திண்ணை!
ஜவஹர்லால் நேரு சென்னைக்கு வந்த போது, தி.மு.க., சார்பில் கறுப்புக் கொடி காட்டத் திட்டமிட்டோம். அப்போது, கழக முக்கியத் தோழர்களை முன் கூட்டியே கைது செய்தனர். அப்படி கைது செய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் வைக்கப் பட்டிருந்தவர்களில் முக்கியமானவர்கள் எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயணசாமி, முன்னாள் மேயர் முனுசாமி, ராஜாராம், நான் மற்றும் சிலர். எங்களை, 10 தினங்கள் வைத்திருந்து, வழக்கு ஏதுமின்றி விட்டு விட்டனர்.அப்போது, எம்.ஜி.ஆர்., நீண்டநாள் சிறையில் இருக்க, படத் தயாரிப்பாளர்களும், மற்றவர் களும் விரும்பவில்லை. பெரும் முயற்சி செய்து, எங்களை விட அவர் முன்னதாக வெளியில் செல்ல ஏற்பாடு செய்து விட்டனர்.அவர் சிறைக்கு வந்ததும், எங்களை எல்லாம், 'சி' வகுப்புக்கு அழைத்துச் சென்றனர்; நாங்கள் செல்ல மறுத்தோம்; பிறகு, பலவந்தப் படுத்தி அனுப்பினர். ஆனால், அவரை, 'பி' பிரிவுக்கு அனுப்பச் சம்மதித்தனர். 'எல்லாருக்கும் ஒரே வகுப்பு கிடைத்தால் தான், நானும் இருக்க முடியும்...' என்றார் எம்.ஜி.ஆர்., அதன் பின், எல்லாரையும், 'பி' வகுப்பு சிறைக்கு அனுப்பி வைத்தனர்.அவர், 'உள்ளே' இருக்கிறார் என்றவுடன், நண்பர்கள் பழங்களாக அனுப்பத் தொடங்கி விட்டனர். மேலும், எங்களுக்கு சட்டப்படி உள்ளே அனுமதிக்கப்படும் எல்லா பொருட் களும் ஏராளமாக வந்து குவிய வைத்து விட்டார். அவற்றை, காலையில் எழுந்தவுடன் எல்லா நண்பர்களுக்கும் பகிர்ந்தளித்து, மிகுதியை, 'சி' வகுப்பிலுள்ள தோழர்களுக் கும், மற்றவர்களுக்கும் அளித்து, பிறகே தான் உண்பார்.அவர் வெளியில் சென்று விட்டார். ஆனால், அவருக்கென்று வந்து குவிந் திருந்தவை எங்களுக்கு மேலும் 10 தினங் களுக்கு உதவின. அது மட்டுமா? வெளியில் சென்றவர், மீண்டும் ஒருமுறை வந்து விசாரித்து விட்டுப் போனார்.—'தில்லை வில்லாளன்' ஒரு கட்டுரையில்...('சமநீதி' மலர் 1968)***ராஜஸ்தானில் கேத்திரி மகாராஜாவின் சமஸ்தானத்தில் கொஞ்ச நாள் தங்கியிருந்தார் விவேகானந்தர். அங்கிருந்து குஜராத் சென்றார். அங்கு, 'லிம்படி' எனும் ஊரில் சந்நியாசிகள் வசிக்கும் இடம் ஒன்று இருந்தது. இவர் அங்கு சென்றார். அது, ஒரு தன்னந்தனியான வீடு. அதில் வசித்திருந்த சாதுக்கள் சிலர், எத்தனை நாள் வேண்டுமானாலும் அங்கு தங்கி யிருக்கலாமென்று கூறி, அன்புடன் இவரை வரவேற்றனர்.அம்மனிதர்களுடைய ஒழுக்கத்தைப் பற்றி முதலில் சுவாமிகள் சிந்திக்கவில்லை. ஆனால், இரண்டு மூன்று நாளில் எல்லாம் இவருக்கு விளங்கி விட்டன. அவர்கள் பில்லி சூனியக்காரர்கள். குரூரமான முறையில் மக்களை பலி கொடுத்தும், அருவருப்பான நீசத் தொழில்கள் புரிந்தும், துஷ்ட தேவதைகளை வசப்படுத்துவதும் அவர்களது நோக்கம். அத்தகையவர்கள் பக்கத்து அறையில் பூஜை போடுவது சுவாமிகள் காதில் விழுந்தது. தீங்கு ஏதாவது நேரிடுமோ என்று எண்ணி, அவர் வெளி யேறப் பார்த்தார்; ஆனால், வெளிக் கதவைப் பூட்டி வைத்து, அவர்கள் காவலிருந்தனர். விபரீதக் கொள்கையும், கொடூரச் செயலும் உடைய ஒரு கூட்டத்தார் தேவாராதனையின் பெயரால் நீசத்தொழில் செய்வதுண்டு என்று சுவாமிகள் கேள்விப்பட்டிருந்தார். இக் கொடியவர்களால் தமக்குக் கெடுதியும், ஆபத்தும் நேரிடப் போகிறதென்று யூகித்துக் கொண்டாரெனினும், கடவுளை நினைத்து அவர் அமைதியாக இருந்தார்.இது இப்படியிருக்க, சுவாமிகளைக் கண்டு தரிசிக்க ஒரு சிறுவன் இடையிடையே அங்கு வந்து கொண்டிருந்தான். அவன் வயதில் சிறியவனானபடியால், அவனைப் பற்றி சூனியக்காரர்கள் யாருக்கும் சந்தேகம் ஒன்றும் உண்டாகவில்லை. மறுநாள் காலையில் அவனைக் கண்டதும் திடீரென்று யோசனை ஒன்று சுவாமிகள் மனதில் தோன்றியது. தன் அறையில் கிடந்த ஓர் ஓட்டின் மீது, அடுப்புக் கரியால், 'நான் அபாயத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன்...' என்று எழுதி, 'இதை இவ்வூர் மகாராஜாவிடம் கொண்டு போய் கொடு...' என்று, அந்தப் பையன் காதில் ஓதி, ஓட்டைக் கையில் கொடுத்தார். அவனும், அதை வேட்டிக்குள் மறைத்து, வெளியே போய் விட்டான். ஒரு மணி நேரத்திற்குள் சிப்பாய் கூட்டம் ஒன்று அங்கு வந்து விட்டது. சுவாமிகளும் அந்த பாதகர் கையிலிருந்து மீண்டார்.-சுவாமி சித்பவானந்தர் எழுதிய, 'ஸ்ரீ விவேகானந்தர் ஜீவிதம்' என்ற நூலிலிருந்து...நடுத்தெரு நாராயணன்