திண்ணை!
'சரித்திரம் படைத்தவர்கள்' என்ற நுாலிலிருந்து: தான் ஒரு தீரமான தலைவன் என்ற, 'இமேஜை' காப்பாற்றிக் கொள்வதற்கு, பல வழிகளையும் கையாளுவார், நெப்போலியன்.உயரம் குறைவானவர் என்ற மனக்குறை, அவருக்கு இருந்தது. கம்பீரமான உருவமுடைய தன் படை வீரர்களுக்கு மத்தியில், குள்ளமானவராக நிற்க நெப்போலியனுக்கு விருப்பமில்லை. தன்னைப் பற்றி, படை வீரர்களுக்கு இருக்கிற, 'இமேஜை' அது பாதிக்கும் என்று, கருதினார்.இதனால், எப்போதும் குதிரையின் மீது அமர்ந்தபடிதான், படை வீரர்கள் முன் தோன்றுவார். 'நெப்போலியன், குதிரை மீதிருந்தபடியே துாங்குவாராம்...' என்று சொல்லப்படுவது கூட இதனால் தான்.படை வீரர்களுக்கு ஆணையிடும் போது, அருகில் இருக்கும் குன்றின் மீது ஏறி நின்றபடி தான் ஆணையிடுவார்.அதேபோல், குதிரையில் அமர்ந்தபடியே கூடாரத்திற்குள் நுழைந்து, அதன் பின்னரே அதிலிருந்து இறங்குவார்.வானதி பதிப்பகம், 'விடுதலை போரில் தமிழ் இலக்கியம்' நுாலிலிருந்து: பிற்காலத்தில், 'திராவிடம்' பாடிய பாரதிதாசன், சுதந்திர போராட்ட காலத்தில், 'தேசியம்' தான் பாடி வந்தார். 'தேசத்தாரின் பிரதான வேலை' என்ற தலைப்பில், பாரதிதாசன் எழுதிய பாடல்.நாடகங்களில், 'கொல்லி மலை, குடகு மலை எங்களது நாடு...' என்று பாடும் குறத்திப் பாட்டின் மெட்டில் அமைந்த பாடல்:பால் நுரை போல் பாரதத்தில்பஞ்சு விளைவிப் பீரே - நல்லபஞ்சு விளைவிப் பீரே - அந்தப்பஞ்சதனைப் சுத்தி செய்வீர்பனிமலை போல் நீரே!'கதரணிவீர்' என்றுரைத்தகாந்தியண்ணல் ஆணை - எழிற்காந்தியண்ணல் ஆணை - அதைக்கருதிடுவீர் அது எனக்குநாரதனார் வீணை...'உடல், மனம், உயிர்' நுாலிலிருந்து: தலை வழுக்கைக்கு, 6,000 ஆண்டுகளுக்கு முன், எகிப்திய அரசர், சாட்டா என்பவரின் தாய், மருந்து கண்டுபிடித்து, முதல் சிகிச்சை செய்தார். இவரது சிகிச்சையின்படி, வழுக்கை தலை உடையவர்கள், பேரீச்சம்பழம் மற்றும் கழுதையின் குளம்பு ஆகியவற்றை அரைத்து, அதை எண்ணெயில் காய்ச்சி, அந்த களிம்பை தடவி வரவேண்டும்.கி.மு., 400ல், ஹிப்போகிரேட்ஸ் என்ற அறிஞர், 'ரோஜாவின் சாற்றில் மதுவையும், ஆலிவ் எண்ணெயையும் கலந்து தடவி வர, வழுக்கை தலையில் முடி வளரும்...' என்று கூறியுள்ளார். பண்டைய ரோமானியர்கள், வழுக்கை தலையில் முடி வளர, கரடி கொழுப்பை தடவி வந்தனர்.கி.மு., முதல் நுாற்றாண்டு மருத்துவர், டயோஸ் கரிடிஷ், பாம்புகளை உயிரோடு கொளுத்தி கிடைக்கும் சாறை தலையில் தடவ, சிபாரிசு செய்தார்.'மனிதனின், பெண் மோகத்தை தீவிரமாக துாண்டச் செய்யும் ஒருவகை, 'ஹார்மோன்' தான் வழுக்கை விழ காரணமாகிறது...' என்கிறது, நவீன மருத்துவம்.புகழ்பெற்ற வழுக்கை தலையர், ரோமானிய பேரரசரான ஜூலியஸ் சீசர். அதே போல், பிரான்ஸ் நாட்டின் தளபதியாக இருந்து பேரரசரான நெப்போலியனுக்கு, 23 வயதிலேயே வழுக்கை விழுந்து விட்டது. அவரும், மன்னர் ஜார் அலெக்சாண்டரும் ஐரோப்பாவின் எதிர்காலம் குறித்து பேசத் துவங்கி, தங்களது வழுக்கை தலையை பற்றியே பேசி முடித்ததாக கூறுவர்.இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் மற்றும் காந்திஜி போன்றோர், இளம் வயதிலேயே வழுக்கை தலையர்களாகி விட்டனர். வழுக்கை தலையர்களுக்கு, பேன் தொல்லை இல்லை; 'ஷாம்பு' செலவு கிடையாது. தலைக்கு எண்ணெய், 'கிரீம்' போடும் வேலை இல்லை. தலை கலைந்து விட்டதே என்று, சீவும் வேலை கிடையாது. இத்தனை வசதி இருக்க, வழுக்கை தலையை பற்றி வருந்துவதாவது. சே... சே!ஒரு உபன்யாசத்தில் கேட்டது: குடிகார நோயாளியை பரிசோதித்த டாக்டர், 'உன் உடலும், குடலும் கெட்டதற்கு, இதுநாள் வரை நீ குடித்து வந்த சாராயம் தான் காரணம்...' என்றார்.'நீங்கள் தான் சரியாக சொன்னீர். என் குடும்பத்தினரெல்லாம், நான் தான் காரணம் என்கின்றனர்...' என்றான், வருத்தத்துடன்.- இது எப்படி இருக்கு!நடுத்தெரு நாராயணன்