உள்ளூர் செய்திகள்

பாதைகள் பலவிதம்!

நண்பன் மகன் கல்யாணத்திற்கு, ஜீவனும் அவர் மனைவி துளசியும், மதுரைக்கு, பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். இருவர் முகங்களிலும், ஒருவித ஏக்கமும், எதையோ இழந்து விட்டதை போன்ற, ஒரு வருத்தமும் காணப்பட்டது. சில இழப்புகளை சரி செய்து விடலாம், சில இழப்புகளை, சரி செய்ய முடியாது. பண்புள்ள ஒருவரின் நடத்தையை பற்றி, தவறுதலாக யாராவது சொல்லிவிட்டால், அதை, அவர்களால் தாங்கிக் கொள்ளமுடியாது. 'நாம் மனசாட்சிப்படி தானே நடந்து கொண்டோம்; அவர்கள் நல்லதுக்கு தானே செய்தோம். பின், ஏன் நம்மை தாழ்த்தி சொல்கின்றனர். ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கின்றனர்...' என்கிற கேள்விகள், அவர்களின் நெஞ்சை அழுத்தி, துளைத்துக் கொண்டே இருக்கும். ஜீவனுக்கு, மெல்லிசைக் குழுவில், வயலின் வாசிக்கும் வேலை. எறும்புகள் போல், கிடைக்கும் போது சேமித்து, இல்லாத போது சாப்பிட வேண்டும். ஆறு மாதம் சுத்தமாக வாய்ப்புகள் வராது. சிலர், சம்பளபாக்கி வைத்து விடுவர். அதை வாங்குவதற்குள், ஆறேழு மாதங்கள் ஆகி விடும். தினப்படி வாழ்க்கை சவால் தான். அதனால், தெரிந்தவர் யாரிடமாவது சீட்டு சேர்ந்து, தேவைப்படும் போது, பணம் வாங்கிக் கொள்ளலாம் என்று, நண்பருக்கு தெரிந்த ஒருவரிடம், ஒரு லட்சம் சீட்டு ஒன்று சேர்ந்தார். நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. ஜீவனுக்கு, மகன், முருகன், தன்னைப் போல் கஷ்டப்படக்கூடாது, அவனையாவது நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்கேற்றார் போல் நண்பனும், 'இப்போல்லாம் கல்விக் கடன் தராங்கப்பா. யோசிக்காம சேத்துடு. நம்ம கஷ்டம் நம்மளோடு போகட்டும். இதெல்லாம் ஒரு பொழப்பா... 10:00 மணிக்கு, கச்சேரி ஆரம்பிச்சு, நடு நிசி, 2:00 மணிக்கு முடியுது. யாருமில்லாத ரோட்டிலே பேய் மாதிரி நடந்து, பஸ் பிடிச்சு, வீடு போய்ச் சேரும் போது, விடிஞ்சுடுது. குடும்பத்தாரிடம் பேசவே முடியலை. சரி, சம்பளமாவது கணிசமா கிடைக்குதா என்றால், அதுவும் இல்லே. ஒரு கச்சேரிக்கு, 200 ரூபாய் தான் தர்றாங்க. அது, எந்த மூலைக்கு...' என்றார். சீட்டையும், நண்பனுடைய அறிவுரையையும் நம்பி, மகன் முருகனை, இன்ஜினியரிங் சேர்த்து விட்டார். நல்ல மார்க் எடுத்திருந்ததால், கவுன்சிலிங் அடிப்படையில், பிரபலமான கல்லூரியில், அவன் விரும்பிய கோர்சிலேயே இடம் கிடைத்தது. அப்புறம் தான், பிரச்னை ஒவ்வொன்றாக தலை தூக்க