திண்ணை!
பார்வையற்றவர்களாக இருந்தும், புகழ்பெற்ற கவிஞர்களாக திகழ்ந்த சிலர், தமிழகத்தில் இருந்தனர். தொண்டை நாட்டில் உழலுார் என்ற ஊரில் பிறந்த வீரராகவ முதலியார், பிறவியிலேயே கண் பார்வை இல்லாதவர். இன்னொருவரை கொண்டு விரலால் எழுத செய்து, இலக்கியங்களை கற்று தேர்ந்ததுடன், தாமே நுால் இயற்றும் அளவுக்கு புலமையும் பெற்றார். கம்ப ராமாயண பிரசங்கம் செய்து, பரிசு பெற்று வந்தார்.நுாறு ஆண்டுகளுக்கு முன் இருந்த பழனி மாம்பழ கவிராயர் என்பவரும் பார்வை அற்றவர் தான்; 'சிருங்கார ரச மஞ்சரி தேவாங்க புராணம்' போன்ற பல நுால்களை இவர் இயற்றியுள்ளார்.'அரிய தகவல்கள் ஆயிரம்' என்ற நுாலிலிருந்து: வடிகட்டி, துாசுகளை நீக்கிய தேனை விட, வடிகட்டாத தேனே உடம்புக்கு நல்லது. மலர் மீது அமர்ந்து தேனைக் குடிக்கும் தேனீ, தன் கூட்டிற்கு திரும்பும்போது, அதன் கால்களில் ஒட்டியிருக்கும் மகரந்தத்தையும் சேர்த்து தேனுடன் கூட்டில் சேமிக்கிறது. அதிலிருந்து தேனை எடுப்பவர்கள், சுத்தமாக இருக்கட்டும் என்று தேனை வடிகட்டி விடுகின்றனர். அதனால், பல அரிய மருத்துவ குணம் வாய்ந்த மலர்களின் மகரந்தங்களை நாம் இழக்க நேரிடுகிறது.நம் பக்கம் இருந்தபடியே, எதிரிகளுக்கு வேலை செய்பவர்களை காட்டிக் கொடுப்போரை, ஐந்தாம் படை என்கிறோம். இந்த சொல் எப்படி வந்தது... ஸ்பெயின் நாட்டின் உள்நாட்டு போரின்போது, ராணுவ தலைவரான எமிலியோ மோலா என்பவர், நான்கு வகை படைகளுடன் தலைநகரான, மேட்ரிடை நோக்கி படையெடுத்துச் சென்றார். ஸ்பெயின் மக்களும் தனக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்பதை குறிப்பிட, 'ஐந்தாம் படை, நாட்டின் உள்ளேயே இருக்கிறது...' என்றார். அவர் அப்படி சொன்னதே பிரபலமடைந்து, புழக்கத்திற்கு வந்து விட்டது.கிருபானந்த வாரியார் ஆற்றிய உரையிலிருந்து: சிலர், தம் மனைவியிடம், தாம் வாங்கும் சம்பளத்தை குறைத்தே சொல்வது வழக்கம்; இதனால் தான், பெண் என்றால், பே('Pay')யும் இறங்கும் என்கிறார்களோ!சிங்கப்பூரில், இதுவரை எந்த திரைப்படமும் தயாரிக்கப்படவில்லை; சிங்கப்பூர் திரையரங்குகளில் காட்டப் படும் திரைப்படங்கள் அனைத்தும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப் பட்டது.'என்ன வினோதம் பார்!' என்ற நுாலிலிருந்து: தஞ்சை சரஸ்வதி மகால் நுாலகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அபூர்வ சுவடி நுால்களுள் ஒன்று, 'சப்தார்த்த சிந்தாமணி!'கி.பி., 1684 - 1712 வரை தஞ்சையை ஆட்சி செய்த, ஷாஜி (சகதி மன்னன்) என்ற மராட்டிய அரசரின் அவைப் புலவராக விளங்கிய, 'சிதம்பர கவி' என்பவரால் எழுதப்பட்டது, இந்நுால்.வடமொழியில் உள்ள இந்நுாலை, முதல் சுவடியிலிருந்து படிக்கத் துவங்கினால், ராமாயண காவியமாகவும், கடைசி சுவடியின் கடைசி வரியிலிருந்து படித்தால், உருது மொழி படிப்பது போன்றும், திருப்பிப் படித்தால், பாகவதமாகவும் அமைந்துள்ளது.'மாணவர் விஞ்ஞானம்' என்ற நுாலிலிருந்து: 'உப்பு கிடைக்கும் இடங்களில் ஒன்று கூறுக...' என்ற கேள்விக்கு, 'சாம்பார்' என்று, எழுதியிருந்தான் ஒரு மாணவன். அதற்கு, சரியான பதில் என்று மார்க் கொடுக்கப்பட்டது. ஆம்... ராஜஸ்தானில், 'சாம்பார்' என்ற இடத்தில், உப்பு கிடைக்கிறது.நடுத்தெரு நாராயணன்