ஒன்றும் குறையில்லை!
''ரம்யா... சாயந்தர டிபனுக்கு அடைக்கு ஊற வைச்சிட்டா நல்லது,'' என்ற மாமியாரின் குரலை கேட்காதவள் போல, சமையல் மேடையை துடைத்தபடி இருந்தாள், ரம்யா.'இப்பத்தான் பகல் சாப்பாடு முடிஞ்சிருக்கு; அதுக்குள்ள சாயந்திரக்கவலை...' என்று சொல்ல வந்ததை அடக்கி, கோபத்தை காட்டுவது போல, 'லொட்' என்று, டம்ளரை மேடை கருங்கல்லில் வைத்தாள்.பார்வதிக்கா இதெல்லாம் புரியாமல் போகும்... ஒன்றும் சொல்லாமல், கூடத்துக்கு வந்தாள். கணவர் புத்தகத்தில் மூழ்கியிருக்க, 'டிவி'யை, 'ஆன்' செய்தாள். மதிய நேர சீரியலில், மாமியார் - மருமகள் வாக்குவாதம், நாராசமாக கேட்டது.அவளை ஓரக்கண்ணால் கவனித்த மகாதேவன், அவள் அமைதியாக இருப்பதைப் பார்த்து, புத்தகத்தை மூடி, ''பார்வதி... என்ன பிரச்னை?'' என்று கேட்டார். ''ஆமா... சொன்னா மட்டும் எனக்காக பரிஞ்சி பேசிடுவீங்களா... உங்க அருமை மருமகளுக்கு தான் வக்காலத்து வாங்குவீங்க. உங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறதால பசி தாங்காதேன்னு, சாயங்கால டிபனுக்கு அடைக்கு ஊற வைக்கலாமான்னு கேட்டேன்; அது ஒரு குத்தமா...'' புலம்பலாய் கேட்டாள்.''குத்தமில்லயே... ஏன் ரம்யா என்ன சொன்னா?''''வாயை திறந்து சொல்லணுமா... 'லொட்டு'ன்னு டம்ளரை வைக்கிறா...''''கை தவறி வைச்சுருக்கலாம்; சின்ன பெண் தானே... விடிந்தெழுந்தால், ரெண்டு கிழங்களுடன் மல்லுக் கட்டணுமே என்ற ஆயாசம் வர்றது சகஜம் தானே... எல்லாத்துக்கும் குற்றம் கண்டுபிடிச்சா எப்படி... குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை,'' என்றார். 'ஆமா... பள்ளிக் கூட வாத்தியாருங்கிறத காட்டுற மாதிரி இந்த மாதிரி பழமொழிக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல...' மனதுக்குள் சொல்லியவள், கோபத்துடன், தானும் ஒரு புத்தகத்தை எடுத்து பிரித்தாள். பார்வை புத்தகத்தில் பதிந்ததே தவிர, மனம் அதில் ஒன்றவில்லை. காரணம், சமையற்கட்டில், ரம்யா தன் அக்காளுடன் போனில் பேசுவது கேட்டது...''தருணுக்கும் லீவு ஆரம்பமாகப் போகுதுக்கா... அவனை அங்க கூட்டிட்டு வர்றது சந்தேகம்...'' எதிர்முனையில் அவள் அக்கா என்ன சொன்னாளோ... ''என்னக்கா புரியாத மாதிரி பேசுற... வீட்ல இருக்கிற பெரியவங்கள யார் பாத்துக்குறது... என் மாமியாருக்கு லோ பிபி; மாமனாருக்கு சர்க்கரை வியாதி. அவங்கள எப்படி தனியா விட்டுட்டு வர முடியும்...'' என்றாள்.சிறிது நேரத்துக்கு பின், ஹாலுக்கு வந்த ரம்யா, அங்கே தன் மாமனாரும், மாமியாரும் புத்தகத்தில் ஆழ்ந்திருப்பதை பார்த்தபடியே, மகன் வருணை பள்ளிக் கூடத்திலிருந்து அழைத்து வர, வாசலை நோக்கி சென்றாள்.''அம்மாடி ரம்யா...'' மாமனார் அழைக்கவும், ''சொல்லுங்க மாமா...'' என்று அருகில் வந்தாள்.சற்றுமுன் சமையற்கட்டில் டம்ளரை, 'லொட்'டென்று வைத்தவள், இப்போது, சாந்தமாக வந்து நிற்கவும், பார்வதிக்கு பற்றிக் கொண்டு வந்தது. 