ஆரம்பித்தது. வங்கியில், 'கல்லூரியில் பணம் கட்டிய, ரசீதை கொண்டு வந்தால் தான், பணம் தருவோம்...' என்று, சொல்லி விட்டனர். சீட்டு போட்டவரை போய் பார்த்தார். வீடு பூட்டியிருந்தது. ஆள், 'எஸ்கேப்!' அவர் மாதிரி, இரண்டொரு பேர் வந்து பார்த்து, ஏமாற்றத்துடன் திரும்பிக் கொண்டிருந்தனர். அடுத்து வந்த ஒருவர், 'சார் நீங்க பேப்பர் பார்க்குறதில்லையா... அவன் எங்கேயோ கோல்கட்டா பக்கம் ஓடிப்போயிட்டானாம். போலீஸ் கிட்ட புகார் கொடுத்துருக்கோம். பணம் கிடைச்சுடும். ஆனா, எவ்வளவு சதவீதம், எப்போன்னு சொல்ல முடியாதுன்னு சொல்றாங்க...' என்றார். ஜீவன் ஒடிந்து போனார். எங்கே போய், யாரிடம் கேட்பதென்று தெரியவில்லை. கடைசியில் சீட்டு போடச் சொல்லி, சிபாரிசு செய்தவரே, அந்த பாவத்திற்கு, பணம் புரட்டிக் கொடுத்தார். ஆனால், நேரத்திற்கு கட்ட முடியவில்லை. நண்பர்கள் எல்லாரும், 'என்னடா... காலேஜ் துவங்கியாச்சு, உன்னை காணோமே?' என்று கேட்க ஆரம்பித்ததால், முருகனுக்கு அவமானமாக இருந்தது. அந்த ஆண்டு முழுவதும், இதே நிலை தான். மகனும், தந்தையும் வெவ்வேறு காரணத்திற்காக, மனதளவில் கஷ்டப்பட்டனர். 'ஏம்ப்பா, பணம் இல்லன்னா பேசாம என்னை விட்ற வேண்டியது தானே? ஏதாவது, ஒரு செக்யூரிட்டி வேலைக்காவது போயிருப்பேன். மாமா, அத்தைன்னு எல்லா உறவுகள்கிட்டேயும், நண்பர்கள்கிட்டயும், பெருமையா சொல்லிட்டீங்க... இப்ப படிப்பையும் விட முடியல; வேலைக்கும் போக முடியல. 'ஒவ்வொரு முறையும் கட்டணத்தை லேட்டா கட்டும் போது, எவ்வளவு அவமானமா இருக்கு தெரியுமா... இதெல்லாம், எனக்கு தேவையாப்பா... நானா, உங்கள இன்ஜினியரிங் சேர்க்க சொன்னேன். ஏம்பா, உங்க ஆசைகளை, என் மேலே திணிச்சு, என்னை கஷ்டப்படுத்துறீங்க?' என்றான்.அவன் பேசிய ஒவ்வொரு சொல்லும், ஜீவன் மனதை முள்ளாய், குத்தியது. பின், ஒவ்வொரு ஆண்டும், இதே நிலைமை தான் நீடித்தது. வங்கியில் கடன் கொடுத்தாலும், கல்லூரிக்கு கட்ட வேண்டிய எல்லா பணத்தையும் கொடுக்கவில்லை. விதிமுறைகள் அனுமதிக்காது என்று, பஸ் கட்டணம் போன்ற சில கட்டணங்களை நிராகரித்து விட்டனர். நிலைமை மோசமானது. அது தந்தையின் மேல், வெறுப்பை உமிழச் செய்தது. அந்த வெறுப்பு, விதையாக அவன் மனதில் விழுந்து, படிப்பை முடிக்கும் போது, மரமாக வளர்ந்திருந்தது. முருகன் படிப்பில் புலி என்பதால், நல்ல மதிப்பெண், அதற்கு பின், வேலை என்கிற நல்ல விஷயங்களை சந்தித்தார் ஜீவன். ஆனால், முருகன் தான், தன் அலுவலகத்தில் வேலை பார்த்த, ஒரு அசாம் பெண்ணை, காதலித்து