உள்ளூர் செய்திகள்

சொந்தமாக ஒரு ரயில்!

தங்களுடைய சொந்த உபயோகத்திற்கென்று கார் மற்றும் பஸ் வைத்திருப்போர் பலர்; சிலர், விமானம் கூட வைத்துள்ளனர். ஆனால், ரயில் வைத்திருந்தவர் பற்றி கேள்விப்பட்டிருக்கீறிர்களா? சென்னையில், சிவப்பு நிறத்திலுள்ள, பிரசித்தி பெற்ற, பல கட்டடங்களை உருவாக்கிய கட்டட மேதை, தாட்டிகொண்ட நம்பெருமாள் செட்டியார் தான் அவர்.கடந்த, 18ம் நூற்றாண்டில், ஆங்கிலேயர்களுக்கு கிடைத்த, 'பில்டிங்' கான்ட்ராக்டரான இவரால் கட்டப்பட்டவை தான், பாரிமுனையில் உள்ள உயர்நீதிமன்றம், சட்டக்கல்லுாரி, எழும்பூரில் உள்ள சிற்பக்கலை கல்லுாரி, மியூசியம் மற்றும் கன்னிமாரா நூலகம்.இவர் வாழ்ந்த வீடு, 'வெள்ளை மாளிகை' என்ற பெயரில், சேத்துப்பட்டு, மேம்பாலம் அருகில், மேத்தா மருத்துவமனையின் பின்புறம் உள்ளது. மூன்று மாடிகள், 30 அறைகள் கொண்ட இம்மாளிகை தற்போது, அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.சீனா, ஜப்பான், இத்தாலி மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள, 'பீங்கானில்' செய்யப்பட்ட, அரிய கலைப் பொருட்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன.எழும்பூர் பாந்தியன் சாலையிலிருந்து, ஹாரிங்டன் சாலை வரை உள்ள நிலப்பரப்பு, இவருக்கு சொந்தமாக இருந்தது. அதனால், அது, 'செட்டியார் பேட்டை' என, அழைக்கப்பட்டது.நாளடைவில், 'செட்டிபேட்டை' என மருவி, இன்று, 'சேட்பெட்' என மாறிவிட்டது.ஆங்கிலேயர் பலருக்கு வீடு கட்டி தந்த நம்பெருமாள் செட்டியார், தன் சொந்த உபயோகத்துக்காக, நான்கு பெட்டிகள் கொண்ட தனி ரயில் வண்டி ஒன்றை வைத்திருந்தார்.தன் குடும்பத்தினரோடு திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்குச் சென்று வர, இந்த ரயிலை உபயோகித்தார்; மற்ற நேரங்களில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தான், இவருடைய ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !