உள்ளூர் செய்திகள்

திண்ணை!

கவிஞர் வாலி எழுதிய, 'வாலிப வாலி' என்ற நுாலிலிருந்து: ஒரு நாள், இரவு, 11:00 மணி இருக்கும். 'சாமி... நான், பாபான்னு ஒரு படம் பண்றேன். அதிலே நீங்க ரெண்டு பாட்டு எழுதி தரணும்...' என்றார், ரஜினி. அதில், ஒரு தத்துவ பாட்டு வரும். அது தான், 'மாயா மாயா... எல்லாம் மாயா...' பாட்டு. ஏ.ஆர்.ரஹ்மான், ரொம்ப அருமையாக இசை அமைத்திருப்பார்.ஷாருக்கான் நடித்த, சுவதேஸ்ன்னு ஒரு படம், ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசை. தேசம் என்ற பெயரில், இந்த படத்தை, இந்தியிலிருந்து தமிழுக்கு, 'டப்' செய்தனர். அதிலே, 'நீங்க எழுதினா நல்லாயிருக்கும்...' என்றார், ரஹ்மான். 'டப்பிங் படத்திலே, உதட்டசைவு எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்து எழுத, நம்ம வயசு சரி வராது; எழுத மாட்டேன்...' என்றேன். 'உதட்டசைவை, ரொம்ப சரியாக, 'பாலோ' பண்ண வேண்டாம்... வாங்க, தியேட்டர்ல படத்தை போட்டுக் காட்டறேன்... என்ன பணம் கேட்கறீங்களோ, அதை தயாரிப்பாளர் கொடுத்திடுவாரு... நீங்க எழுதணும்...' என்றார்; எழுதினேன். ரஹ்மானிடம், 'இந்த பாட்டை, நீயே பாடினா தான் நல்லாயிருக்கும்...' என்றேன்.ரஹ்மானே பாடினார்; செம, 'ஹிட்!' அதுமட்டுமல்ல, ஹே ராம் படத்துல, என் பாட்டை, தமிழில் பாடியிருக்கார், ஷாருக்கான்.அதன் பின், நியூ படத்திலே பாட்டு எழுத, என்னை கூப்பிட்டார், ரஹ்மான். 'காலையில் தினமும் கண் விழித்தால் நான் கைதொழும் தேவதை, அம்மா...'ன்னு ஒரு பாட்டு, பிரபலமானது. அப்புறம், 'அன்பே ஆருயிரே...' மற்றும் 'மயிலிறகாய் மயிலிறகாய்...' இரண்டு பாட்டும், 'ஹிட்!' நியூ படத்துல, 'தலைச்சன் பிள்ளை...'ன்னு, ஒரு வரி எழுதியிருப்பேன். 'அந்த வரி யாருக்கும் புரியாது...'ன்னு சொன்னான், படத்தின் இயக்குனர், எஸ்.ஜே.சூர்யா.'உனக்கு புரிய தேவையில்லே... ஜனங்களுக்கு புரியும். அதனால, மாத்த மாட்டேன்...' என்றேன். அந்த பாட்டு, 'ஹிட்' ஆன பின், 'அந்த வார்த்தைக்கு, மூத்த பையன்னு அர்த்தம் சொன்னாங்க அண்ணா...' என்றான், சூர்யா.குலாம் ரசூல் எழுதிய, 'முஸ்லிம் மன்னர்கள்' நுாலிலிருந்து: முகலாய மன்னர் பாபரின் மகனான, ஹூமாயுனுடன் போரிட்டு, அவரை டில்லியை விட்டு விரட்டி, சில காலம் ஆட்சியில் இருந்தவர், ஷேர்கான். ஆறு ஆண்டுக்கு பின், ஹூமாயுன் மீண்டும் போரிட்டு, ஷேர்கானை விரட்டி, ஆட்சியை பிடித்தார். இந்த ஷேர்கான், முன்பு, பாபருடன் கூட்டணி அமைத்து, ஆப்கானியர்களை எதிர்த்து போரிட்டவர். உள்ளுக்குள் அவருக்கு, முகலாயர்கள் மீது கோபம் இருந்தது. 'எனக்கும் ஒரு காலம் வரும். அப்போது, நான் இந்த முகலாயர்களை இந்தியாவை விட்டே விரட்டுகிறேன்...' என்று அடிக்கடி கூறுவார்.இவர், முகலாயர்களோடு சேர்ந்திருந்த காலத்தில், ஒரு விருந்து வைத்தார், பாபர். அதில், ஒவ்வொருவருக்கும், பொறிக்கப்பட்ட முழு கோழி பரிமாறப்பட்டது. தனக்கு வந்த முழு கோழியையும், சில நிமிடங்களிலேயே சாப்பிட்டு விட்டார், ஷேர்கான்.இதை கூர்ந்து கவனித்த பாபர், ஷேர்கானை சுட்டிக்காட்டி, 'முழு கோழியை சில நிமிடத்தில் சாப்பிட்ட விதத்தையும், இந்த மனிதனுடைய தோற்றத்தையும் பார்த்தால், எதிர்காலத்தில் இவனால் நம் ஆட்சிக்கு ஆபத்து நேரிடும் என்று, என் உள்மனம் கூறுகிறது...' என்றார். பிற்காலத்தில் அப்படித்தான் ஆயிற்று.ப.சிவனடி எழுதிய, 'இந்திய சரித்திர களஞ்சியம்' நுாலிலிருந்து: பதினெட்டாம் நுாற்றாண்டில், 1700களில், இந்தியா எங்கும் அடிமை முறை இருந்தது. தமிழகத்தில், வாழ வழியற்ற மக்கள், தம்மை கோவிலுக்கு அடிமைகளாக விற்று விடும் வழக்கம் ஒருபுறம் இருக்க, வரி கொடுக்க முடியாத விவசாயிகளின் மனைவியரை பிடித்து, ஏலம் போட்டு வந்தனர், மாகாண கவர்னர்கள்.'கொள்ளையர்களை பிடித்து, தண்டித்து, அவர்களை அடிமையாக விற்கலாம்...' என்று, 1772ல், சட்டம் இயற்றியது, கிழக்கிந்திய கம்பெனி. அடிமைகளை இங்கிருந்து வாங்கி, வங்காளம் வழியாக, அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர். சூரத், சென்னை, மசூலிப்பட்டினம் ஆகிய மூன்று நகரங்களிலிருந்து, ஆங்கில மற்றும் டச்சு வணிகர்கள், அடிமைகளை ஏற்றுமதி செய்து வந்தனர். நடுத்தெருநாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !