திண்ணை
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: 'ஆனந்த விகடன்' இதழுக்கு, ஆண்டு சந்தா, ஒரு ரூபாய். ஒருவர், மூன்று சந்தாக்களை சேர்த்தால், ஒரு பரிசு. ஆறு சேர்த்தால், இன்னொரு பரிசு.எப்படியாவது பத்திரிகையை, தமிழ் தெரிந்தவர்கள் கவனத்துக்கு எடுத்து வரவேண்டும். இலக்கிய ஆர்வம் முக்கியம் தான்; அதேசமயம், இனாம் ஆர்வம் உடனடியாக பலனளிக்கக் கூடியது என்று, தெரிந்து கொண்டார், ஆனந்த விகடன் ஆசிரியர், வாசன். இதன் விஸ்தரிப்பாக அவர், ஆனந்த விகடன் இதழில் கொண்டு வந்தது தான், பகுத்தறிவு போட்டி. பத்திரிகைக்கு, 'பளிச்'சென்று அட்டைப்படம் போட ஆரம்பித்தார். உள் விஷயங்களை எளிய தமிழில், சுவாரஸ்யமாக அமைத்தார்.தலையங்கம், செய்தி துணுக்குகள், கதை, கட்டுரை, மொழி பெயர்ப்பு, பாலர் மலர், பெண்கள் மலர் என, இப்படியெல்லாம் பகுதிகள் வகுத்து வைத்தார். திவ்ய பிரபந்தத்தை எளிய தமிழில் எழுத வைத்து, வெளியிட்டார். மகாபாரதத்தை, 'மகா பாரத கதைகள்' என்று, ஒவ்வொரு வாரமும், ஒரு காட்சியை அட்டைப் படமாக போட்டு, தொடர் கட்டுரையாக வெளியிட்டார். (இதற்குள் ஆனந்த விகடன் இதழ், வார பத்திரிகையாகி விட்டது.) தொடர் கதைகளும் வெளியிடலானார். பொது ஜன வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை என, அன்றாட பிரச்னைகளைப் பற்றி, 'ஹாஸ்ய' கட்டுரைகள் வெளியிட்டார். பிரமுகர்களின் படங்களை, 'காரிகேச்சர்' ஆக போட்டார். பத்திரிகையை, வாரத்துக்கு வாரம் புதுமை தோன்றும்படி செய்து கொண்டிருந்தார். திறமையான இளைஞர்களை சேர்த்து, அவர்களுக்கு நிறைய சந்தர்பங்கள் அளித்தார். வெகு சீக்கிரத்தில், தமிழர்களுக்கு, கல்கி, மாலி, மார்கன், சேகர், தேவன், சதாசிவம் என, பல பெயர்கள் பழக்கப்பட்டு விட்டன. திறமையை கண்டுகொள்ளும் திறமைமிக்கவர். இன்னொரு உதாரணம்... அவர் ஒரு ஆங்கில பத்திரிகை கூட நடத்தினார் என்பது, அனேகம் பேருக்கு தெரிந்திருக்காது. அவர் நடத்திய, 'மெரி மேகசீனி'லும் ஒரு சிறுகதை போட்டி. அந்தப் போட்டியில், வாசனால் பரிசளிக்கப்பட்டவர், ஆர்.கே.நாராயணன். முல்லை சத்தி எழுதிய, 'அண்ணாவும் தம்பியரும்' நுாலிலிருந்து: 'கல்லக்குடி போராட்டத்தில் பங்கேற்று, நானும், கருணாநிதியும், ஆறு மாத சிறை தண்டனையில், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம். இருவருக்கும், பக்கத்து பக்கத்து அறை. இரவில், உறக்கம் வரும் வரையில், அவரவர் அறையில் இருந்தபடியே, உரக்க பேசிக் கொண்டிருப்போம்.'வாழ்க்கையே இருண்டு விட்டது; இனி, வையகத்தில் வாழவே தேவை இல்லை...' என்ற பிரமை எனக்கு. அதன் காரணத்தையும், கருணாநிதி அறிவார். அதிகாலை, 2:00 மணி அடித்தது. என் இமைகள் மூட மறுத்தன. மனதில் வேதனைத் தீ கொழுந்துவிட்டு எரியும்போது, எப்படி இமைகள் மூடும்?அப்போது, கடியாரம், (இரவு பாரா சுற்றும் வார்டரை இவ்வாறு அழைப்பர்) என் அறையில் எட்டிப் பார்த்து, 'என்ன சார்... இன்னும் துாங்கலையா... ஐயா, (கருணாநிதி) கூட இன்னும் துாங்கலை... ஏன் இப்படி இருவரும் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். ஐயா, நீங்கள் துாங்கிட்டீங்களான்னு, என்னை பார்க்கச் சொன்னார். உங்களுக்குள் ஏதாவது கோபமா... சண்டையா...' என்றார். என்னால் பேச முடியவில்லை. ஒரு சிகரெட் தாளில், 'எனக்கும், 'அவளு'க்கும் இருந்த உறவை நினைத்து... அவளின் நினைவையே, என் கண்ணீரால் அழித்துக் கொண்டிருக்கிறேன்...' என்று எழுதி அனுப்பினேன். அதே தாளில், 'ஜூலியட்டுக்காக, ரோமியோவும்; லைலாவுக்காக, கயசும்; பூங்கோதைக்காக, பொன்முடியும் அழுவதில் அர்த்தம் உண்டு. நீங்கள் அழுவதில்...' என்று எழுதி அனுப்பினார், கருணாநிதி. அந்த வாசகங்கள், என் கவலையை, கண்ணீரை, வேதனையை மட்டும் போக்கவில்லை. பொருளில்லாத ஒரு நினைவையும் போக்கடித்தது! நடுத்தெரு நாராயணன்