'இந்த காலத்து பெண்களுக்கு, நல்லா நடிக்க தெரியுது; நாம தான் அசடு...' என்று நினைத்தாள்.''ரம்யா... வருணை நான் போய் அழைச்சிட்டு வரேன்; நீ, இந்த வேகாத வெயில்ல போக வேணாம்...''''வெயில் உங்களுக்கும் தானே மாமா...'' சிரித்தபடி கேட்டாள் ரம்யா.''குடை எடுத்துட்டுப் போறேன்; காலையில இருந்து பம்பரமா சுழன்று வேலை செய்றே... கொஞ்சம் நேரம் ஓய்வெடுத்துக்கம்மா. எனக்கென்ன இதைவிட பெரிய வேலை,'' என்று, குடையை எடுத்து, செருப்பை மாட்டினார். தன் கணவர், மருமகளிடம் காட்டிய கரிசனத்தால் எரிச்சல் அடைந்த பார்வதி, அதை தணிக்க தண்ணீர் குடிக்க, எழுந்து, சமையல் அறைக்கு போனாள். மேடை மீது, பாத்திரத்தில் அரிசி மற்றும் பருப்புகள் ஊறிக் கொண்டிருந்தன. மகாதேவன், வாசலில் இறங்க, மகன் மாதவனும், பேரன் வருணும் பைக்கிலிருந்து இறங்கினர்.''ஆபீசுல இன்னைக்கு வேலை அதிகமில்ல; அதான், அப்படியே தருணையும் கூட்டிட்டு வந்துட்டேன்,'' என்றான், மாதவன்.''தாத்தா...'' கூவிக் கொண்டு ஓடி வந்த தருண், அவரை இறுக கட்டிக் கொண்டான்.''தருண் கண்ணா... பரீட்சை எப்படி எழுதினே...'' என்று கேட்டார், மகாதேவன்.''தாத்தா... நீங்க வரும்ன்னு சொன்ன கேள்வியெல்லாம் வந்துருந்துச்சு; எல்லாம் நல்லா எழுதிட்டேன்.''''வெரிகுட்!''''அப்பா... நீங்க அவன் படிப்பை கவனிச்சுக்கிறதால நான் நிம்மதியா இருக்கேன்,'' என்றான் மாதவன்.''என்னப்பா செய்றது... ரம்யாவுக்கும் வீட்டு வேலை அதிகம்; நான் சும்மாத் தானே இருக்கேன்; இது கூட செய்யலன்னா எப்படி...''''அப்புறம், காலையில அண்ணன் போன் செய்தான்ப்பா.''''உள்ளூர்ல இருந்துட்டு போன் செய்றானா... நேரே வரமுடியாதா அந்த மகாராஜாவுக்கு...''''அண்ணன் சுபாவம் தெரிஞ்சது தானே...''''சரி... என்ன சொன்னான்?''''அவனை, ஆபீசுல ரெண்டு வருஷத்துக்கு அமெரிக்கா அனுப்புறாங்களாம்... அண்ணி, குழந்தைகளோட அவங்க அம்மா வீட்டுக்கு, பெங்களூருக்கு போறதால, வீட்டை வாடகைக்கு விடப் போறாங்களாம்.''''வீட்டை தம்பிக்கு கொடுத்தா என்னவாம்... உனக்கும் சொந்த வீடு கிடையாது; அதுக்கு உதவ, என் கைலயும் பணம் இல்ல...'' என்று புலம்பினார்.''விடுங்கப்பா... இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல...'' என்றவன், அம்மாவைப் பார்த்து, ''நீங்க ஏன்ம்மா டல்லா இருக்கீங்க?'' என்று கேட்டான். உடனே, பார்வதிக்கு துக்கம் பீறிட்டது. புடவை தலைப்பில் மூக்கை உறிஞ்சியபடி, ''ஒண்ணுமில்லப்பா... துப்பில்லாத எங்க நிலைமையை எண்ணிப் பாத்தேன்; துக்கமாய் வந்தது,'' என்றாள்.''வீடு, வாசல், பணம், பகட்டுன்னு இருக்குறது தான் வாழ்க்கை இல்ல; மன நிம்மதியோட வாழ்கிறது தான் நிறைவான வாழ்க்கைன்னு அப்பா அடிக்கடி சொல்வாரே... மறந்துட்டியாம்மா...'' என்றான், மாதவன், அவளை சமாதானப்படுத்தும் முயற்சியாக!மாலை அடை சாப்பிடும்போது, அது மென்னியைப் பிடித்தாலும், ஆஹா ஓஹோ என, மருமகளை புகழ்ந்தபடி சாப்பிட்ட கணவரை, வினோதமாய் பார்த்தாள் பார்வதி.'மணக்க மணக்க, மொறு மொறுவென்று அடையை வார்த்து போட்ட என்னை, வாழ்நாளில் ஒருநாள் கூட புகழ்ந்தது இல்ல. இந்த கல்லடைக்கு கவிதை பொழியிறாரே...' என்று எரிச்சலாக வந்தது. தனிமையில் கணவனிடம் குறைபட்டுக் கொண்ட போது, ''அடை சுமார் தான்; பாவம் ஏதோ அவளால முடிஞ்சத செய்து போடுறா... அதுல குத்தம் காணக் கூடாது; வார்த்தைகள் சிறகாக இருந்தால் தான், வாழ்க்கையில் உயரப் பறக்க முடியும். பாராட்டுகளும், புகழ்ச்சியும், ஒருத்தரை சிந்திக்கவும், திருந்தவும் வைக்கும்...'' என்றார், மகாதேவன்.''ஆஹா தெரியுமே... நீங்க இப்படித்தான் சொல்வீங்கன்னு... அன்பை, ஆயுதமா பயன்படுத்துற கலையை, உங்ககிட்டேயிருந்து நானும் பழகிக்கிறேன்,'' என்றாள் கிண்டலும், சிரிப்புமாக!அமெரிக்கா போகுமுன், தன் பெற்றோரை பார்க்க வந்தான், மாதவனின் அண்ணன். உடன், அவன் மனைவியோ, பிள்ளைகளோ வரவில்லை. தன் பேரப் பிள்ளைகள் பற்றி ஆர்வமாக விசாரித்த மகாதேவன், மகனிடம் தன் பேத்தியின் மொபைல் எண்ணை வாங்கி, அவளுக்கு போன் செய்தார். ''ஹாய் தாத்தா ஹவ் ஆர் யூ?'' என்றாள், பேத்தி.''நல்லா இருக்கேன்மா; பாட்டி, ரம்யா சித்தி, சித்தப்பா, உன் தம்பி தருண் எல்லாரும் இங்க இருக்காங்க... பேசுறியா செல்லம்?''''ஓ... நீங்க என்னோட பத்ரி தாத்தா இல்லையா, நான், அந்த தாத்தான்னு நினைச்சேன்.''''அதனால் என்னம்மா... நானும் உன் தாத்தா தானே... அவர், உன் அம்மாவைப் பெத்தவர்; நான், உன் அப்பாவைப் பெத்தவன்,'' என்றவர், ''பாட்டிகிட்ட பேசுறியா கண்ணு...'' என்றார்.''நோ நோ... நான், 'பேக்கிங்' செய்யணும்; பை பை...''''இரும்மா... தம்பிகிட்ட கொடு போனை, அவன் கிட்ட பேசணும்.''அவன், போனை வாங்கியதுமே, ''ஐ - பாட்ல பிசியா இருக்கேன்... பை...'' என்று சொல்லி, பட்டென்று தொடர்பை துண்டித்து விட்டான். தன் மன வேதனையை வெளிக்காட்டாமல், மகனிடம், ''சரிப்பா... ஜாக்கிரதையா போய் வா... உடம்பை கவனிச்சுக்கோ... முடிந்தால் போன் பேசு...'' என்றார், மகாதேவன். பார்வதியை பார்க்க வந்திருந்த அவள் சிநேகிதி, ''இதப் பார் பார்வதி... உன் பெரிய மருமகள் கை மீறிப் போயிட்டா. சின்னவளையாவது அடக்கி வச்சிக்க; அப்பத்தான் இந்த வீட்டுல நிரந்தரமா இருக்க முடியும்,'' என்று எச்சரித்தாள்.''நீ சொல்றதும் சரிதான்; பெத்து, வளர்த்து, ஆளாக்குகிற நம்ம புள்ளைங்கள; நடுவுல வர்ற இவளுங்க மாத்திடுறாளுக... இதுவரை, மாதவன் மாறல... ஆனாலும், பயமாயிருக்கு. கடைசி காலத்துக்கு எங்கே போறது...'' என்று கவலைப்பட்டாள். ''அதுக்கு தான் அசடாய் இருக்காதங்கிறேன்,'' என்றாள், சிநேகிதி.அதை ஆமோதிப்பது போல், தலையாட்டினாள், பார்வதி.