால்' கொடுத்தான்.''நீங்க தானே, 'மிஸ்டு கால்' கொடுத்தீங்க?'' எதிர்முனை அழைத்தது.''ஆமாம்!''''உங்க பெயர்?''''ஜகஜ்ஜால பிரதாபன்.''''எங்கிருந்து பேசுறீங்க?''''சேத்தியாத் தோப்பிலிருந்து!''''உங்க வயது?''''முப்பது!''''திருமணம் ஆகிருச்சா?''''இல்லன்னா நயன்தாரா மாதிரி, ஒரு பொண்ணை பாத்து கட்டி வைக்கப் போறீங்களா?''''அது முடியாது; உண்மைய சொல்லுங்க... உங்களுக்கு, கல்யாணம் ஆகிருச்சா?''''ஆய்ருச்சு!''''மனைவி பெயர்?''''முத்துமணி!''''உங்க ரெண்டு பேருக்கும் வாக்காளர் அடையாள அட்டை இருக்கா?''''இருக்கு!''''ஏற்கனவே, வேற ஏதாவது கட்சியில உறுப்பினராக இருக்கீங்களா?''''இல்ல!''''போன தேர்தலில் யாருக்கு ஓட்டுப் போட்டீங்க?''''மஞ்சள் கட்சிக்கு!''''ஏன்?''''அவங்க தான் ஓட்டுக்கு, 2,000 ரூபா கொடுத்தாங்க!''''எங்க கட்சியோட எந்த கொள்கை பிடித்து, கட்சியில் சேர முடிவெடுத்து, 'மிஸ்டு கால்' கொடுத்தீங்க?''''உங்க கட்சியோட கொள்கை உங்களுக்கே தெரியாத போது, எனக்கு, எந்த கொள்கை பிடிக்கப் போறது... நீங்க கேக்குற மாதிரி, நானும், உங்கள நாலு கேள்வி கேப்பேன். அதுக்கு திருப்தியா பதில் சொன்னீங்கன்னா, உங்க கட்சியில சேர்றத பத்தி யோசிக்கலாம்!''''நீங்க கேள்வி கேக்றதுக்கு முன், நான் ஒரு கேள்வி கேட்குறேன்... உங்க மீது கிரிமினல், வழக்குக எதாவது இருக்குதா?''''இல்ல... கேஸ்கள் இருந்தாகணும்ன்னா ஒரு ரெண்டு வாரம் அவகாசம் கொடுங்க. பத்து பதினைஞ்சு, 'கிரைம்'கள் செஞ்சு, கேசாக்கிடுறேன்.''''வேணாம்... இப்ப நீங்க கேள்வி கேக்கலாம்...''''உங்க கட்சிக்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் இருக்கா?''''என்ன தம்பி இப்படி கேட்டுட்டே...'' எதிர்முனை, ஒருமைக்கு தாவியது.''அங்கீகாரம் பெற்று, 15 - 20 வருஷமாகுது. தமிழ்நாட்ல தான், எங்க கட்சி பலவீனமா இருக்கு. ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்க திட்டமிட்டு தான், 'மிஸ்டு கால்' உறுப்பினர் திட்டமே கொண்டு வந்திருக்கோம்...''''உங்க கட்சியில சேந்தா பரிசுகள் தருவீங்களா... ஒவ்வொரு பத்தாயிரம் உறுப்பினர்களில் இருந்து, குலுக்கல் மூலம் ஒருவரை தேர்ந்தெடுத்து, இலவசமாக, அகில இந்திய சுற்றுலா அனுப்புவீங்களா... ஒவ்வொரு ஒரு லட்சம் உறுப்பினர்களில், ஒருவரை குலுக்கல் மூலம் தேர்ந்தெடுத்து, 30 லட்சம் பெறுமானமுள்ள, தனி வீடு பரிசளிப்பீர்களா...''கோடி உறுப்பினர் சேர்ந்ததும், அதில், ஒருவரை குலுக்கல் மூலம் தேர்ந்தெடுத்து, அவருக்கு, 5 கிலோ தங்கமும், ஒரு ஆடி காரும், அடுக்கு மாடி குடியிருப்பும் பரிசளிப்பீங்களா?''''பேராசை படுறியே தம்பீ...''''நாங்க போடுற ஓட்டை வச்சு தானே மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிக்கு வந்து, கோடி கோடியா கொள்ளை அடிக்கிறீங்க. மொத்தமா சுரண்டுறதில, கொஞ்சமா கிள்ளிக்கொடுக்க உங்களுக்கு வலிக்குதா...''''உன்னுடைய யோசனைய, தலைமைக்கு தெரியப்படுத்துறேன்.''''உங்க கட்சியில, எத்தனை கோஷ்டிகள் இருக்கு... நான் உங்க கட்சியில உறுப்பினரானா, எந்த கோஷ்டியில சேந்துக்கணும்?''''எந்த கோஷ்டியில வேணும்ன்னாலும் சேரலாம்; அது உன் விருப்பம். அல்லது நீயே ஒரு தனி கோஷ்டி உருவாக்கிக்கலாம்.''''நன்றி... குலுக்கல் மூலம் பரிசுகள் தருவது இருக்கட்டும். பாத்திர சீட்டு, நகை சீட்டு சேரும் போது, ஊக்கப் பரிசாக ஏதாவது தருவாங்க... அப்படி நீங்க எதாவது தருவீங்களா?''''இல்லயே...''''உங்க கட்சியில சேர்ந்த எத்தனாவது வருஷத்துல, கட்சி பதவிகள் கொடுப்பீங்க... உதாரணத்துக்கு, அஞ்சு வருஷமானா, வட்டச் செயலாளர் பதவியும், 10 வருஷமானா, மாவட்ட செயலாளர் பதவியும், 15 வருஷமானா, எம்.எல்.ஏ., சீட்டும், 20 வருஷமானா எம்.பி., சீட்டும் தரலாம்!''''சேர்ற உறுப்பினருக்கு எல்லாம், பதவி தர முடியாது; பதவி கிடைக்க உழைப்பும், திறமையும் கூடவே கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை.''''பேச்சாற்றல் இருந்தால், தலைமை கழக பேச்சாளர் அல்லது செய்தி தொடர்பாளர் ஆக்குவீங்களா?''''எதிர்க்கட்சிய, கெட்ட வார்த்தைகளால் கழுவி கழுவி ஊத்தணும். எதிர்க்கட்சி கூட்டங்களுக்குப் போயி, கலாட்டா பண்ணணும். ஊர்வலங்களுக்கு, ஆள் சேக்கணும். கட்சி நடவடிக்கைகள் பத்தி பத்திரிகைக்காரன் கேள்வி கேட்டா, விளக்கெண்ணெயில வாழைப் பழத்தை போட்ட மாதிரி, 'வழவழா, கொழ கொழா'ன்னு பதில் தரணும். மொத்தத்துல, அதிரடியா நீ எதிர்மறை பிரபல்யம் அடைஞ்சா, நீ சொல்ற பதவிகள் நிச்சயம் கொடுப்பாங்க. கட்சிப் பதவி கொடுக்காட்டியும், தமிழ்ல இருக்கும் பத்து, பதினைஞ்சு, 'நியூஸ்' சேனல்கள், உன்னை விவாதத்தில் கலந்து கொள்ள கூப்பிடுவாங்க. மாசம் பத்து விவாதத்துல கலந்துகிட்டா, செமையா துட்டு கிடைக்கும்; அந்த துட்டுல, கட்சி பங்கு கேக்காது.''''வழியுது துடைச்சுக்கங்க புரோ... நான் உங்க கட்சியில சேர்ந்தா, கட்சி தலைவரை நினைச்சப்ப பாக்க விடுவீங்களா?''''மாநில தலைவராலேயே, மத்திய தலைவரை பாக்க முடியல; உன்னை எப்படி அனுமதிப்பாங்க...''''நான் உங்க கட்சியில சேர்ந்தா நகராட்சி, மாநகராட்சி ஒப்பந்தங்கள் கிடைக்க உதவுவீர்களா?''''நீ ஒரு நியூ கம்மர்... முப்பது வருஷமா கட்சியில குப்பை கொட்டிட்டு இருக்கிறவன்களுக்கு தான் அந்த வாய்ப்பெல்லாம் கிடைக்கும்.''''சப் கான்டிராக்ட் கூட கிடைக்காதா?''''கிடைக்கும்ன்னு உத்தரவாதம் தர முடியாது.''''நான் கட்சியில சேந்தா, என் மனைவிக்கு, சத்துணவு ஆயா, ஸ்வீப்பர் மாதிரியான வேலை போட்டு தர முடியுமா?''''அதெல்லாம் ரெண்டு லட்சம், மூணு லட்சம் ரூபாய் கொடுத்தாத்தான் கிடைக்கும். அரசியலும், சினிமாவும் ஒண்ணு தம்பி... திரைப்பட இயக்குனர், சங்கத்தில் பணம் கட்டி, உறுப்பினர் கார்டு வாங்கினவன் எல்லாம், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் ஆகிட முடியுமா... கடலில் எத்தனை மீன்கள் உண்டோ, அத்தனை வாய்ப்புகள், அரசியலில் கொட்டிக் கிடக்கு... உன் தலையெழுத்து நல்லா இருந்தா, கட்சி உறுப்பினரான ரெண்டு, மூணு வருஷத்துல அடிச்சு தூள் கிளப்பலாம்.''''கோடிக்கணக்கில் உறுப்பினர் சேர்ப்பீங்க. அந்த எண்ணிக்கைய காட்டி, பிரதான கட்சிகளோடு கூட்டணி வைப்பீங்க. தேர்தல்ல ஜெயிச்சு மத்தியிலோ, மாநிலத்திலோ ஆட்சிக்கு வந்தால், அஞ்சு வருஷத்துல குறைஞ்சபட்சம், 20 ஆயிரத்துல இருந்து, 50 ஆயிரம் கோடி வரைக்கும் சுரண்டுவீங்க. உங்களுக்கு நாங்க இலவச தோணியா, ஏணியா இருக்கணும்; அது எங்களால முடியாது.''''அதிகம் பேசுற தம்பி...'''நாங்க வொர்க்கிங் பார்ட்னர்ஸ்; எங்களுக்கும், 'பர்சன்டேஜ்' வேணும்!''''நீ அரிசி கொண்டு வரணும்; நாங்க உமி கொண்டு வருவோம்; ரெண்டு பேரும் ஊதி ஊதி தின்போம் என்பது தான் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு. என்னை கட்சி அலுவலகத்தில் வேலைக்கு வைச்சுருக்காங்க. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம், 20 பேர்களையாவது மூளைச்சலவை செய்து, உறுப்பினர் ஆக்கணும். அப்ப தான், தினக்கூலி, 500 ரூபா தருவாங்க. என்னை பாவம் பாத்தாவது, ஊதா கட்சியில உறுப்பினர் ஆகு. என்னால முடிஞ்சது, உன் நம்பருக்கு, 200 ரூபா, 'டாப் அப்' செய்து விடுறேன்.''''நான் ஏற்கனவே, இன்னொரு கட்சியில உறுப்பினரா இருந்துகிட்டு, உன், 200 ரூபா, 'டாப் அப்'புக்காக உன் கட்சில உறுப்பினரா சேர்ந்தா, என்னை, என்ன பண்ணுவ...''''நீ பத்து கட்சியில உறுப்பினர் கார்டு வச்சிருந்தாலும் பரவாயில்ல. ஊதா கட்சி கார்டு ஒண்ணு வாங்கி போட்ரு!''''மிஸ்டு கால் புரோ... உன்கிட்ட ஒரு உண்மையை போட்டு உடைக்கப் போறேன்...''''என்ன?''''மஞ்சள் கட்சியிலிருந்தும், பச்சை கட்சியிலிருந்தும், 'மிஸ்டு கால்' உறுப்பினராக, குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாங்க. ஒரு சாமான் வாங்க, நாம மூணு கொட்டேஷன் வாங்கி, குறைவான ரேட்டை தேர்வு செய்வோம் இல்லயா... ஏற்கனவே, ரெண்டு கட்சிகளோடயும், இப்ப உங்க கட்சி கூடயும் பேசி பாத்துட்டேன். பச்சை கட்சியில உறுப்பினரா சேர்ந்தா, செம பெனிபிட். ஒரு ஸ்மார்ட் போனும், 15 நாள் காஷ்மீர் சுற்றுலாவும், ஒரு வருஷத்துக்கு டூ வீலருக்கு பெட்ரோல் இலவசமாவும் தர்றாங்க. அதுமட்டுமில்லாம, மாதத்திற்கு ஒரு முறை, 'புல்' பிராந்தி பாட்டிலும்,'கட்சியில சேர்ந்த ஒரே வருஷத்துல, ஏதாவது ஒரு பதவி உண்டு...' என, உத்தரவாதம் தர்றாங்க. உங்க கட்சி, உறுப்பினருக்கு எதுவும் கொடுக்காம, அவன் பாக்கெட்டிலிருந்து பணத்தை லவட்டும் கட்சி; விடு ஜுட்டு...''''போனை வச்சிராதே... பச்சை கட்சியில சேர, எந்த நம்பருக்கு, 'மிஸ்டு கால்' கொடுக்கணும். அதை சொல்லு!''சொன்னான் பிரதாபன். எதிர்முனையில் உட்கார்ந்திருந்தவன், 'ஹெட்' போனை கழற்றி எறிந்து, பச்சைக் கட்சிக்கு, 'மிஸ்டு கால்' கொடுக்க ஆரம்பித்தான்.ஆர்னிகா நாசர்