உள்ளூர் செய்திகள்

திறந்த மனம்!

விடாமுயற்சி, பொறுமை, எண்ணத்தில் தீவிரம், அழுத்தம்... இவை இருந்தால், தடை செய்ய யாருமேயில்லை; தெய்வமே வந்து உதவி செய்யும் என்பதை விளக்கும் வரலாறு இது:கீர்த்தனைகள் -பாடல்கள் இயற்றிப் பாடுவதில் மிகவும் வல்லவரான அடியார் ஒருவர், திருவாரூரில் இருந்தார். பல கோவில்களுக்கும் சென்று, அங்கே எழுந்தருளி இருக்கும் தெய்வங்களை பாடுவதற்காகவே வாழ்க்கை என்று, வாழ்ந்த உத்தமர். திருவாரூரில் இருந்த அடியார், அருகில் உள்ள கீழ்வேளூர் எனும் திருத்தலத்திற்குச் சென்றார். அங்கே மிகப்பழமையான சிவாலயம் உள்ளது. ஆகாயலிங்க வடிவாகக் காட்சி தரும் சிவபெருமானைத் துதித்து, 'அக் ஷயலிங்க விபோ' எனும் கீர்த்தனையை இயற்றிய அடியார், அப்பாடலைப் பாடுவதற்காக, கோவிலுக்கு சென்றார். அடியார் போன நேரம், கோவிலின் கருவறைக் கதவுகளை மூடிக் கொண்டிருந்தார், அர்ச்சகர். அவரை நெருங்கிய அடியார், 'சுவாமி... திருவாரூரில் இருந்து, இங்கே சுவாமி தரிசனம் செய்வதற்காகவே வந்திருக்கிறேன். தயவுசெய்து தாங்கள், கர்ப்பக்கிரகத்தின் கதவுகளைச் சற்றுநேரம், திறந்து வைக்கும்படி வேண்டுகிறேன்...' என்றார்.'தரிசனம்தானே... தாராளமாகச் செய்யலாம்! சுவாமி எங்கே ஓடிவிடப் போகிறார்... நாளைக்குக் கூட, தரிசனம் செய்யலாமே...' என்றார், கேலியாக, அர்ச்சகர். அதைக்கேட்ட அடியார், கொஞ்சம் கூடப் பொறுமை இழக்கவில்லை; கோபம் கொள்ளவில்லை; அங்கேயே உட்கார்ந்து விட்டார். சிவபெருமான் மீது, தான் எழுதிய கீர்த்தனையைப் பாட துவங்கினார். அதை எதிர்பார்க்காத, அர்ச்சகர் திகைத்தார்.அதற்குள்ளாக, அடியாரின் குரல் இனிமையையும், ஆத்மார்த்தமான அவரது சங்கீதத்தையும் கேட்டு, ஊர் மக்கள் அனைவரும் கோவிலில் கூடி விட்டனர். அவர்களோடு சேர்ந்து அர்ச்சகரும் மெய்மறந்து, சங்கீதத்தை ரசிக்கத் துவங்கி விட்டார். சற்று நேரம் ஆனது. அடியார் கீர்த்தனையைப் பாடி முடிக்கும் நேரம், அனைவரும் வியக்கும் வண்ணம், கர்ப்பக்கிரகத்தின் கதவுகள் தாமே திறந்தன; சுவாமியின் திருவடிவம் தெளிவாகத் தெரிந்தது. அனைவரும் சிவ நாம கோஷம் இட்டனர். அர்ச்சகரோ, அடியாரின் திருவடிகளில் விழுந்து வணங்கி, மன்னிக்கும்படி வேண்டினார். அவரை ஆசிர்வதித்த அடியார், திருவாரூர் திரும்பினார். 'அக் ஷயலிங்க விபோ' எனும் கீர்த்தனையைப் பாடி, அரனின் கருவறைக் கதவுகளைத் தாமே திறக்குமாறு செய்த அந்த அடியார், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான, முத்துசுவாமி தீட்சிதர்.ஆம்... தெய்வத்தைப் பல வடிவங்களிலும் நேருக்கு நேராகத் தரிசித்து, கீர்த்தனை- பாடல்கள் பாடிய ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதர் தான், அவர். அவருடைய துாய்மையான பக்தியும், பொறுமையும், விடா முயற்சியும், தீவிரமான அழுத்தமும் தான், அவர் எண்ணியதை அப்படியே நிறைவேற்றி வைத்தன; தன் சன்னிதிக் கதவுகளைத் திறந்து, தரிசனமும் செய்ய வைத்தது, தெய்வம்.தீட்சிதர், அப்போது பாடிய, 'அக் ஷயலிங்க விபோ' எனும் கீர்த்தனை, மிகவும் பிரபலமானது.பி.என். பரசுராமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !