உள்ளூர் செய்திகள்

திண்ணை!

நான், 'சிவகங்கைச் சீமை' படத்துக்காக எழுதிய பல பாடல்களை, படத்தில் சேர்க்காமல் விட்டு விட்டேன். மருது பாண்டியரும், ராணி வேலு நாச்சியாரும், திண்டுக்கல்லிலிருந்து, ஹைதர் அலியை சந்திக்கப் போவதாக ஒரு கட்டம். அந்தக் கட்டத்தில், 'குடை நிழலிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடை மெலிந்தங்கே நடக்கின்றார்...' என்று ஒரு பாடல்.அந்தப் பாடல், படத்தில் இடம் பெறவில்லை. அதே மெட்டில், பாகப் பிரிவினையில், 'தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும், தரத்தினில் குறைவதுண்டோ...' என்ற பாடலை எழுதினேன்.அதுபோல், வேறொரு கம்பெனிக்காக, 'மண்ணில் கிடந்தாலும், மடியிலிருந்தாலும், பொன்னின் நிறம் மாறுமா?' என்று எழுதிய பாடல் எடுக்கப்படாததால், பாசமலரில், 'மலர்ந்தும் மலராத...' பாடலை, அதே மெட்டில் எழுதிக் கொடுத்தேன்.— கண்ணதாசனின், 'எனது சுய சரிதம்!' நூலிலிருந்து...காஞ்சிபுரத்தில் அக்காலத்தில், வாணிபம் செழித்திருந்தது. 18 வகையான தானியங்களுடன், நெய், எண்ணெய், தேங்காய், சர்க்கரை, நிலக்கடலை, காய்கள், பழங்கள் மற்றும் பூக்கள் விற்பனையும் நடந்தது. உள்நாட்டு வாணிபத்துடன், வட நாட்டினருடனும் வாணிபம் செய்யப்பட்டது. இது தவிர, கடல் கடந்தும் வாணிபம் செய்தவர்கள், காஞ்சிபுரத்தில் வசித்து வந்தனர்.முக்கிய துறைமுகமான மாமல்லபுரம் வழியாக, சீனாவில் இருந்து, கல்கண்டு, சீனி, களிமண் பொருட்கள், குடை போன்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. வாணிபம் செய்ய வந்த மற்ற இனத்து மக்களால், பழக்க, வழக்கங்களில் மாற்றங்கள் ஏற்பட்டன.சொந்த உறவுகளில் திருமணம், பெண்கள் முகத்தில் மஞ்சள் பூசுதல், நெற்றியில் குங்குமம் இடுதல், திருமணத்தின் போது மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, தேங்காய் கொண்ட தாம்பூலம் வழங்குதல், விருந்தினர்களை உபசரித்தல், கணவன் இறக்கும் போது, உடன்கட்டை ஏறுதல், விதவைகளுக்கு மொட்டை அடித்தல் போன்ற திராவிடர்களின் பழக்கங்களை, ஆரியர்களும் பின்பற்றினர்.அக்காலத்தில் விதவைப் பெண்கள், பல கொடுமைகளை அனுபவித்தனர். மனைவியை விவாகரத்து செய்யவும், மறுமணம் செய்து கொள்வதற்கும், ஆண்கள் உரிமை பெற்றிருந்தனர். பணம் படைத்தவர்கள், பல பெண்களை மணந்து கொண்டனர். வேதம் ஓதுவதற்கும், கல்வி கற்பதற்கும், பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பல்லவர்களின் காலத்தில் தான், கோவில்களில் நாட்டியம் ஆட, பெண்களை தேவரடியாராக வைக்கும் வழக்கம் ஏற்பட்டது.பெண்கள், தலை, காது, கழுத்து, மூக்கு, கால், இடுப்பு போன்ற அவயங்களில், பல வகையான ஆபரணங்களை அணிந்தனர். காதின் உச்சியில் அணிவது, 'கொப்பு' - நடுக்காது மடலில் அணிவது, 'தளுக்கு' - அதன் கீழே, 'மொழுக்கு' என இவற்றிற்கு பெயர். மாணிக்கத்தார், கணிகையர், கோபிகையர், பதிலியார், ரிஷபத்தலியர், குட்டி என, நாட்டிய மங்கையர் அழைக்கப்பட்டனர்.சிவன் கோவில்களில் இருப்பவர்கள், ருத்ர கணிகையர். இவர்கள் இசைப்பள்ளி நடத்தியும், சாமரம் வீசுபவர்களாகவும் இருந்துள்ளனர். இவர்களுக்கு, கோவில் நிலங்களில் வசிக்க இடமளிக்கப்பட்டது. ஆண்கள், தங்களின் குலத் தொழில்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். வீர விளையாட்டுக்களில், இளைஞர்கள் விரும்பி ஈடுபட்டனர். ஆண்கள் குடுமி வைத்து, இடையில் கச்சை கட்டியிருந்தனர். காலில் செருப்பு அணிந்தனர். விசேஷ காலங்களில், சட்டையும் அணிந்தனர்.— ஆ.பா. திருஞானசம்பந்தம் எழுதிய, 'காஞ்சிபுரம் மாவட்ட வரலாறு!' நூலிலிருந்து...நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !