திண்ணை
நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து: வாஹினி தயாரிப்பில், ஜம்பு இயக்கத்தில், எம்.ஜி.ஆர்., நடித்து, பெரும் வெற்றி பெற்ற படம், நம்நாடு. படத்தின் இசை, எம்.எஸ்.விஸ்வநாதன். படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார், வாலி.படத்தின், 100ம் நாள் விழா, மதுரையிலும், சேலத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அப்போது வீட்டில் இல்லை, வாலி. மதுரை செல்வதற்கான, முதல் வகுப்பு ரயில் டிக்கெட்டை வாலி வீட்டில் கொடுத்துச் சென்றனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எம்.எஸ்.வி., இன்னும் சில முக்கிய நட்சத்திரங்களுக்கு, விமான டிக்கெட்டும், வாலி, இயக்குனர் ஜம்பு, அசோகன் மற்றும் ரங்காராவிற்கு ரயில் டிக்கெட்டும் எடுத்திருந்தனர்.இசையமைப்பாளர் விமானத்தில் செல்லும்போது, பாட்டெழுதிய கவிஞரும், விமானத்தில் செல்வது தான் மரியாதை என்று நினைத்தார், வாலி.வேறொரு படத்தின், பாடல் எழுதுவதற்காக, ஜெமினி ஸ்டுடியோ சென்ற வாலி, நீரும் நெருப்பும் படத்திற்காக, 'மேக் - அப்' அறையிலிருந்த, எம்.ஜி.ஆரை சந்தித்தார்.வாலியிடம், 'வாங்க ஆண்டவனே... மதுரைக்கு வர்றீங்க இல்லே?' என்றார், எம்.ஜி.ஆர்.,'மன்னிக்கணும் அண்ணே... நான் வரவில்லை...' என்று சொன்னார், வாலி.நாற்காலியிலிருந்து எழுந்த, எம்.ஜி.ஆர்., 'ஏன்... என்னாச்சு...' என்றார். 'இல்லண்ணே, விஸ்வநாத அண்ணனுக்கு, விமான டிக்கெட்டும், எனக்கு, ரயில் டிக்கெட்டும் எடுத்திருக்காங்க... இசையமைப் பாளருக்கு தர்ற அதே மரியாதையை, பாடலாசிரியருக்கும் தரணும்ன்னு நான் எதிர்பார்க்கிறேன். அதான்...' என்றார்.உடனே, இயக்குனருக்கு போன் போடச் சொன்னார், எம்.ஜி.ஆர்.,'மேக் - அப் மேன்' பீதாம்பரம் போன் போட்டு, எம்.ஜி.ஆரிடம் கொடுக்க, 'மதுரை நிகழ்ச்சியை, 'கேன்சல்' பண்ணிடுங்க... நான் வரலே...' என்று போனை வைத்து விட்டார்.அடுத்த, 15வது நிமிடம், எம்.ஜி.ஆர்., முன் ஆஜரானார், ஜம்பு. மெல்ல தயங்கியவாறு, எம்.ஜி.ஆரிடம் காரணம் கேட்க, 'இசையமைப்பாளருக்கு எங்க கூட, விமான டிக்கெட் போட்டுட்டு, வாலிக்கு, ரயில் டிக்கெட் போட்டிருக்கீங்களே... ஏன், வாஹினில செலவு கணக்கு பார்க்கறாங்களா... அப்படின்னா, நிகழ்ச்சியே வேண்டாம்...' என்று சொல்லி, நேரே, 'செட்'டுக்கு போய் விட்டார்.பிறகு, வாலியோடு, 'செட்'டுக்குள் நுழைந்து, எம்.ஜி.ஆரை சமாதானப்படுத்தினார், ஜம்பு.வாலிக்கும், விமான டிக்கெட் தயாரானது. மதுரையில், நிகழ்ச்சியும் நடந்தேறியது.நடுத்தெரு நாராயணன்