திண்ணை
மகாத்மா காந்தி, தமிழகத்திற்கு ஒருமுறை விஜயம் செய்தபோது, அவருடன் பயணித்து, அந்த அனுபவங்களை, 'தமிழ்நாட்டில் காந்தி' என்றொரு நூலாக எழுதினார், அந்நாளைய காங்கிரஸ் பிரமுகர், டி.எஸ்.எஸ்.ராஜன். அதில் ஒரு சம்பவம்...செட்டிநாட்டில் அமராவதி புதூரில், ராய சொக்கலிங்கம் பங்களாவில், சாயங்கால ஆகாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காந்திஜியை காண வேண்டுமென மன்றாடி, கைரேகை பார்க்கும் நிபுணர் ஒருவர், தம் நற்சாட்சிப் பத்திரங்களை ஒரு மூட்டையாகக் கட்டி, தலைவாசலில் நின்றார். வேகமாக உள்ளே நுழைய எத்தனித்த அவரைத் தடைசெய்து, 'ஐயா... என்ன வேண்டும்? எங்கே போகிறீர்கள்?' என்றேன்.'மகாத்மாவின் கை ரேகையைப் பார்க்க வேண்டும்' என்றார். அவரை அவ்விடமே இருக்கச் செய்து, உள்ளே சென்று மகாத்மாவிடம் சங்கதியைச் சொன்னேன்.கிச்சிலி (பம்பிளிமாஸ்) பழத்தை உறிஞ்சிக் கொண்டே விஷயத்தைக் கேட்டு, 'ஆயிரம் ரூபாய் கொடுத்தால், என் கைரேகையைப் பார்க்கலாம்...' என்று சொல்லும்படி உத்தரவிட்டார் காந்திஜி.ஜோதிடரிடம் இதைச் சொன்னதும், 'ஐயா, நானே பிச்சைக்காரன், என்னிடத்தில் ஒரு பைசா கூட இல்லை. ஆனாலும், மகாத்மாவின் கைரேகைகளைப் பார்த்தே தீர வேண்டும் என்கிற வைராக்கியம் எனக்குத் தலைக்கேறி விட்டது. நான் இந்த இடத்தை விட்டுப் போக மாட்டேன் என்று மகாத்மாவிடம் சொல்லுங்கள்...' என்று சொல்லி, அங்கேயே உட்கார்ந்து விட்டார்.திரும்பவும் உள்ளே சென்றேன். சமாசாரத்தைச் சொன்னேன்... 'ஆயிரம் ரூபாய் கொடுத்தே தீர வேண்டும் என்ற பைத்தியம், என் தலைக்கேறி விட்டதென்று சொல்லி விடு...' என்று பதிலளித்து விட்டார் காந்திஜி.இந்த பதிலைக் கேட்ட ஜோதிடர், காந்திஜியின் பைத்தியத்திற்கு முன், தன் பைத்தியம் செல்லாதென்பதைக் கண்டு, மூட்டையைக் கட்டி வெளியே கிளம்பினார்.***அண்ணாதுரை முதல்வரானதும், சென்னையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தினார். இதற்காக, சென்னைக் கடற்கரையில் கண்ணகி, அவ்வை, வீரமாமுனிவர், இளங்கோவடிகள் உள்ளிட்ட பத்து பேருக்கு சிலை எழுப்பினார். அப்போது சிவாஜி கணேசன், காங்கிரஸ் கட்சியில் இருந்தார். இருப்பினும், அண்ணாவின் வேண்டுகோளை ஏற்று, திருவள்ளுவர் சிலையை முழுவதும், தன் சொந்த செலவில் செதுக்கித் தர சம்மதித்தார், சிவாஜிகணேசன். ***நடுத்தெரு நாராயணன்