திண்ணை!
இசை மேதைகளான அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் மற்றும் விசுவநாத அய்யருக்கு, ஒரு நிகழ்ச்சியில் பொன்னாடை போர்த்தும் போது, விழாவுக்கு தலைமை வகித்தவர், 'இப்போது அரியக்குடி, விசுவநாதய்யருக்கு, மேலுக்கு ஒரு பொன்னாடை போர்த்துவார்...' என்றார். உடனே விசுவநாதய்யர், 'மேலுக்கு இல்லை; உள்ளன்போடு தான்...' என்றார் சிரித்துக் கொண்டே! பாரதியார், 'சுதேச மித்திரன்' இதழில் பணியாற்றுகையில், நாற்காலியில் கால் மேல் கால் போட்டு, கம்பீரமாக அமர்ந்து, அடிக்கடி மீசையை முறுக்குவார். ஒருமுறை, கம்பாசிடர் எத்திராஜு நாயக்கர், 'சுவாமி... உங்களுக்கு மட்டும் எப்படி மீசை இப்படி முறுக்கி, கூராக நிற்குது...' எனக் கேட்க, 'ஜெர்மனி ராஜா கெய்சரோட மீசை இப்படித்தான் இருக்கும்; மீசையை முறுக்கு; ஆசையை நறுக்கு! நான் திருவல்லிக்கேணிவாசி. அங்கே பார்த்தசாரதிக்கு முறுக்கிய வெள்ளை மீசை; இந்த சுவாமிக்கு கருப்பு மீசை...' என்றார் பாரதி!பிரியா பாலு எழுதிய, 'பிரபலங்களின் வாழ்வில்' நூலிலிருந்து: நாடக எழுத்தாளரான, காசி விசுவநாத முதலியார், 1850களில் அடுக்கு மொழி வசனம் எழுதி, பெயர் பெற்றவர். 'தாசில்தார், டம்பாசாரி விவாகம் மற்றும் கூலிக்கு மாரடித்த கூத்தாடியின் நடிப்பு' போன்ற இவரது நாடகங்கள், அக்காலத்தில் பிரபலம். இவர் எழுதிய, டம்பாசாரி விவாகம் நாடகத்தில், கதிர்வேல் கவிராயர் என்ற புலவர், இன்னொருவரிடம் பேசும் போது கூறும் வசனம்:தங்கள் பெயர் டம்பர்; இங்கே இருப்பவர்கள் எல்லாம் வம்பர். நாமோ, கவியில் கம்பர்; தராசு செட்டியார் கவுன்சில் மெம்பர். தேவலோகத்தில் இருப்பவர் உம்பர்; கோட்டையில் அடிக்கிறது தம்பர். கடையில் விற்கிறது அம்பர்; கதவில் போடுவது நம்பர். மேடையில் ஆடுபவர் தொம்பர்! 'சங்கீதச் சிரிப்பு' நூலிலிருந்து: ஒரு கல்யாண வரவேற்பில், கச்சேரி செய்தார், மகாராஜபுரம் விசுவநாதய்யர். அவருக்கு மிருதங்கம் வாசித்த இளைஞன், புதிதாக வாசிக்கும் அமெச்சூர். ஆனாலும், கல்யாண வீட்டுக்காரரின் பிள்ளையின் சிபாரிசு காரணமாக, அவனை, மிருதங்கம் வாசிக்க அமர்த்திக் கொண்டார்.விசுவநாதய்யர் பாடலுக்கு, மிக மோசமாகவும், பாட்டுக்கு இடைஞ்சலாகவும் மிருதங்கம் வாசித்தான் அந்த இளைஞன்.பொறுமை இழந்தார் விசுவநாதய்யர். இடையில், மிருதங்கக்காரனின் தந்தை வந்து, 'பையனை தனியாக (தனி ஆவர்த்தனம்) வாசிக்கச் சொல்லுங்களேன்...' என்று கேட்டுக் கொண்டார்.'இவ்வளவு நேரம் அவன், என் பாட்டுக்கு எங்க வாசிச்சான்... அவன் பாட்டுக்கு, அவன் போக்கில் தனியாகத் தானே வாசிச்சான்...' என்றார் விசுவநாதய்யர்.சார்லி சாப்ளின், தன் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, ஈ ஒன்று, அவர் முகத்தையே சுற்றி வந்து தொந்தரவு செய்தது. பலமுறை, விரட்டிப் பார்த்தும், மீண்டும் மீண்டும் வந்தது.இதனால், ஈ ஓட்டும் மட்டையை எடுத்து, மறுபடியும் வந்தால், அதை அடிக்கக் காத்திருந்தார்.அப்போது, அவருக்கு எதிரே உள்ள மேஜை மேல் உட்கார்ந்தது ஈ. அதையே சற்று நேரம் உற்றுப் பார்த்து, 'சூ...' என்று விரட்டி விட்டார் சாப்ளின்.'ஏன் ஈயை அடிக்காமல் விரட்டி விட்டீர்கள்?' என்று கேட்டார் நண்பர்.'என்னை தொந்தரவு செய்த ஈ இதுவல்ல; அது வேறு ஈ...' என்றார் சாப்ளின்!நடுத்தெரு நாராயணன்