திண்ணை!
லட்சக்கணக்கான வாசகர்களை கொண்ட அமெரிக்கப் பத்திரிகை ஒன்றில், அரசியல் தலையங்கங்களை, மக்கள் எப்படி படிக்கின்றனர் என்பதை அறிய, ஒரே தலையங்கத்தைத் தொடர்ந்தாற் போல், மூன்று நாட்களுக்கு வெளியிட்டிருந்தது. யாரும் அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அடுத்து, இன்னொரு சோதனை செய்தனர். முதல் நாள் வெளியிட்ட கேலிச் சித்திரம் ஒன்றை, இரண்டாவது நாள் வெளியிட்டு பார்த்தனர். அவ்வளவு தான், ஆயிரக்கணக்கான கண்டனக் கடிதங்கள் வந்து குவிந்து விட்டன!*** சுடுகாட்டில் அந்த சடலம் கொண்டு வந்து வைக்கப்பட்டது.சிதைக்குத் தீ மூட்டியதும், சடலம் சூடுபட்டு நரம்புகள் முறுக்கேறி, பிரேதம் எழுந்து உட்காரும். இதை, 'குறக்குளி இழுத்தல்' என்பர். அப்படி பிரேதம் எழுந்ததும், வெட்டியான்கள், அந்த உடலைத் தடியால் அடித்து, மீண்டும் படுக்கையில் கிடத்துவர்.ஒருமுறை, வட்டிக்காரனின் பிரேதம், தீ மூட்டப்பட்டது. பிரேதம் சூடு கண்டதும், குறக்குளி இழுத்து, எழுந்து உட்கார்ந்தது. உடனே வெட்டியான், 'வட்டி எல்லாம் வசூலாகி விட்டது!' என்றான்.மீண்டும் படுத்துக் கொண்டது பிரேதம், நிம்மதியுடன்!— கண்ணதாசன் சொன்ன குட்டிக்கதை.கங்கை ஆற்றில் தினமும், 300 லட்சம் காலன் கழிவுநீர் கலக்கிறது. தவிர, மனிதர்கள் சடலங்களை எரித்த, 300 டன் சாம்பலும், பாதி எரிந்த உடல் பகுதிகள், 150 டன்னும் போடப்படுகிறது. இறந்துபோன நாய், மாடு போன்றவற்றையும் ஆற்றில் தள்ளிவிட்டு விடுகின்றனர். சுற்றுச்சூழல் பற்றி ரொம்பவே கவலைப்படும் அரசு, இது பற்றி கண்டுகொள்வதே இல்லை.***அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவரும் பாடிய பாடல்களை இன்று, 'தேவாரம்' என்கிறோம். ஆனால், அன்று சம்பந்தர் பாடியவற்றை, 'திருக்கடைக்காப்பு' என்றும், திருநாவுக்கரசர் (அப்பர்) பாடியவற்றை, 'தேவாரம்' என்றும், சுந்தரர் பாடியதை,'திருப்பாட்டு' என்ற பெயராலும் அழைத்தனர்.***மழை பெய்யும் போது உண்டாகும் இடியால், நமக்கு நன்மையே உண்டாகிறது. மிக அதிகமாக விளைச்சலை தருகின்றன, இடி உண்டாகும் பிரதேசத்திலுள்ள பயிர் வகைகள். முக்கியமாக கோதுமை, பார்லி, சோளம் போன்றவை அதிக விளைச்சலை தருமாம்.இதுமட்டுமல்லாமல், இருபது முதல் இருபத்தைந்து நாட்கள் வரை, முன்னதாகவே அறுவடை செய்யக்கூடிய பக்குவத்தை அடைகிறது. இடி உண்டாகும் போது ஏற்படுகிற மின்காந்தமே இவற்றுக்குக் காரணம்.***தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்ட கலெக்டர்களை விட, கடலூர் மாவட்ட கலெக்டருக்கு தனிச்சிறப்பு உண்டு. அவர் தங்குவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள மாளிகை, 1716ல் ராபர்ட் கிளைவ் தங்கியிருந்த மாளிகை. இந்தத் தகவல் அங்குள்ள ஒரு சுவரில் பொறிக்கப்பட்டள்ளது.***எம்.ஜி.ஆர்., நடித்த, 'மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்' திரைப்படம், வெளியான சமயம் அது. மதுரையில் வெளியிடப்பட்ட அந்த படத்தை பார்க்க வந்த வெளியூர் ரசிகர் ஒருவர், டிக்கெட் கிடைக்காததால், சோகத்துடன் ஊர் திரும்பினார். திரும்பும் வழியில், லாட்டரி கடையில் வேண் டாவெறுப்பாக, ஒரு லாட்டரி சீட்டை வாங்கிச் சென்றுள்ளார்.அந்த சீட்டிற்கு முதல் பரிசாக, ஒரு லட்சம் ரூபாய் கிடைத்தது. அச்சமயம் தினசரிகளில், 'மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் பெற்றுத் தந்த ஒரு லட்சம்...' என்று, செய்தி வெளிவந்து இருந்தது.***பிரான்ஸ் நாட்டில், 1775ல், 16ம் லூயி மன்னனின் முடிசூட்டு விழா நடந்தது. இதை நேரில் காணும் ஆவலில், பிராண்ட் என்ற இளைஞன், 100 கி.மீ., தூரம் நடந்தே சென்று, அந்த விழாவைக் கண்டு வந்தான்.பதினெட்டு ஆண்டுகளுக்குப் பின், அதே மன்னனின் தலையை கில்லட்டின் என்ற எந்திரத்தில் வைத்துத் துண்டித்தவனும், அதே பிராண்ட் தான். கொலைக் களத்தில் அப்போது வேலை செய்து வந்தான் அவன்.***திருமணத்திற்கு முதல் நாள் இரவு, மாப்பிள்ளையை அருகிலுள்ள கோவிலிலிருந்து திருமண வீட்டுக்கு அழைத்து வருவது நெடுங்கால வழக்கம். இந்தியில், இந்த மாப்பிள்ளை அழைப்பை, 'பராத்' என்றும், சம்பந்திகள் தங்குமிடத்தை, 'ஜான் வாசா' என்றும் சொல்கின்றனர். மாப்பிள்ளையை அழைத்து போய், ஜான்வாசாவில் சேர்க்க வேண்டும் என்பது மாறி, ஜானவாசமாகி விட்டது.***ரஷ்யாவில் ஓடும் கிராண்ட் டாரன்ஸ் சைபீரியன் ரயில், உலகிலேயே அதிக தூரம் ஓடுகிறது. ஆரம்பத்திலிருந்து முடிவு நிலைக்குப் போய் சேர, ஏழு பகல், ஏழு இரவு ஆகிறது.***ஒரு முறை, ஒரு ஊரில் நடந்த கூட்டம் ஒன்றுக்குத் தலைமை தாங்க கி.வா.ஜகந்நாதனை அழைத்திருந்தனர்.கூட்டம் முடிந்த பின், பழங்களை ஒரு பையில் போட்டு அவரிடம் கொடுத்தனர். அந்த பையுடன் நின்ற கி.வா.ஜ., சொன்னார்: 'என்னை, 'தலைவனாகத் தலைமை தாங்க அழைத்து, 'பைய'னாக அனுப்புகிறீர்களே!'***ஆண் எழுத்தாளர்கள், பெண் பெயரில் கதை எழுதுவது இப்போது சாதாரணம். ஆனால், இந்த வழக்கத்துக்கு முன்னோடியாய் இருந்தவர் வ.வே.சு., அய்யர் என்றால், ஆச்சரியமாக இருக்கலாம். அவருடைய முதல் சிறுகதை, 'குளத்தங்கரை அரசமரம்' (தமிழின் முதல் சிறுகதையும் இதுவே.) 1915ல், 'விவேக போதினி' பத்திரிகையில் வெளிவந்தது. எப்படி? 'சு.பாக்கியலட்சுமி அம்மாள்' என்ற பெயரில்! வ.வே.சு., அய்யரின் மனைவி பெயர் அது.***நடுத்தெரு நாராயணன்