உள்ளூர் செய்திகள்

திண்ணை!

'என்னை, தமிழ் படிக்க திருவாவடு துறை ஆதீன வித்வான், ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம், என் தந்தை ஒப்படைத்தார். மாயூரத்தில் (மயிலாடுதுறை) சில நாட்கள் தங்கியிருந்து, அவ்வூரில் தமக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் சென்று, என்னை கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். அவர் அங்கிருந்த வரையில், சிறிய தகப்பனார் வீட்டில் ஆகாரம் உண்டு வந்தேன். எப்போதும், அந்த வீட்டில் உணவு கொள்வது உசிதமாக இராது என்று எண்ணி, என் தந்தையார் வேறு ஏற்பாடு செய்தார். மகாதானத் தெருவில் உள்ள வயதான பெண்மணி ஒருவர், அவ்வூர் உத்தியோகஸ்தர்கள் சிலருக்கும், பள்ளிக்கூட மாணவர்கள் சிலருக்கும் சமைத்துப் போட்டு, அதில் கிடைக்கும் வருவாயை கொண்டு, ஜீவனம் செய்து வந்தாள். அக்கிழவியிடம் சொல்லி, எனக்கு உணவு அளிக்கும்படி ஏற்பாடு செய்தார்.என் தந்தை, எனக்கு வேண்டிய பணத்தை என்னிடம் அளித்து, ஊருக்கு புறப்படும் தினத்துக்கு முதல் நாள் இரவு முழுவதும், எனக்குப் பலவிதமான போதனைகளைப் செய்தார்.புறப்படும் தினத்தன்று காலையில், என்னுடன் வந்து ஆசிரியரைப் பார்த்து,'நான், இன்று ஊருக்குப் போகலாமென்று இருக்கிறேன். விடை தர வேண்டும்... அயலூரில் அயலார் வீட்டில் எவ்வளவு காலம் இருப்பது... இங்கே, எனக்கு வேறு வேலை ஒன்றும் இல்லை. வந்த காரியம் ஈஸ்வர கிருபையாலும், உங்களுடைய தயவாலும் நிறைவேறியது. இவன், இனிமேல் விருத்தியடைவான் என்ற தைரியம், எனக்கு உண்டாகி விட்டது. என்னுடைய காரியங்களை போய் கவனிக்கிறேன்...' என்றார்.'சரி போய் வாருங்கள்...''இவனைப் பற்றி, இனிமேல் ஒரு கவலையுமில்லை என்று தெளிவாகத் தெரிந்தாலும், காரணமில்லாத துன்பமொன்று மனதில் உண்டாகிறது. இவனை நான், பிரிந்து இருந்ததே இல்லை. இவனுடைய தாய்க்கு, இவனை ஒரு நாள் பிரிந்திருந்தாலும், சகிக்க முடியாத துயரம் ஏற்படும். இப்போது, இவனைப் பிரிந்து செல்வதற்கு மனம் தயங்குகிறது. தனக்கு வேண்டிய காரியங்களை, பிறர் உதவியின்றி கவனித்துக் கொள்ளும் பழக்கம், இவனுக்கு இல்லை. தாங்கள், இவனை ஜாக்கிரதையாக கவனித்துக் கொள்ள வேண்டும்... எங்கள் ஸ்தானத்தில் இருந்து, இவனைக் காப்பாற்றுவது தங்கள் கடமை...'இப்படி சொல்லும் போது, என் தகப்பனார் கண்களில், கண்ணீர் துளிர்த்தது. அதுவரை, அவர் என்னைப் பற்றி வருந்தியதை நான் பார்த்ததில்லை. அவர் உள்ளத்துக்குள் மறைந்து கிடந்த அன்பு முழுவதும், அப்போது வெளிப்பட்டது. அவர் கண்களில் நீரைக் கண்டு, எனக்கும் மனம் கலங்கி, கண்ணீர் துளிர்த்தது.— உ.வே.சாமிநாதய்யர் ஒரு கட்டுரையில்...புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி. இவரது, 'தாய்' என்ற நாவல், உலகின் மூலை முடுக்கெல்லாம் பரவி உள்ளது. இவர், தன் பத்தாவது வயதிலேயே வாழ்க்கை நடத்த, வீட்டை விட்டு வெளியேறினார். தந்தை இறந்ததால் ஏற்பட்ட துயரமும், வறுமையும் அவரை விரட்டின; குழந்தைத் தொழிலாளியாக பல இடங்களில் வேலை செய்தார். தன் 24வது வயதில், இடுகாட்டுப் பிணங்களின் தலை மாட்டில் நின்று, கூலிக்குப் பிரார்த்தனை செய்யும் வேலை செய்தார். இது, ஆறு மாத காலம் மட்டுமே நீடித்தது. ஆனால், அது, அவரது வாழ்க்கையில் நெஞ்சுறுதியும், தெம்பும் பெற உரமூட்டியது. ***ராஜாஜி கைது செய்யப்பட்டு, ரயில் வண்டியிலேயே மாஜிஸ்திரேட்டை வைத்து விசாரணை செய்து, தண்டனையும் கொடுத்து, அதே ஸ்பெஷல் ரயிலில் அழைத்துச் சென்று, திருச்சி சிறையில் அடைத்தது வெள்ளையர் ஆட்சி.அந்த நிலையில், ஏப்., 30.,1930ம் தேதியிட்டு எழுதிய கடிதத்தில், 'ரயில் வண்டி, திருத்துறைப்பூண்டி, ஒன்பது மாத சிறைத்தண்டனை...' என்று ஆரம்பத்தில், ரயிலிலேயே எழுதுகிறார். மகள் லட்சுமியை, 'பிரியமுள்ள குழந்தாய்' என்று அழைத்து, 'இது, சேருவதற்கு முன், உனக்கு தந்தியில் செய்தி வந்து விடும். ஒன்பது மாத ஓய்வு, எனக்குக் கிடைத்துள்ளது. யுத்தம் வெற்றி பெற வேண்டும் என்று, பகவானைப் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். என் உடம்பு சரியாயிருக்கிறது. நான் திருச்சிராப்பள்ளி ஜெயிலில் இருப்பேன். இன்று, இரவு ஒன்பது மணிக்கு அங்கே சேருவேன்...' என்று எழுதியுள்ளார்.சிறை தண்டனை பற்றி ஒரு சிறு வர்ணனை கூட இல்லை. வழக்கமான ஒரு குறிப்பு - அவ்வளவு தான். ***நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !