திண்ணை
தினமும், இரண்டு மணி நேரம் திட்டமிட்டு வாழுங்கள். பத்திரிகை படிக்க, கடிதங்கள் எழுத, புத்தகங்களை ஒழுங்கு செய்ய, இப்படி இன்னன்ன காரியங்களை, இத்தனை நிமிடங்களில் செய்து முடிப்பது என்று, காகிதத்தில் குறித்து வைத்து, ஒன்றன் பின் ஒன்றாக, அவற்றை செய்து முடியுங்கள்.ஏதாவதொரு வேலை, பாதி முடிந்திருந்தால், அதை நீட்டிக்கக் கூடாது. அப்படியே நிறுத்திவிட்டு, குறித்து வைத்துள்ள அடுத்த வேலையில் குதியுங்கள். ஒரு நாளில், இரண்டு மணி நேரத்தை, இவ்வாறு ஒழுங்கு செய்து கொள்ளப் பழகியவுடன், கொஞ்சம் கொஞ்சமாக நாலு, ஆறு, எட்டு மணி நேரத்திற்கும், பின், நாள் முழுமைக்குமே, திட்டமிட்டு வேலைகள் செய்யலாம்.நேரத்தின் அருமை தெரியாமல், பழங்கதை பேசி நேரத்தை வீணடிப் பதும், அரை நாள் வேலையை, அரைமணி நேரத்தில் முடிக்கப் பறக்கும் பைத்தியக்காரத் தனத்தையும், போக்கிக் கொள்ள இந்த முயற்சி உதவும்!நாள் முழுமைக்கும், திட்டமிடுவது முடியக்கூடியதும் அல்ல; விரும்பத்தக்கதும் அல்ல. ஆனால், நடுநடுவே, இப்படி செய்து கொண்டால், வீணாகும் நேரத்தைப் பயனுள்ளதாக செலவழிக்கலாம்.- 'ஹவ் டு வின் 'ஆங்கில நூலிலிருந்து... 'நம் நாட்டு அரசியல், கழுதை புரண்ட களமாகி விட்டது. என்ன செய்தாவது, பதவிக்கு வர வேண்டுமென்று பாடுபடுகிறான். இன்னும், கொஞ்சம் நாள் போனால், தன் மனைவியை விட்டுக் கூட, ஓட்டு பெறுவான். அவ்வளவு கேவலமாகப் போய் விட்டது. 15 ஆயிரம், 20 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய் என்று, சாதாரண பஞ்சாயத்து தேர்தல் தலைவர் செலவு செய்கிறான். 'ஏண்டா இவ்வளவு செலவு செய்கிறாய்' என்றால், 'இதைப்போல், பல மடங்கு சம்பாதிக்கலாம்...' என்கிறான்.செப்., 9, 1970ம் தேதியிட்ட விடுதலை இதழில் இப்படி கூறியுள்ளார் ஈ.வெ.ரா.,-- மா.நன்னன் தொகுத்த, 'பெரியார் சிந்தனைகள்' நூலிலிருந்து...அண்ணாதுரையின் கருத்துக்களோடு, உடன்பாடு இல்லாதவர்கள் கூட, அவரது, எழுத்து நடையை ரசிக்கத்தான் செய்வர். 'திருமணம்' என்ற தலைப்பில், அவர் எழுதிய, கட்டுரையொன்றின் பகுதி இதோ:அந்தக் கல்யாணத்தைப் பார்த்தாக வேண்டும் என்று, எனக்குள் ஒரே துடிப்பு. கடன் வாங்கிக் கொண்டு, கிள்ளைக்கு, கிளம்பினேன். கல்யாணம் வேம்புக்கும், அரசுக்கும். கிள்ளையிலே முத்து, மாணிக்கம், மீனாட்சி, அருகம், அகிலாண்டம், இன்னாசி முத்து, இப்ராகிம், சோக்கன், மாரிமுத்து என்று, எனக்குத் தெரிந்த பலருக்கு, கல்யாணம் நடந்திருக்கிறது. நான் சென்றதில்லை. ஓய்வு ஏது? இங்குதான், 'சர்வ ஜன சகாய நிதி'யில், எனக்கு கடுமையான வேலையாயிற்றே! லீவு தருவாரா மானேஜர் மார்க்கபந்து சாஸ்திரி...இந்த வேம்பு, - அரசு கல்யாணத்தை மட்டும், எப்படியும் பார்த்துத் தீர வேண்டும் என்று ஒரே ஆவல். ஏன் என்கிறீர்களா? வேப்பம் செடிக்கும், அரசஞ் செடிக்கும் கல்யாணம். அது அடிக்கடி நடைபெறக் கூடியதா என்ன! தற்செயலாகத்தான், இந்தக் கல்யாண சேதி எனக்குத் தெரிந்தது. 'பலகணா'பத்திரிகையில், கொட்டை எழுத்தில், இந்தக் கல்யாண செய்தி வெளிவந்திருந்தது.இந்தக் கல்யாணத்திற்கு, தங்க நாணயம் தணிகாசலம் கச்சேரியாம், பொய்க்கால் குதிரையாம். போகர் பரம்பரை பொய்யா மொழியார், 'திரிசடையும் வரி சடையும்' என்ற தலைப்பில், காலட்சேபம் செய்கிறார். பாயசத்துடன் விருந்தாம். எல்லாம் பக்தர்கள் உபயமாம். இந்த பக்தியையும், அதை எடுத்துக் காட்ட, பணத்தை திரட்டும் பொறுப்பை, பூமிநாத முதலியார் ஏற்றுக் கொண்டிருக்கிறாராம்.இவ்வளவும், 'பலகணி'யில் வெளிவந்திருந்தது. இந்த வேம்பு - அரசு திருமணம், இனியும், நெடுங்காலத்துக்கு நடக்கப் போவதில்லை. கண் இருக்கும் போதே, பார்த்து விடுவோம் என்று, கிள்ளைக்குக் கிளம்பினேன்.நடுத்தெரு நாராயணன்