காலை, 9:00 மணிக்கே அலங்கரித்து எங்கோ கிளம்பத் தயாராக இருந்தாள், ரம்யா. பொரிந்து தள்ள தன்னை தயார்படுத்தினாள், பார்வதி. அதற்குள், மாதவன், ''அம்மா... நேத்து ராத்திரி போன்ல, 'மெசேஜ்' வந்ததும்மா. நீங்க ரெண்டு பேரும் தூங்கிட்டு இருந்ததால சொல்ல முடியல. காலையில எழுந்ததும் நீங்க கோவில், அப்பா, 'வாக்கிங்' போயிட்டதால சொல்ல முடியல,'' என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே, 'வாக்கிங்' சென்றிருந்த மகாதேவன் வீட்டிற்குள் நுழைந்தபடி, ''என்னத்த சொல்ல முடியல...'' என்றார். அவரிடம் திரும்பிய ரம்யா, ''மாமா... உங்க பேரன் இன்னிக்கு, 'டிவி'யில சிறுவர் நிகழ்ச்சியில கலந்துக்குறான். பெற்றோர் கூட வரணும்ன்னு சொன்னதால் போறோம். திரும்பி வர எவ்வளவு நேரம் ஆகும்ன்னு தெரியல. அதனால தான், உங்களையும் அழைச்சிட்டுப் போகமுடியல; அதோட, அந்த நிகழ்ச்சி, 'லைவ் ரிலே' ஆக போவதால், வீட்ல யாராவது அதை, 'ரெகார்ட்' செய்தால் நல்லதுன்னு தோணிச்சு,'' என்றாள்.''ஆஹா... தருண்குட்டி, 'டிவி'ல என்ன பேசப் போறான்னு பாக்கணுமே... குறள், ஆத்திச்சூடி, நாலடியார் எல்லாம் நினைவில் இருக்கா கண்ணப்பா...'' என்ற பேரனிடம், வாஞ்சையாய் கேட்டார், மகாதேவன்.அதற்குள் பார்வதி, ''தருண்... நான் சொல்லிக் கொடுத்த தேவாரப் பாட்ட அங்க சொல்லணும்,'' என்றாள்.''கண்டிப்பா பாட்டி... எல்லாம் சொல்வேன் வரட்டுமா...'' என்று கேட்டு, அவர்களின் காலில் விழுந்து வணங்கினான், தருண்.நிகழ்ச்சி ஒளிப்பரப்பாவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பே, பார்வதியும், மகாதேவனும், 'டிவி' முன் அமர்ந்தனர்.பெருமை வழிய, ''தருணுக்காக இன்னைக்கு பால் பாயசம் செய்து வச்சுருக்கேன்,''என்றாள் பார்வதி.''வெரிகுட்... நான் நம்ம சொந்த பந்தங்களுக்கெல்லாம் சொல்லிட்டேன். ஆனாலும், உன் மூத்த மருமக, டூர் போயிட்டாளாம்; பேத்தி, மால் போறாளாம் பார்க்க முடியாதுன்னுட்டா. பேரன், ஐ - பாடில் ஐக்கியமாயிட்டான் போல!''''ஐந்து விரலும் ஒண்ணாவா இருக்கு... மாதவன் இப்படின்னா, மூத்தவனும் அவன் குடும்பமும் அப்படி இருக்காங்க...''''யார் எப்படி இருந்தாலும், நாம் நாமாக இருப்போம். அன்பை கொடுப்பது இழப்புன்னா நிறைய இழப்போம். ஒண்ணும் குறை இல்ல.''''சரி தான்... உங்க சொற்பொழிவை ஆரம்பிக்காதீங்க,'' கிண்டல் கலந்த சிரிப்போடு சொல்லி, தொலைக்காட்சியை பார்க்க ஆரம்பித்தாள், பார்வதி.நிகழ்ச்சி ஆரம்பமானது.மேடையில், ஏழெட்டு நாற்காலிகள் போடப்பட்டு, அதில், தருணைப் போல, ஏழு வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் உட்கார்ந்திருந்தனர். நடுநாயகமாய் ஜம்மென்று தருண் அமர்ந்திருந்ததைப் பார்த்து, மகாதேவனும், பார்வதியும் ரசிக்க ஆரம்பித்தனர். தருண், திருக்குறள் சொல்வதையும், ஆத்திச்சூடி ஒப்புவிப்பதையும் நிகழ்ச்சி தொகுப்பாளர் மிகவும் பாராட்டினார்.கடைசியில், ஒவ்வொரு குழந்தையிடமும், ''எதிர்காலத்தில் நீங்கள் என்னவாகப் போறீங்க...'' என்று கேட்டார் தொகுப்பாளர்.ஒரு குழந்தை, ''அம்மா போல டாக்டராவேன்,'' என்றது.இன்னொரு பையன், ''அப்பா போல வக்கீலாவேன்,'' என்றான்.''விஞ்ஞானி ஆக ஆசை...'' என்றாள், மற்றொரு சிறுமி.சுட்டியாய் தெரிந்த பையன், ''நான், என் அப்பாவைப் போல வியாபாரம் செய்து, நிறைய சம்பாதிப்பேன்...'' என்று இரு கைகளையும் விரித்தான்.தருணின் முறை வந்தது. 'டிவி' பார்த்துக் கொண்டிருந்த மகாதேவன், மனதுக்குள், 'என் பேரன் கெட்டிக்காரன்; அவன், என்னைப் போல கல்விப் பணிக்கு வருவேன்னு சொல்லப் போகிறான்...' என நினைக்க, பார்வதி, 'தருணுக்கு ஏரோபிளேன்னா விருப்பம்; அதனால் பைலட்டா வருவேன்னு சொல்வான்...' என நினைத்தாள். புன்னகை தவழும் முகத்துடன், எல்லாரையும் பார்த்த தருண் பின், ''நான் பெரியவன் ஆனதும், என் படிப்புக்கேத்த நல்ல வேலைக்கு போவேன்; எங்கம்மாவும், அப்பாவும், என்னோட தாத்தா பாட்டியை கூடவே வச்சுருக்கிற மாதிரி நானும், என்னுடைய அப்பா, அம்மாவை என் கூடவே வைச்சு, நல்லா கவனிச்சுக்குவேன்,'' என்றான்.உடனே, எல்லாரும் சந்தோஷத்துடன் எழுந்து நின்று, கை தட்டினர். நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தவர்களும், தருணை, தங்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடினர்.''அருமையான பதில்; இந்த சிறுவனை பெற்ற பாக்கியசாலிகள், மேடைக்கு வரவும்,'' என்று அழைத்தார், நிகழ்ச்சி தொகுப்பாளர்.மாதவனும், ரம்யாவும் கூச்சத்துடன் மேடைக்கு வரவும், தொகுப்பாளர் நெகிழ்ச்சியுடன், ''இப்படி ஒரு உத்தமபுத்திரனை பெற்றுள்ள நீங்க, இதுக்காக பெருமைப்படணும்,'' என்றார்.''குடும்பத்துக்கு வேராக இருக்கிற பெரியவங்களை பேணிக் காக்கிறது ஒவ்வொருவரின் கடமை; அதைத் தான் செய்கிறோம். மற்றபடி இதுல பெருமைப்பட ஏதுமில்லை,'' என்றாள் ரம்யா பணிவாக!''அதில்லம்மா... இந்தக் காலத்தில் கூட்டுக் குடும்பமே அரிதாகி வரும் நிலையில, நீங்க பெரியவங்களை வைத்துக் காப்பாத்தறது கடமை என்றாலும், அதை சுமையா நினைக்காமல் செய்வதை, உங்க மகனின் பேச்சு நிரூபிக்கிறது. எதை விதைக்கிறோமோ, அது தான் முளைக்கும் என்பது நிதர்சனமாய் இங்கே தெரிகிறது. உங்களுக்கு, எங்கள் தொலைக்காட்சி சார்பில் பாராட்டுகள்,'' என்றார், தொகுப்பாளர்.இத்தனையையும் பார்த்து மனம் நெகிழ்ந்த மகாதேவன், மனைவியிடம், ''பாத்தியா பார்வதி... காசும், பணமும், வீடும், காரும் இந்தப் பாராட்டையும், புகழையும் கொடுக்குமா... நம்ம பையனும், மருமகளும் நம்மைத் தாங்கணும்ன்னா, நாமும் வளைந்து கொடுக்கணும், குலை தள்ளின வாழை போல...'' என்றார்.அப்போது, தொலைபேசி ஒலித்தது. ரிசீவரை எடுத்து, ''ஹலோ...'' என்றதும், எதிர்முனையில். ''யாரு பார்வதியா... நான் சொன்னதை ஆலோசனை செய்தாயா... பத்து வருஷமா அசடா இருந்தது போதும்; இனியாவது, நான் சொன்னபடி அதிகாரமாய் நடந்து, உன் ஆட்சியைப் பிடிக்கணும், தெரிஞ்சிதா...'' என்ற சிநேகிதியின் கேள்விக்கு பதில் சொல்லாமல், 'பட்' என்று ரிசீவரை கீழே வைத்தாள் பார்வதி.''யார் போன்ல...'' மகாதேவன் கேட்கவும், ''ஏதோ ஒரு அசடு,'' என்றாள் பார்வதி!என். ஷைலஜா