உள்ளூர் செய்திகள்

என் அப்பா! ஏவி.எம்., சரவணனின் சிறப்பு பேட்டி! (2)

ஏவி.எம்., தயாரிக்கும் படங்கள் அனைத்தும் சொந்த, 'செட்'டில் எடுக்கப்பட்டதா அல்லது வெளி ஸ்டுடியோக்களில் எடுத்தீர்களா? பெரும்பாலான படங்கள் ஏவி.எம்., ஸ்டுடியோவில், 'செட்' போட்டு எடுக்கப்பட்டவை தான். ஒரு சில படங்கள் தான், வெளி ஸ்டுடியோக்களில் எடுத்தோம். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த, சிவாஜி படம், அதிக பொருட்செலவில் ஐதராபாத்தில், ராமோஜிராவ் பிலிம் சிட்டியில், 'செட்' போட்டு எடுத்தோம்.ஏவி.எம்., நிறுவன தயாரிப்பில் எடுக்கப்பட்ட படங்களின், 'பட்ஜெட்' பற்றி சொல்லுங்களேன்...ஒவ்வொரு படத்திற்கும் வெவ்வேறு விதமான பட்ஜெட் நிர்ணயம் செய்வோம். நடிகர்கள் சம்பளம், 'செட்' அமைக்கும் செலவு, இயக்குனர் சம்பளம் இப்படி எல்லாமே தெளிவாக முதலிலேயே திட்டமிட்டு விடுவோம்.போட்ட பணத்திற்கு அதிகமாக லாபம் வரலாம் அல்லது குறையலாம். படங்களை வெளியிடுபவர்களுக்கு, 10 சதவீத லாபம் வைத்து கொடுப்போம். ஆனால், ஷங்கர் போன்ற பிரமாண்ட பட இயக்குனர்களின் படங்களுக்கு கணக்கு பார்க்க முடியாது.பெரிய பட்ஜெட் படங்கள் அவை. படம் மிகப்பெரிய லாபம் அடைந்தால், நாங்களே சில இயக்குனர்களுக்கு, பேசிய தொகையை விட அதிகமாக கொடுத்திருக்கிறோம்.உங்கள் நிறுவனத்திற்கென்று கதை தேர்வு செய்யும் குழு இருந்ததா... அவர்கள் பரிந்துரைக்கும் கதைகளை படமாக்குவீர்களா?கதைகளை என் அப்பா தான் கேட்டு, முடிவு செய்வார். கதை பிடித்திருந்தால், அடுத்து, யார் யாரை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்வார். ஆரம்பத்தில் பெரிய நடிகர்களை வைத்து படம் எடுக்கவில்லை. உயர்ந்த மனிதன் படம், சிவாஜிக்கு பொருந்தும் என்பதால், அவரை வைத்து படம் எடுத்தோம். அன்பே வா படம் முழுவதையும் கலரில், பெரிய படமாக எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு எடுத்தோம். 'அன்பே வா கதையில், எம்.ஜி.ஆர்., நடித்தால் நன்றாக இருக்கும்...' என்று, என் அப்பாவிடம், தயக்கமுடன் நானும், என் சகோதரரும் சொன்னோம். 'சரி, நீங்களே போய் அவரிடம் கதை சொல்லுங்கள். அவருக்கு பிடித்திருந்தால் படம் பண்ணுவோம்...' என்றார், அப்பா. அப்போது, உதவி இயக்குனராக இருந்த, எஸ்.பி.முத்துராமனுடன் சென்று, எம்.ஜி.ஆரிடம் பேசினோம். கதையை கேட்ட பின், 'இது என் பட பார்முலாவே கிடையாது. ஆனாலும், ஏ.சி.திருலோகசந்தர் படத்தில் நான் நடிக்கிறேன்...' என்று கூறி, சம்மதம் தெரிவித்தார்.ஏவி.எம்., என்ற பெயர், எப்போது மக்கள் மனதில் ஆழ பதிவானது?நாம் இருவர் படம் மூலம் துவங்கியது. தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்ததால், மக்களுக்கு எங்கள் நிறுவனம் மேல் ஒரு நம்பிக்கை வந்தது. அதன்பின், ஹிந்தி மற்றும் தெலுங்கு என, பல மொழிகளில் படங்கள் எடுத்தோம்.உங்கள் தயாரிப்பு நிறுவனத்தில், மிக குறைந்த நாளில் எடுக்கப்பட்ட படம் எது?சம்சாரம் அது மின்சாரம் படம், 34 நாட்களில், சரியாக திட்டமிட்டு எடுக்கப்பட்டது. எங்கள் நிறுவனத்தில் எந்த படமும் அதிக நாட்கள் எடுக்கப்படவில்லை; பட்ஜெட்டும் அளவுக்கு அதிகமாக போகவில்லை.ஆக் ஷன் மற்றும் வயது வந்தோர் பார்க்கக் கூடிய படங்களுக்கு, 'ஏ' சர்டிபிகேட் வழங்குவது வழக்கம். ஏவி.எம்.,மில் அதைப்போல, 'ஏ' சர்டிபிகேட் படங்கள் எடுத்தீர்களா?புன்னமை நாகு என்ற தெலுங்கு படம், 'ஏ' சான்றிதழ் பெற்றது. உடம்பில், விஷம் ஏறும் கதை. அப்படிப்பட்ட ஆளுடன், 'செக்ஸ்' வைத்துக் கொண்டால், அந்த பெண் இறந்து விடுவாள் என்ற ரீதியில் படத்தின் கதை செல்லும். நடிகர் சிரஞ்சீவி நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய, 'ஹிட்' ஆனது.வித்தியாசமான கதை என்று, விஜயா வாகினி நிறுவனரான, நாகி ரெட்டி பாராட்டினார். அதோடு, அந்த படத்தின், 100வது நாள் விழாவிற்கு அவரை அழைத்திருந்தோம். 'அப்பா ஸ்தானத்தில் இருக்கும் நீங்க கண்டிப்பா வரணும்...' என்று கோரிக்கை வைத்தோம்.'சரிப்பா வரேன். ஆனால், ஒரு மணி நேரத்தில் என்னை அனுப்பி வைக்கணும்...' என்றார்.ஏவி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் இதன் விழா நடந்தது. அவர் சொன்னபடியே ஒரு மணி நேரத்தில் திரும்ப அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தேன்.ஏவி.எம்., நிறுவனத்தில் அறிமுகமாகி, இந்திய அளவில் பேசப்பட்ட நடிகர்கள் யார்?வைஜெயந்தி மாலா. அவங்க, ஹிந்தி உட்பட பல மொழிகளில் பேசப்பட்ட நடிகையாக இருந்தாங்க. அதேபோல், சிவாஜி கணேசன். எங்களது, பராசக்தி படத்தில் நடிக்க ஆரம்பித்து, இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் மிகப்பெரிய நடிகராக புகழ்பெற்றார்.ஏவி.எம்., நிறுவனம், வெளிநாட்டில் எடுத்த முதல் படம் எது?டாக்டர் என்று ஒரு படம்; இலங்கையில் படமாக்கினோம். இணை தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து, என் மனைவி என்றொரு படம். சுந்தர்ராவ் நட்கர்னி இயக்கத்தில் ஏவி.எம்., தயாரித்த அப்படமும் வெற்றிப் படமாக அமைந்தது. அப்படத்தை இலங்கையில் தான் எடுத்தோம்.சமீப காலத்தில், விக்ரம் நடித்த, ஜெமினி, மாதவன் நடித்த, பிரியமான தோழி போன்ற படங்களையும் வெளிநாட்டில் தான் எடுத்தோம். என் அப்பாவுக்கு பின், ஏவி.எம்., நிறுவனம் என் கைக்கு வந்தபின், நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன.அப்பா காலத்தில், நடிகர்கள் முக்கியம் இல்லை; கதைக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார். எங்க காலத்தில், நடிகர்கள் முக்கியத்துவம் பெற்றனர். அவர்களுக்கேற்ற கதையாக எடுக்க வேண்டியிருந்தது.ரஜினிகாந்த் பற்றி ஒரு மறக்க முடியாத சம்பவம் சொல்ல வேண்டும். எங்கள் நிறுவன மேனேஜரிடம் ஒரு பைக் கொடுத்து, ரஜினிகாந்தை சந்திக்க முடியுமா என்று கேட்டு வர சொன்னேன். போன வேகத்தில் அதே வண்டியில் ஏறி, எங்கள் வீட்டிற்கு வந்து விட்டார், ரஜினிகாந்த். எங்கள் தயாரிப்பில், ஒன்பது படங்களில் நடித்துள்ளார், ரஜினி.அவர் ஒருநாள் என்னிடம், 'நாம் ஒரு பிரம்மாண்ட படம் பண்ண வேண்டும்...' என்றார்.'அப்படின்னா, இயக்குனர் ஷங்கர்கிட்டதான் கேட்கணும்...' என்றேன்.'அவர், படம் பண்ண மாட்டார் சார்...' என்றார்.'ஏன்...' என்று கேட்டேன்.'எனக்காக ஒரு கதையை தயார் செய்து, ஆறு மாதம் காத்திருந்தார். 'பிசி'யாக இருந்ததால், அவருடன் இணைந்து பணியாற்ற முடியவில்லை. 'என் வீட்டு வாசலில் ரஜினிகாந்த் வந்து கேட்டால் கூட, நான், ரஜினி படம் பண்ண மாட்டேன்...' என, சிலரிடம் கூறியுள்ளார், ஷங்கர். இவ்விஷயத்தை கவிஞர் வைரமுத்து என்னிடம் சொன்னார்...' என்றார், ரஜினி.'ஒரு தயாரிப்பாளராக, இயக்குனர் ஷங்கரிடம், நான் போய் பேசுகிறேன்...' என்று, ரஜினியை சமாதானப்படுத்தி, ஷங்கரை சந்திக்க சென்றேன்.— தொடரும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !