உள்ளூர் செய்திகள்

திண்ணை!

சென்னை, மண்ணடியில் உள்ள காஞ்சி சங்கராச்சாரியார் மடம் அருகில், பள்ளிவாசல் ஒன்று உள்ளது. ஒருமுறை மடத்தில் தங்கியிருந்தார் காஞ்சி மகாபெரியவர். வைகறை தொழுகையின் போது பள்ளிவாசலில் சொல்லப்படும் பாங்கு சத்தம், பெரியவரின் தூக்கத்திற்கு இடைஞ்சலாக இருக்குமோ என்று எண்ணிய பள்ளிவாசல் நிர்வாகிகள், மடத்தின் நிர்வாகிகளிடம் சென்று, 'அதிகாலை பாங்கு சத்தம் பெரியவருக்கு இடைஞ்சலாக இருக்கிறதா என்று கேட்டு சொல்லுங்கள்; நாங்கள் பாங்கு சொல்லும் போது மைக்கை, 'ஆப்' செய்து விடுகிறோம்....' என்று கூறியுள்ளனர்.அதற்கு பெரியவர், 'வேண்டாம்... அவர்கள் மைக்கை, 'ஆன்' செய்தே பாங்கு சொல்லட்டும். அந்த சத்தத்தை வைத்தே, தினமும் கண் விழித்து, என் கடமைகளை செய்ய ஆரம்பிக்கிறேன். பாங்கு சத்தம் எனக்கு இடைஞ்சல் இல்லை; உதவியாகவே இருக்கிறது...' என்று கூறியுள்ளார்.உண்மையான சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் வேறு இருக்க முடியுமா?ராணி மைந்தன் எழுதிய, 'மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.,' நூலிலிருந்து: ஏவி.எம்., நிறுவனம் தயாரித்த, அன்பே வா படத்தில் இடம் பெற்ற, 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்' பாடலும், அக்காட்சி படமாக்கப்பட்ட விதமும் குறித்து, ஏவி.எம்.குமரன் நினைவு கூர்கிறார்:அன்பே வா படத்தை எடுத்த போது, எம்.எஸ்.வி.யிடம் ஒரு பாடல் காட்சியை விளக்கி, 'இது கனவு சீன்...' என்றோம். நாலைந்து டியூன் அமைத்து காட்டியவர், 'ஹார்மோனியத்தை விட, பியானோவில் கம்போஸ் செய்தால் நன்றாயிருக்கும்...' என்று அபிப்ராயப்பட்டார். உடனே, பியானோவுக்கு ஏற்பாடு செய்தோம். டியூன் பிரமாதமாக அமைந்தது.இதை எப்படி படமாக்குவது என நினைத்த போது, அப்போது, டெஸ்டினேஷன் மூன் என்ற ஆங்கிலப் படம் சென்னையில் திரையிடப் பட்டிருந்தது. அதை பார்த்து, அதிலிருந்து கிடைத்த இன்ஸ்பிரேஷனில், கோச் வண்டியில் எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி பாடுவது போல, அந்த கனவு சீனை அமைத்தோம். இந்த ஐடியாவை எம்.ஜி.ஆரிடம் கூறியதும், அவர் மகிழ்ச்சியோடு, 'உங்கள் விருப்பம் போல் எடுங்கள்...' என்றார். உடனே என் சகோதரர் முருகன் மற்றும் எடிட்டர், ஆர்.ஜி.கோபாலும் மும்பை சென்று அக்காட்சிக்கு தேவையான, 'பேக் கிரவுண்ட் எபக்ட்' எல்லாம் செய்து வந்தனர். பாடல் காட்சி அற்புதமாக அமைந்தது.'சிக்கல் தீர்த்த செயல்வீரர்' நூலில் பேராசிரியர், அ.அறிவொளி எழுதியிருப்பது: லால் பகதூர் சாஸ்திரி இறந்தார் என்ற செய்தி கேட்டு, காங்கிரஸ் பொருளாளரான அதுல்யாவும், வங்க முதல்வரும், விமானத்தில் ஏறும் போதே, காமராஜரை எப்படியாவது பிரதமராக இருப்பதற்கு உடன்பட வைத்து விட வேண்டும் என்று எண்ணியுள்ளனர்.அதனால், முதலில், ராஜஸ்தான் முதல்வரையும், மத்திய பிரதேச முதல்வரையும் அழைத்து, இது குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார் அதுல்யா. பின், தம் வீட்டில் கிழக்கிந்திய முதல்வர்களிடம் பேசி, காமராஜரையே பிரதமராக்க முடிவெடுத்தார். இந்த முயற்சிக்கு, காமராஜர் இசைந்திருந்தால், தமிழர் ஒருவர் பிரதமராகப் பதவி வகித்த பெருமை நமக்கு கிட்டியிருக்கும். ஆனால், காமராஜரின் தன்னடக்கமும், கட்சியை பேணும் கவனமுமே இதற்கு குறுக்கே நின்றன.அதுல்யாவின் முயற்சியை, காமராஜரிடம் தெரிவித்தார், கர்நாடக காங்கிரஸ் தலைவர், நிஜலிங்கப்பா. 'இதெல்லாம் நடைபெறாத ஒன்று...' என்று மறுத்தார் காமராஜர். ஆனால், காமராஜரை ஓராண்டாவது பிரதமராக இருக்கும்படி கேட்டுக் கொண்டார் அதுல்யா; அவர் உடன்படவில்லை. பிடிவாதமாக வற்புறுத்தவே, 'பார்க்கலாம்...' என்று கூறினார். இந்தப் பதிலில், காமராஜர் முழுமையாக மறுக்கவில்லை என்பதால், இச்செய்தி வேகமாக பரவி, டில்லி எங்கும், எதிரொலித்தது.நீலம் சஞ்சீவ ரெட்டி, நிஜலிங்கப்பா மற்றும் மராட்டிய காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.பாட்டீல் ஆகியோர், இதை முழு வெற்றியாக்கி விடத் துடித்தனர்.காமராஜர் தம்மை பற்றிய செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்து, 'இந்தியாவின் பிரதமராக வரும் ஒருவருக்கு இந்தியோ, ஆங்கிலமோ சரளமாகப் பேச தெரிந்திருக்க வேண்டும்; ஆகவே, நான் பிரதமராக விரும்பவில்லை...' என்று கூறி விட்டார்.நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !