திண்ணை!
அறந்தை நாராயணன் எழுதிய, 'நாகரிக கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன்' நூலிலிருந்து:மார்ச் 24, 1931ல் டி.கே.எஸ்., குழுவினர் தஞ்சையில் முகாமிட்டு, நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தனர். அச்சமயம், லாகூரில், மாவீரன் பகத்சிங்கும், ராஜகுரு - சுகதேவும் தூக்கலிடப்பட்ட செய்தி, தஞ்சையை குலுக்கியது. அன்று மாலை, தஞ்சாவூர் பெரிய கோவிலை ஒட்டியுள்ள மைதானத்தில் கண்டனக் கூட்டம் நடைபெற இருந்த நிலையில், 'கூட்டம் நடைபெற தடை செய்யப்பட்டுள்ளது...' என்று வதந்தி பரவியது. இருப்பினும், கூட்டத்திற்கு, டி.கே.முத்துசாமியும். என்.எஸ்.கிருஷ்ணனும் புறப்பட்டனர்.பெருந்திரளான மக்கள் குழுமியிருந்தனர். கூட்டத்திற்கு தலைமை வகித்த தேசபக்தர், வெங்கட கிருஷ்ணபிள்ளை, மேடையிலேயே கைது செய்யப்பட, மக்கள் மத்தியில் ஒரே கொந்தளிப்பு; போலீசார் தடியடி நடத்தி, கூட்டத்தை, கலைத்தனர். முத்துசாமிக்கும், கிருஷ்ணனுக்கும் தடியடி விழுந்தது.திரும்பும் போது, தேசபக்தியை வளர்க்கும் விதமாக, 'தேசபக்தி' என்ற பெயரில், புதிய நாடகத்தை தயாரித்தனர்.இந்நாடகத்தில், என்.எஸ்.கே.,விற்கு கொடுக்கப்பட்ட பல வேடங்களில் சி.ஐ.டி., வேடமும் ஒன்று!புரோசன் எனும் தேசபக்தன் வேடத்தில் தோன்றும் டி.கே.சண்முகம், முதல் காட்சியில், பொதுக்கூட்ட மேடையில் பிரசங்கம் செய்வார். சி.ஐ.டி., வேடத்தில் நடிக்கும் கிருஷ்ணன், அவரது பேச்சை, குறிப்பு எடுப்பார்.அப்போது, 'இதோ... எங்கள் பிரசங்கத்தை குறிப்பு எடுக்கிறாரே... இவரும் நம் நாட்டவர், நம் சகோதரர்களில் ஒருவர் தான்; ஆனால், பிறந்து, வளர்ந்து, இந்த நாட்டு உப்பையே தின்று கொண்டிருக்கும் இந்த மனித உருவம், தன் சொந்த சகோதரர்களையே அன்னிய நாட்டானுக்கு காட்டி கொடுக்கும், துரோக செயலை செய்து கொண்டிருக்கிறது... என்ன செய்வது... வயிற்றுப் பிழைப்பு...' என்று, பிரசங்கம் நிகழ்த்துவார், டி.கே.சண்முகம்.உடனே, கை, கால்கள் எல்லாம் பதற்றத்தால் ஆடுவது போல நடிப்பார், கிருஷ்ணன். இதைப் பார்த்து, கை தட்டி சிரிப்பர், ரசிகர்கள்.நாடகத்தின் கடைசி காட்சியில், கிருஷ்ணன் தலைமையில் தொண்டர் படை ஒன்று தோன்றும். அதன் தளபதியான என்.எஸ்.கே., பெரியதோர் கைராட்டையை தூக்கியபடி மேடைக்கு வருவார்; அரங்கமே கை தட்டலில் அதிரும்.இந்த நாடக முகாம் திருநெல்வேலியில், 'தேசபக்தி' நாடகத்தை நடந்தியது. மறுநாள், கம்பெனி வீட்டுக்கு இரண்டு போலீசார், வந்தனர். போலீஸ் ஸ்டேஷனுக்கு, கம்பெனி உரிமையாளரும், நாடகாசிரியரும் வர வேண்டும் என்று உத்தரவு.கம்பெனி சார்பாக முத்துசாமியும், என்.எஸ்.கிருஷ்ணனும் போயினர்.அங்கிருந்த இன்ஸ்பெக்டர், 'நாடகத்தில் முதல் காட்சியில் பிரசங்கத்தை சி.ஐ.டி., குறிப்பு எடுப்பதாக காட்டும் காட்சிக்கும், கடைசி காட்சியில், தொண்டர் படை தளபதி, கைராட்டையோடு வருவதற்கும் தடை. நான் சொல்லும் இந்த திருத்தங்களை செய்யாவிடில், மொத்த நாடகத்திற்கும் தடை...' என்றார் கண்டிப்புடன்!இரண்டும் என்.எஸ்.கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட காட்சிகள். இந்த திருத்தங்களை செய்வதால், 'தேசபக்தி' நாடகம் பாதிக்காது என்று கருதிய முத்துசாமியும், கிருஷ்ணனும் அதற்கு சம்மதம் தெரிவித்து, திரும்பினர்.நடுத்தெரு நாராயணன்