நன்னயம்!
''பொன்னுரங்கா... இதென்னப்பா திடீர்ன்னு இப்படி ஒரு முடிவு... அவன் முகத்துல முழிக்கவே கூடாதுன்னு இருந்த... இப்ப, அவனப் போயி பாக்கணும்ன்னு சொல்றியே... செத்துப் போன உன் தங்கச்சி புருஷன்கிறத தவிர, அவனுக்கு வேறென்ன யோக்கியத இருக்கு...'' திகைப்பும், குழப்பமுமாய் கேட்டார் வேலு செட்டியார்.பத்து ஆண்டுகளுக்கு முன், பள்ளிப் படிப்பு முடிந்ததும், செட்டியார் கடைக்கு, கணக்கு எழுதும் வேலைக்கு வந்தவன் தான், பொன்னுரங்கன். அவரது அன்புக்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமானான். இன்று, ஓமலூர் பிரதான சாலையில், செல்வி மளிகைக் கடையை சொந்தமாய் துவங்கும் வரை, பல விதத்திலும் அவனுக்கு உதவி புரிந்து, இன்று வரை அவனுக்கு பெற்ற தகப்பனைப் போல உடன் இருந்து காப்பவர், வேலு செட்டியார்.வேறு சமயமாயிருந்தால், செட்டியாருக்கு உடனே பதில் சொல்லி இருப்பான்; இப்போது, அவன் மனம் உலைகலனாய்க் கொதித்தது.எட்டு ஆண்டுகளாய் நெஞ்சை நெருடுகிறது அந்த வடு. வெறுப்பில் வாய் அடைத்துப் போனாலும், கைகள் மட்டும் இரும்புக் கம்பியை அழுந்தத் தடவின.''இதென்ன கையில இரும்புக் கம்பி... எதுக்கு?'' குழம்பியவராய் கேட்டார், வேலு செட்டியார்.''காரணமாத்தான் முதலாளி... சிகரெட்டால சூடு வச்சு, என் தங்கச்சிய சித்ரவதை செய்தவன் அந்த கன்னையன். வார்த்தைக்கு வார்த்தை, 'அனாதை நாய்'ன்னு சொல்லி, என் தங்கச்சிய நெருப்பால சுட்டவன்.''கீரனூர்ல கரும்பு வியாபாரம்; கரும்புச்சாறு எடுத்து, வெல்ல உருண்டை பிடிச்சி விக்கற வியாபாரின்னு சொல்லி, இனிக்க பேசி, என் தங்கச்சிய கல்யாணம் செய்துட்டுப் போனான். ரெண்டே வருஷத்துல, 18 வயசுலயே அவ வாழ்க்கைய முடிச்சிப்புட்டான். என் தங்கச்சி அனுபவிச்ச சித்ரவதையை அவனும் அனுபவிக்கணும். இந்த இரும்புக் குச்சிய, பழுக்கக் காய்ச்சி, அவன் உடம்புல, பக்கம் பக்கமா இழுக்கப் போறேன்...''வயித்து வலி தாங்காம தற்கொலை செய்துக்கிட்டான்னு சொல்லி, அன்னிக்கு எல்லாரையும் ஏமாத்தினான்; நான் நம்பலே; என் தங்கச்சி கோழை இல்லேன்னு சொல்லி கதறினேன். ஏழைச் சொல் அம்பலம் ஏறுமா... அந்த அறியாப் பொண்ணு மேல சீம எண்ணெயை ஊத்தி, அவளைக் கொளுத்தியிருக்கான். எட்டு வருஷமென்ன... எத்தனை வருஷமானாலும் மறக்குமா முதலாளி...'' என்றான் ஆத்திரத்துடன் பொன்னுரங்கன்.''அட விடப்பா... அந்தக் கடவுளே அவனுக்கு அதுக்கான தண்டனைய கொடுத்துட்டான். சொத்தெல்லாம் அழிஞ்சு, சொந்த பந்தமெல்லாம் விலகி போய், இப்ப கை, கால் விளங்காம கிடக்கான். இப்போ நீ, அவனை அடிக்கப் போறது, செத்த பாம்ப அடிக்கற மாதிரி. உன் மனைவி பிரசவத்துக்கு ஊருக்குப் போயிருக்கிற இந்த நேரத்தில பழி வாங்கப் புறப்படணுமா... யோசி. நீ புத்திசாலி; உனக்கு நான் எதுவும் சொல்ல வேண்டியதில்ல,'' என்றவர் சிறிது நேரத்தில், அவனிடமிருந்து விடை பெற்று சென்றார்.செட்டியார் போனதும், கீரனூருக்கு பஸ் ஏறினான் பொன்னுரங்கன்.ஜன்னலோர இருக்கையில் காற்று வேகமாய் வீசியதில், தூக்கம் கண்களைச் சுழற்றியது.'செல்வி... என்னமா இது கன்னத்துல தீ கொப்புளமாயிருக்கு... கையில வேற தழும்பு...' என்று பதற்றத்துடன் கேட்டான் பொன்னுரங்கன்.'ஆ அது... ஒண்ணுமில்லண்ணே... கொப்பரையில பாகு கொதிக்கறப்போ, பாகு அடி பிடிக்காம இருக்கிறதுக்காக, பாலாத்திக் கட்டையால பாகுல ஓட்டிப் பதம் பாக்கணும். அப்ப பாகு கோழையா மேல மிதக்கும். கோழைய அள்ளுற போதும், பாகுல கட்டைய ஓட்டற போதும், பாகு தெறிக்கத் தான் செய்யும்; பழகினா சரியாப் போகும்...''அதுசரிம்மா... விரல்கள் எல்லாம் ஏன் இப்படி புண்ணா இருக்குது?''அடுப்புல கரும்புச் சக்கையை வச்சு எரிக்கும் போது, சரியா எரியலேயேன்னு தெரியாம கரும்புச் சக்கைய கையில தொட்டுட்டேன்...' என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வெளியிலிருந்து உள்ளே வந்த கன்னையன், 'யேய் அனாதை நாயே... சொல்லேண்டி... நான் தான் சிகரெட்ல சுட்டேன்னு... ஒ அருமை அண்ணன் கலெக்டர் வேலை பாக்குறான். என்னை அப்படியே ஒண்ணுமில்லாம செய்துருவான். கடையில பொட்லம் கட்டுற பய, என்னைய என்ன செய்திட முடியும். எனக்கு போதை தலைக்கேறினா, அப்படி தான் செய்வேன். அதுக்குதானே, அனாதை கழுதையான உன்னை தேடி வந்து கட்டிக்கிட்டேன்...' என்றான் இறுமாப்புடன்!'ஏய்...' என்று கொதித்து எழுந்த பொன்னுரங்கனை, ஓடி வந்து தடுத்து, 'அண்ணே வேணாம்ண்ணே... அவரு மேல கோபப்படாதீங்க. என்ன இருந்தாலும் அவர் என் புருஷன். இன்னிக்கில்லேன்னாலும் என்னைக்காவது ஒருநாள் அவரு திருந்தி, என்னை நல்லா வச்சுக்குவாரு...''இங்க பாரும்மா செல்வி... இவன் இப்படி குடிச்சுட்டு வந்து, தினம் தினம் உன்னை சித்ரவதை செய்றதை, இன்னும் எத்தனை நாளைக்கு தாங்கிட்டு அடிமை வாழ்வு வாழ்வே... பேசாம என்கூட வந்து, நான் குடிக்கிற கூழோ, கஞ்சியோ அதை நீயும் குடி...' என்றான்.'அண்ணே... நான், மனசால எப்பவும் உன் கூடத் தான் இருக்கேன்; நீ ஊருக்கு கிளம்பு...'''கீரனூர் பஸ் ஸ்டாப்பு வந்துருச்சு; எல்லாரும் இறங்குங்க,'' கண்டக்டர் கூறவும், நினைவுகளிலிருந்து, மீண்டு எழுந்தான் பொன்னுரங்கன்.கீரனூர் பிரதான சாலைக்கு வந்தவன், கடைத் தெரு பக்கம் போனான்.ஒரு மணி நேரத்திற்குப் பின், அந்த குடிசைக்கு வந்தான்.ஒரு காலத்தில் எட்டு கட்டு வீடும், வில் வண்டியும், கரும்புத் தோட்டமும் வைத்து, ஆட்டம் போட்ட கன்னையன், அடங்கி ஒடுங்கி, பக்கவாதம் வந்து, பரிதாபமாய் படுத்திருந்தான்.இவனைப் பார்த்ததும், ''பொ... பொழ்னுரங்கு...'' என்று வாய் குழறினான்.ஒரு கணம், அவனை கோபமாய் பார்த்தான் பொன்னுரங்கன்.அண்ணன்காரன் நான் இருக்கும்போதே என் தங்கச்சிய, 'அனாதை நாயே'ன்னு எத்தனை முறை அழைச்சிருப்பான் இந்த பாவி.இப்போது, அதேபோன்று அவனை கூப்பிட வேண்டும் போல் தோன்றியது பொன்னுரங்கனுக்கு!'அண்ணே... அவரு மேல கோபப்படாதீங்க...' காதோரம் தங்கையின் குரல் கெஞ்சியது.பையைத் திறந்த பொன்னுரங்கன், பழம், வேட்டி, துண்டு மற்றும் இனிப்பு முதலியவற்றை எடுத்து, அவன் காலடியில் வைத்து, மவுனமாக வெளியேறினான்.ஓமலூர் வந்ததும், ''பொன்னுரங்கா... இப்ப தான் போன் வந்திச்சு... உனக்கு பெண் குழந்தை பொறந்திருக்கு. செல்வி மறுபடி வந்துட்டதா, உன் மனைவி சொல்லச் சொல்லுச்சுப்பா,'' என்றார், வேலு செட்டியார்.ஷைலஜா