உள்ளூர் செய்திகள்

நம்முடைய இரண்டாவது ஜாதகம்!

'எனக்கா ஜாதகமா... சுத்தமாக நம்பிக்கை இல்லை..' என்பவர்களும் இதை படிக்கலாம்.முதல் ஜாதகம், சாதகமாக அமையாவிட்டாலும் பரவாயில்லை; இரண்டாவது ஜாதகமாவது, சரியாக இருக்க வேண்டும்.'பிறந்த நேரம், துல்லியமாக குறிக்கப்படாவிடில், பிறப்பு பற்றிய குறிப்புகள் சரியாக தரப்படாவிட்டால், இவையும், பிறவும் துல்லியமாக இல்லை என்றால், பலன்களும் சரிவர அமையாது...' என்கின்றனர் ஜோதிடர்கள்.'சொன்னது நடக்காவிடில், ஜாதகர்கள் கொடுத்த குறிப்புகளில், தவறு இருக்கிறது...' என்று பொருள் என்பதும், இவர்களது வாதம்!பிரசவ வார்டிலிருந்து, நர்ஸ் தாமதமாக வெளி வந்து, அவர் சொல்லும் நேரத்தில், தவறு இருந்து விட்டால், பிரசவ வார்டில் கடிகாரம் தவறுதலாக நேரம் காட்டினால், ஒருவரது ஜாதகமே பொய்த்து போகும் என்றும் அடுக்குகின்றனர்.சிரசு (தலை) வெளிவரும் நேரம் தான், பிறப்பு நேரம் என்றும், தொப்புள் கொடி துண்டிக்கப்படுகிற நேரமே, பிறப்பு நேரம் என்றும் உள்பட்டிமன்றம் ஒன்றும் நடந்தபடி இருக்கிறது; நமக்கு இது முக்கியமில்லை.எனவே, நாம் பேசாமல், இரண்டாவது ஜாதகத்திற்குள் சென்று விடுவோம்.அதென்ன, இரண்டாவது ஜாதகம்...நம்மை சுற்றி உள்ள ஒவ்வொருவரும், நம்மை பற்றிய, இரண்டாவது ஜாதகம் ஒன்றை வைத்திருக்கின்றனர் என்பது உங்களுக்கு தெரியுமா?'அந்தாளை பத்தி என் கிட்ட பேசாதீங்க...' என்று ஒருவர் பெயர் வாங்கினால், அதை, இரண்டாவது ஜாதகம் என்பேன்.'சுட்டு போட்டாலும், அந்தாளுக்கு புத்தி வராது; நாணயம்ன்னா வீசை என்ன விலைன்னு கேட்பான்...''சரியான கிரிமினல்; அவனிடமா வரவு, செலவு...''சரியான கஞ்ச பயல்... எச்சக்கையால் காக்காய் ஓட்ட மாட்டான்; அவனிடம் ஒண்ணுமே பெயராது...''அவன் தோலிருக்க சுளை முழுங்கியாச்சே...''முழு பூசணிக்காயை, சோற்றில் மறைக்கிற ஆளாச்சே...' - இதுபோன்ற கேலிகளும், இரண்டாவது ஜாதகத்தில் சேர்க்கப்பட வேண்டிய ரகங்களே!'அந்தாள் வீட்டிலயா சம்பந்தம் செய்யப் போறீங்க... பார்த்து செய்யுங்க...' என்கிற, இரண்டாவது ஜாதக குறிப்பு, ஒரு திருமணத்தையே நிறுத்திவிட வல்லது; முதல் ஜாதகத்தை விட வலுவானது.பல நேரங்களில், நம்மை பற்றி, மற்றவர்கள் கணிக்கும் கணிப்புகள், முதல் ஜாதகத்தை விட துல்லியமானவை.நம்மை பற்றிய முதல் ஜாதகத்தை, தனி ஒரு ஜோதிடர் மட்டும் தான் பார்ப்பார். தொழில் தர்மப்படி, பிறரிடம், நம் ஜாதக குறிப்புகளை, பெரும்பாலும், வெளியே கூற மாட்டார்.ஆனால், இரண்டாவது ஜாதகம் இருக்கிறதே, இது, தண்டோரா போடப்படாத குறை தான்.பார்வையற்ற நான்கு பேர் யானையை உணர்ந்த கதை உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.அப்படி, நம்முடைய உண்மையான ஜாதகம் எப்படியாயினும், பிறர் பார்க்கும் பார்வையில், நாம் வேறானவர்களாக காட்சியளிக்கிறோம். சமுதாயம், பொறாமை கண்களோடும், அறியாமையிலும் நம்மை விமர்சித்தால், அவற்றை பொருட்படுத்த வேண்டாம்.அதேநேரத்தில், நம்மைப் பற்றி, இரண்டாவது ஜாதகம் உருவாகாமலிருக்க, நாம் என்ன செய்ய வேண்டும்?மகாநதியாக, ஆறாக, ஓடையாக ஏன் சாக்கடைக் கால்வாயாகக் கூட இருக்கட்டும்; இவற்றை வழி நடத்துபவை கரைகளே! இச்சமுதாயம், அது சொல்லி தரும் நடைமுறைகள், அது ஊட்டிய கல்வி மற்றும் கற்பித்த பண்பு ஆகியவற்றை விட்டு விலகாத நம் போக்கு தான், நம்மை நன்கு வழிநடத்த வல்லவை.'இச்சமுதாயம், என்ன வேண்டுமானாலும், பேசி விட்டு போகட்டும்; அதை பற்றி எனக்கு கவலையில்லை...' என்று உதாசீனப்படுத்துவோர், பாதை தவறுகின்றனர்; தாங்கள் செய்யும் தவறுகளை, நியாயப்படுத்தவும் பார்க்கின்றனர்.நம்மை பற்றிய இரண்டாவது ஜாதகம் உருவாகாமல் இருக்க, மூன்று வழிமுறைகள் உள்ளன.முதலாவது, நம்மை சுற்றியுள்ள சமூகத்தின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப, ஈடுகட்டும்படியாக நடந்து கொள்வது; நம் மனசாட்சிக்கு மதிப்புக் கொடுப்பது; அடுத்தது, சொல்லுக்கும், செயலுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதோடு, இரண்டுக்கும் நடுவே முரண்பாடு இல்லாமல் பார்த்து கொள்வது.இந்த மூன்றையும் பின்பற்றினால், நம்மை பற்றி விமர்சிப்பவர்கள் வாயில், 'பிளாஸ்த்ரி' தான் இருக்கும்!லேனா தமிழ்வாணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !