உள்ளூர் செய்திகள்

திண்ணை!

'கம்யூனிசம் என்பது பொதுவுடைமை; கேபிடலிசம் என்பது முதலாளித்துவம் என்பதெல்லாம் புரிகிறது. ஆனால், ஏதோ, 'பாஸிசம்'ன்னும், 'பாஸிஸ்ட்'ன்னும் திட்டுறாங்களே... ஒண்ணும் புரியலயே...' என்று தலையைச் சொறிந்தார், திண்ணை, 'பெரிசு' ஒருவர்.அருகிலிருந்த குப்பண்ணா சொன்னார்... 'ரோமாபுரி சக்கரவர்த்தி, தன் அரண்மனையை விட்டுப் புறப்படும் போது, ஒரு சேவகன், 'பாஸிஸ்' எனப்படும் குச்சிகளை ஒரு கற்றாக கட்டி சுமந்தபடி, அவருக்கு முன் செல்வானாம். நடுவில் கோடரி வைத்து, சிவப்புத் தோலால் கட்டப்பட்ட அந்தக் கம்புகள், வெண்கொற்றக் குடை, வெண்சாமரம் போல், ஆட்சியாளரின் அதிகாரத்திற்கான அடையாளம்.'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; கட்டுப்பாடே பலம்' என்ற கருத்துகளின் சின்னமாக கருதப்பட்டு, இன்றும் அது, அமெரிக்க நாணயமொன்றில் பொறிக்கப்பட்டுள்ளது.'கடந்த, 1919ல் இத்தாலி நாட்டில், புது அரசியல் கட்சியை நிறுவி அதற்கு, 'பாஸிஸ்ட்' என்று பெயர் சூட்டினார், முசோலினி. இவர், ஜனநாயக விரோதி; அடி உதவுவது போல அண்ணன் - தம்பி உதவ மாட்டான் என்ற கொள்கையை உடைய வன்முறையாளர்; எதையும் செய்யும் இதயம் உள்ளவர்; சிறந்த பேச்சாளர்.'தன், அபாரமான பேச்சாற்றலை கொண்டு, இத்தாலியை, பழைய ரோமாபுரி சாம்ராஜ்யத்தின் உன்னத நிலைக்கு உயர்த்த வேண்டும் என்று கவர்ச்சியாக பிரசாரம் செய்து, மக்களிடையே, ஒரு வெறியை ஊட்டினார். பின், 1922ல் ஆட்சியை கைப்பற்றி, 20 ஆண்டுகளாக, சர்வாதிகாரியாக அரசாண்டார்.'அவரும் சரி, அவரது வழியை பின்பற்றி, ஜெர்மனியில் நாஜி ஆட்சியை நிறுவிய ஹிட்லரும் சரி, அண்டை நாடுகளின் மீது படையெடுத்து, நாட்டை விஸ்தரிப்பது ஒன்றே அவர்களது லட்சியமாக இருந்தது.'ஒரு நாட்டை, மாபெரும் நாடாக ஆக்குவது என்றால், அதன் மக்களை நெட்டித் தள்ளியேனும், போர்க்களத்திற்கு அனுப்ப வேண்டும்; அதைத்தான் செய்யப் போகிறேன்...' என்பார், முசோலினி.'நிரந்தரப் போராட்டம், மனித இனத்தை, பலசாலி ஆக்கியிருக்கிறது; நிரந்தர சமாதானம், மனித இனத்தை அழித்துவிடும்...' என்பார், ஹிட்லர்.'இருவரும் சேர்ந்து, இத்தாலி மற்றும் ஜெர்மனியை மட்டுமில்லாது உலகின் பெரும் பகுதியை, அழிவுக்கு கொண்டு போகப் பார்த்தனர். ஹிட்லரும், முசோலினியும் மறைந்து, 70 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. ஆனாலும், சுயநலமிகளையும், பிற்போக்குவாதிகளையும், 'பாஸிஸ்ட்டு'கள் என்று குறிப்பிட்டு பழிப்பது, வழக்கமாகி விட்டது...' என்றார்.'ஆரோக்கிய வாழ்விற்கு...' நூலிலிருந்து: யாரெல்லாம் சுகவாசி என்றால், சிரித்து மகிழ்ந்து வாழ்பவன், அதிகாலையில் எழுபவன், இயற்கை உணவுகளை உண்பவன், முளை கட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துபவன் சுகவாசி. அத்துடன், மண்பானைச் சமையலை உண்பவன், உணவை நன்கு மென்று உண்பவன், உணவில் பாகற்காய், சுண்டைக்காய் மற்றும் அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன், குளிர் பானங்களை அதிகம் உபயோகிக்காதவன், மலச்சிக்கல் இல்லாதவன் சுகவாசி.மேலும், கவலைப்படாத மனிதன், நாவடக்கம் உடையவன், படுத்தவுடன் தூங்குகிறவன், தினம் ஒரு மணி நேரம் மவுனம் அனுசரிப்பவன், கோபம் இல்லாமல், நிதானத்தோடு வாழ்பவன் சுகவாசி!கற்பு நெறி தவறாது வாழ்பவர், மன்னிக்கிறவன், மன்னிப்பு கேட்கிறவன், ஈகை மனப்பான்மையை வளர்ப்பவன், வளையாத முதுகுத்தண்டுடன், நிமிர்ந்து உட்கார முடிந்தவன், இடது பக்கமாக படுத்து, காலை நீட்டி நித்திரை செய்பவன் சுகவாசி!தூங்கி எழுந்ததும் காலை, இரண்டு டம்ளர் சுத்தமான தண்ணீர் பருகுபவன், கால முறையறிந்து உண்பவன், வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்பவன், 10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணாநோன்பு இருப்பவன் ஆகியோரே சுகவாசிகள்.எந்த வீட்டில் பிரிட்ஜ் இல்லையோ, அந்த வீட்டனரும் சுகவாசிகள் தாம்!நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !