திண்ணை
தபால் ஆபீசுக்கு ஒரு கடிதம்... 'கடவுள், சொர்க்கம்' என்று, விலாசமிட்டு வந்திருந்தது. அனுப்பியவரின் முகவரி இல்லை. கடவுளுக்கு எப்படிக் கொண்டு போய் சேர்ப்பது... அனுப்பியவருக்கே எப்படி திருப்பி அனுப்புவது... கடிதத்தின் உள்ளே, அனுப்பியவரின் முகவரி இருக்கிறதா என்று பார்க்க. கடிதத்தை உடைத்தனர் தபால் அலுவலக ஊழியர்கள். உள்ளே முகவரியும் இருந்தது. அதை எழுதியவர், தன் கஷ்டத்தை எல்லாம் எழுதி, தனக்கு, 75 ரூபாய் பணம் அனுப்பும்படி, கடவுளிடம், உதவி கேட்டிருந்தார். படித்த, தபால் ஊழியர்கள் மனம் நெகிழ்ந்து, ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு, அவருக்கு, 60 ரூபாய் பணம் அனுப்பினர். இரண்டு நாளில், அவரிடமிருந்து மற்றொரு கடிதம். கடவுளுக்கு நன்றி தெரிவித்து எழுதப்பட்டிருந்தது. அதில், 'கடவுளே...தாங்கள் அனுப்பிய பணத்தில், 15 ரூபாயை, தபால் ஊழியர்கள் திருடிக் கொண்டனர்...' என்று குறிப்பிட்டிருந்தார்.- 'நகைச்சுவை, நிகழ்ச்சிகள்'நூலிலிருந்து...ஒரு கல்யாண வரவேற்பு நிகழ்ச்சியின் போது, கே.பி.சுந்தராம்பாளின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மேடையை சுற்றியிருந்தவர்கள், பூம்புகார் படப் பாடல்களை பாட வேண்டும் என்று, கூக்குரலிட்ட வண்ணமும், எழுதிக் கொடுத்த வண்ணமும் இருந்தனர்.உடனே, கே.பி.எஸ்., 'நீங்கள் பூம்புகார் கதையை அறிந்திருப்பீர்கள். கோவலனுடைய முடிவும் உங்களுக்கு தெரியும். ஆதலால், இக்குழந்தைகளை (மணமக்களை) ஆசிர்வதிக்கிற இந்நேரத்தில், அம்மாதிரியான பாடல்களை பாடக் கூடாது என்பது, என் எண்ணம். இவர்கள், நிறையக் குழந்தை குட்டிகளை பெற்று, சுகமாக வாழ வேண்டும் என்று, முருகனை வேண்டிக் கொள்கிறேன். ஆகவே, இன்று மட்டும் என்னை விட்டு விடுங்கள்...' என்று சொல்லி, 'பழம் நீயப்பா...' என்று, முருகனின் பாடல்களை பாட ஆரம்பித்தார். சபையில் ஏற்பட்ட கரவொலி ஆரவாரம் அடங்க வெகு நேரமாகியது.- 'சுவையான நிகழ்ச்சிகள்'நூலிலிருந்து...இலக்கிய கூட்டமொன்றிற்கு தலைமை தாங்கும்படி, கி.வா.ஜ.,வை அழைத்தார், ஒரு அன்பர்.'நான் சும்மா வந்து பேசிவிட்டுப் போகிறேன்...''ஏன் அப்படி சொல்கிறீர்கள்?''தலைமை தாங்குவதும், கேட் கீப்பர் வேலையும் ஒன்று தான்...''என்ன அப்படி சொல்லி விட்டீர்கள்!''வாயிற்காவலன் எல்லாருக்கும் முன் வந்து, வாயிலை திறந்து, உட்கார்ந்து கொள்ள வேண்டும். எல்லாரும் வந்து, செய்ய வேண்டியதை யெல்லாம் செய்யும் வரையில், பொறுமையாக காத்துக் கொண்டிருக்க வேண்டும். அனைவரும் புறப்பட்டு போன பின், வாயிலை மூட வேண்டும். தலைவன் வேலையும் இது தான். எல்லாருக்கும் முன்பாக, முதன் முதலில் வாயைத் திறந்து பேச வேண்டும். பேசுகிறவர்கள் ஒவ்வொருவராக வருவர்; பேசுவர். எல்லாவற்றையும், பொறுமையாக கேட்க வேண்டும். எல்லோரும் பேசிய பின், சபையினரும் எழுந்து விடுவர். அப்போது கடைசியாக வாய் திறந்து, பின்னுரை பேச வேண்டும்...' என்றார்.அண்ணாதுரை பார்லிமென்டின் மேல்சபை உறுப்பினராக இருந்தபோது, தமிழகத்தில் விலைவாசி உயர்வை எதிர்த்து நடந்த போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி, கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.அண்ணாதுரை கைதான வழக்கு, நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. வழக்கில், அண்ணாதுரை, தன் சார்பாக, தானே வாதாடினார். அண்ணாதுரையின் வாதத்தைக் கேட்க, நீதிமன்ற வளாகத்தில், ஆயிரக்கணக்கானோர் கூடி விட்டனர். நீதிபதியிடம் பல மேற்கோள்களையும், இதுபோன்ற முந்தைய போராட்டங்களில் அளிக்கப்பட்ட தீர்ப்புகளையும், சுட்டிக் காட்டினார்.'அண்ணாதுரை மேற்கோள் காட்டிய வழக்குகள் பற்றிய தீர்ப்புகள் அடங்கிய நூல் வேண்டும்...' என்று, நீதிபதியே கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.ஆனாலும், அண்ணாதுரை விடுதலை செய்யப்படவில்லை. அவருக்கு, பத்து வாரச் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.- 'அறிஞர் அண்ணா'நூலிலிருந்து...நடுத்தெரு நாராயணன்