திண்ணை!
சபீதா ஜோசப் எழுதிய, 'நுாறு தலைவர்கள் நுாறு தகவல்கள்' நுாலிலிருந்து:ஜெனரல் ஸ்ட்ராவ் என்ற, விவேகானந்தரின் ஆங்கிலேய நண்பர் ஒருவர், சிப்பாய் கலகத்தின்போது, இந்தியாவில் இருந்தார். அவர், சிப்பாய் கலகம் பற்றிய பல கதைகளை விவேகானந்தரிடம் கூறுவார்.ஒருநாள், அவருடன் பேசிக் கொண்டிருந்த போது, 'சிப்பாய்கள் போதுமான அளவுக்கு தேர்ச்சி பெற்ற வீரர்களாகவும், அவர்களிடம் தேவையான அளவு துப்பாக்கிகளும், வெடி மருந்துகளும், உணவுப் பொருட்களும் இருந்திருக்கின்றன. அப்படி இருந்தும், அவர்கள் ஏன் படுதோல்வி அடைந்தனர்...' என்று கேட்டார், விவேகானந்தர்.'சிப்பாய் கலகத்தின் படைத் தலைவர்கள், போரில், தாங்கள் முன்னணியில் ஈடுபடுவதற்கு பதிலாக, படைக்குப் பின்னால் பாதுகாப்பான ஒரு பகுதியில் இருந்தபடி, 'வீரர்களே சண்டையிடுங்கள்...' என்று, கத்திக் கொண்டிருந்தனர்.'தலைமை ஏற்பவர்கள், தாங்கள் முதலில் மரணத்தை நோக்க முன் வந்தால் அல்லாமல், எஞ்சிய படை வீரர்கள் முழு மனதுடன் போரில் ஈடுபட முன் வர மாட்டார்கள்...' என்று, பதில் கூறினார்.'தலைவன் என்பவன், தன் தலையை பலி கொடுக்கக் கூடியவனாய் இருக்க வேண்டும். லட்சியத்துக்காக, தன் உயிரையும் அர்ப்பணிக்கக் கூடியவனாக இருந்தால் தான், தலைவனாக இருக்க முடியும்.'ஆனால், நாம் அனைவரும் தேவையான தியாகம் எதையும் செய்யாமலேயே தலைவர்களாகி விட விரும்புகிறோம். அதன் விளைவு, வெறும் பூஜ்ஜியமாகி விடுகிறது. நாம் சொல்வதை எவரும் கேட்பதில்லை...' என்றார், சுவாமி விவேகானந்தர்.மு.அப்பாஸ்மந்திரி எழுதிய, '200 அறிஞர்கள் காத்திருக்கிறார்கள்' நுாலிலிருந்து:அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது, ஒருநாள், ஒரு கல்லுாரியில் பேசினார், விவேகானந்தர்.பேச்சினுாடே, 'ஒருவன் ஒரு செயலில் முழுக் கவனம் செலுத்தினால், இடி விழுந்தாலும், அவன் அதை அறிய மாட்டான். அவன் கவனம் சிதறவே சிதறாறு...' என்றார்.'உங்களால் அப்படி இருக்க முடியுமா...' என்று கேட்டான், ஒரு மாணவன்.'ஓ...' என்றார், விவேகானந்தர்.மறுநாள், ஒரு பொதுக்கூட்ட மேடையில், உணர்ச்சிப் பெருக்கோடு பேசிக் கொண்டிருந்தார், விவேகானந்தர். அப்போது, மறைந்திருந்த மாணவர்கள், திடீரென இரண்டு துப்பாக்கிகளை வெடிக்கச் செய்தனர்.அந்த ஓசையை கேட்டு, பொதுமக்கள் தான் அதிர்ந்தனரே தவிர, ஒரு வினாடி கூட நிலை தடுமாறாமல் பேசிக் கொண்டே இருந்தார், விவேகானந்தர்.இதை கண்டு அந்த மாணவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.