முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
சீர்காழியில் இருந்து அண்ணன்கோவில் வழியாக, 10 கி.மீ., துாரத்தில் உள்ளது, திருநாங்கூர்; இங்குள்ள மதங்கீஸ்வரர் கோவிலில், முன்னும் பின்னும் திரும்பிய நிலையில் காட்சி தருகிறார், நந்தி.ஒரு காலத்தில் இவ்வூர், சுவேதவனம் எனப்பட்டது. இங்கு, மதங்க முனிவர், சிவன் தனக்கு உறவினராக வேண்டும் என, தவம் செய்தார். அவருக்கு காட்சியளித்து, தகுந்த காலத்தில் அவருக்கு மருமகனாக வருவதாக அருள்புரிந்தார், சிவன். தொடர்ந்து அவ்வனத்திலேயே தங்கியிருந்த மதங்கர், ஒரு சித்ரா பவுர்ணமியன்று ஆற்றில் நீராடச் சென்றார். அதில் மிதந்து வந்த தாமரை மலர் மீது, ஒரு பெண் குழந்தை இருந்ததைக் கண்டார். அக்குழந்தையை எடுத்து, 'மாதங்கி' என பெயர் சூட்டி, அவளுக்கு அனைத்து கலைகளையும் கற்றுக்கொடுத்தார். அவள் பருவமடைந்ததும், மாதங்கியை திருமணம் செய்தார் சிவன். பின், மதங்க முனிவருக்கு இருவரும் சிவ - பார்வதியாக தரிசனம் தந்தனர். சிவன், லிங்கமாக எழுந்தருளி, மதங்கீஸ்வரர் என, பெயர் பெற்றார்.திருமணத்திற்காக சிவனுக்கு சீர் எதுவும் கொடுக்கவில்லை, மதங்கர். இதை, தேவர்கள் இழிவுபடுத்தவே, 'மாதங்கியும், நானும் வேறில்லை; இருவரும் ஒன்று தான்...' என்று சொல்லி, நந்தியை அழைத்து, சிவலோகத்திலுள்ள தன் செல்வத்தின் பெரும்பகுதியை எடுத்து வரச் சொல்லி, அதை, பார்வதிக்கு பரிசாகக் கொடுத்தார், சிவன்.சிவாலயங்களில் நந்தி, சிவனை நோக்கியே இருக்கும்; ஆனால், இங்குள்ள நந்தி, சிவலோகத்துக்கு பொருளை எடுக்கச் சென்றும், திரும்பிய நிலையிலும், முன்னும், பின்னும் திரும்பிய நந்திகளை, ஒரே பீடத்தில் அமைத்துள்ளனர். சுவாமியை பார்த்தபடி உள்ள நந்தி, மதங்கரின் பெயரால், 'மதங்க நந்தி' என்றும், திரும்பிய நிலையில் உள்ள நந்தி, இருப்பிடத்தின் பெயரால் சுவேத நந்தி என்றும் அழைக்கப்படுகிறது. பிரதோஷ வேளையில், இவ்விரு நந்திகளுக்கும் அபிஷேகம் நடைபெறும். இரட்டை நந்தி தரிசனம் சிறப்பான பலனை தரும்.இங்குள்ள மாதங்கீஸ்வரி அம்பாள், சரஸ்வதிக்கே குருவாக இருந்து உபதேசம் செய்தவள். பள்ளியில் சேர்க்கும் குழந்தைகளை பவுர்ணமி மற்றும் அஷ்டமி தினங்களில் அம்பாள் சன்னிதி முன், நாக்கில் தேன் வைத்து எழுதி, 'அக் ஷரபியாசம்' செய்கின்றனர். இவ்வாறு செய்வதால், அவர்களது கல்வி மேம்படும். திருமணத்தடை உள்ளவர்கள் அஷ்டமி தினத்தன்று, இவளுக்கு பாசிப்பருப்பு பாயசம் நைவேத்யம் செய்து, உரிக்காத மட்டைத் தேங்காயை சன்னிதியில் கட்டி வழிபடுகின்றனர்.இந்த ஊரில் இன்னொரு விசேஷம், 11 திவ்யதேசங்களும், ஒன்பது சிவாலயங்களும் உள்ளன; சிவனையும், இரட்டை நந்தியையும், பெருமாளையும் வழிபட, இங்கு சென்று வரலாம்!தி.செல்லப்பா