கல்யாணம் செய்து, அசாமுக்கே போய் விட்டான். கொஞ்சம் இளைப்பாறலாம் என்று, கனவு கண்ட ஜீவன் மற்றும் துளசி மனதில், மண் விழுந்தது. ''ஏங்க... என்ன பலமான யோசனை... நீங்க காலையிலும் சரியா சாப்பிடலை. இறங்கி, ஏதாவது ஒரு ஓட்டல்ல சாப்பிட்டுட்டு வரலாம் வாங்க,'' என்றாள் துளசி. ''ஆமா, காலையில நீயும் தான், சரியா சாப்பிடல. சரி, வா சாப்பிட்டு வருவோம்.'' தட்டில், இரண்டு வடைகளை வாங்கி, சேரில் உட்கார்ந்தனர். ''சார்...'' நிமிர்ந்து பார்த்தார் ஜீவன் . நல்ல உடையணிந்த இளைஞன் ஒருவன், பவ்யமாக அவர் முன் நின்று கொண்டிருந்தான். ''சார் என்னைத் தெரியுதா?'' என்றான். ''எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு. ஆனா, சரியா ஞாபகம் வரல. நீயே சொல்லிருப்பா,'' என்றார். ''சார்... நானும் என் நண்பர்களும், உங்க வீட்டுக்கு பக்கத்து தெருவில வீடு எடுத்து தங்கி இருந்தோம். உங்க வீட்டு மாடியிலே இருந்து பார்த்தா, எங்க வீடு தெரியும்.'' ''ஆமா இப்ப ஞாபகம் வந்துருச்சு. அந்த கோஷ்டி பையனா நீ... எப்படிப்பா இருக்கே, இப்ப என்ன செய்யுறே?'' என்று, ஆர்வமாக விசாரித்தார். ''அட்டைப் பெட்டி தயாரிக்கும் கம்பெனி வைச்சுருக்கேன் சார். பிசினஸ் விஷயமாக, கோவில்பட்டி போய்க்கிட்டிருக்கிறேன். நீங்க என்ன சார் ரொம்ப இளைச்சு போயிட்டீங்க?'' ''என் தம்பிக்கும், இவ தம்பிக்கும், அடுத்தடுத்து, ஏதோ உடல் பிரச்னை... ரெண்டு மாசமா, ரெண்டு பேரும், மருத்துவமனைக்கும் வீட்டுக்குமா அலைஞ்சிக்கிட்டிருந்தோம். அதுதான், கொஞ்சம் இளைச்ச மாதிரி இருக்கேன்.'' ''நீங்க மாறவேயில்லை சார். அடுத்தவங்களுக்கு உதவி செய்யுற உங்க பண்பு இன்னும் அப்படியே தான் இருக்கு!'' ''விலங்குகளிடமிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுவதே, இந்த மாதிரி மற்றவர்களின் துன்பத்தில் பங்கெடுத்துக் கொள்வதால் தானே!'' ''சரியா சொன்னீங்க சார். அம்மா... நாங்க டீன் ஏஜ்ல செய்யாத கலாட்டா இல்ல. விநாயகர் சதுர்த்தி, தீபாவளின்னு எந்த பண்டிகை வந்தாலும், ஒரே அமர்க்களம் தான். சத்தமா பாட்ட வச்சி, கலாட்ட பண்ணி, தெருவுல யாரையும் தூங்க விட மாட்டோம். எங்களை திருத்தறதுக்கு, ஒவ்வொருத்தரும் எவ்வளவோ அறிவுரைகள் கூறினர். நாங்க காதுலயே வாங்க மாட்டோம். அப்பதான், ஒரு நாள் சார் வந்து எங்களை சந்திச்சார். ''அவர் மத்தவங்க மாதிரி, நேரடியா, 'அட்வைஸ்' செய்யாம, எங்க போக்கிலேயே போயி, புத்திசாலித்தனமா நடந்துகிட்டார். அன்னக்கி அவர் சொன்ன வார்த்தை, இப்பவும் நல்லா ஞாபகம் இருக்கு.'' ''என்ன சொன்னேன்?'' ''ஏம்பா... உங்க ஆட்டம், பாட்டத்தை பார்க்கும் போது, எவ்வளவு உற்சாகமா இருக்கு தெரியுமா...ஆனா, இவ்வளவு சக்தியையும், உபயோகமா பயன்படுத்தினீங்கன்னா நீங்க எங்கேயோ போயிருவீங்க. இம்மாதிரி சமயங்களில், ஒரு பட்டிமன்றம் நடத்தினீங்கன்னா, அது, இந்த விழாவுக்கே, நெத்தி பொட்டு வச்ச மாதிரி அலங்காரமா, பார்க்க அழகா இருக்கும்ன்னு சொன்னார்.''அப்ப இவர் சொன்னதன் தாத்பர்யம் புரியாமல், செஞ்சி தான் பார்ப்போம்ன்னு, அந்த ஆண்டு, பட்டிமன்றத்துக்கு ஏற்பாடு செஞ்சோம். 'இந்த காலத்து இளைஞர்கள் சிறந்தவர்களா, அந்த காலத்து இளைஞர்கள் சிறந்தவர்களா'ன்னு தலைப்பு. பட்டிமன்றத்துல பேசினவங்க எல்லாருமே, படித்தவங்க, அறிவாளிங்க, வாழ்க்கை அனுபவம் உள்ளவங்க. அவங்க பேச்சு, எங்களுக்கு போதி மரம் மாதிரி, எங்க மனக் கதவுகளை திறந்துச்சு. யோசிக்க ஆரம்பிச்சோம். மனுஷன் யோசிக்க ஆரம்பிச்சாலே, நல்லவனா மாறிடுவாங்கறது, எங்க விஷயத்துல சரியா இருந்துச்சு.''நல்லா படிச்சோம். இப்ப நல்ல நிலயிலே இருக்கோம். நீங்க மட்டும் அன்னைக்கி எங்களுக்கு சரியான வழிகாட்டுதலா இல்லாம இருந்திருந்தா, நாங்க, இப்போ நல்ல நிலமைக்கு வந்திருக்க முடியாது. அதுக்கு நாங்க, உங்களுக்கு ஏதாவது நல்லது செய்யணுமுன்னு யோசித்துக்கிட்டிருந்தோம்.'' ''என்ன செய்யப்போறீங்க?'' ஜீவனும், துளசியும், ஒரே நேரத்தில் கேட்டனர். ''நீங்க, உங்க பையனோடு இல்லேன்னு கேள்விபட்டோம். உங்கமேல, ஒரு தப்பும் இருக்காதுன்னு எங்களுக்கு தெரியும். உங்க மகன்தான், உங்க நல்ல பண்புகளை புரிஞ்சுக்காம போய்ட்டார்ன்னு நினைச்சு, உங்களை, அவரோடு சேர்த்து வைக்க முயற்சி எடுத்தோம்.'' ''ரொம்ப மெனக்கெட்டு முயற்சி எடுத்துருப்பீங்க போலிருக்கே?'' என்றார் ஜீவன்.''ஓரளவு உண்மைதான். ரெண்டு மாசமா முருகனை தேடி, ஒரு வழியா கண்டுபிடிச்சோம். நல்ல பதவியில இருக்கார். அவர்கிட்ட உங்கள பத்தியும், உங்கள் முயற்சியினால, எங்க வாழ்க்கை எப்படி மேம்பட்டதுங்கறது பத்தியும், விளக்கமா பேசினோம். அவர், அதை கேட்டு, ஆச்சரியப்பட்டவர், உங்களை கஷ்டப்படுத்தியதற்காக வருத்தப்பட்டு, உங்களைக் கூட்டி போய், தன் கூடவே வச்சுக்கப் போறதாவும், வர்ற புதன் கிழமை உங்களைப் பாக்க வர்றதா சொன்னார். இந்த தகவலை உங்க வீட்டுக்கு வந்து சொல்லணுமுன்னு நினைச்சிருந்தோம். அந்த நல்ல காரியத்தை முதலில சொல்ல எனக்குத்தான் வாய்ப்பு கிடைச்சிருக்கு,'' என்றான்.துளசி கண்களில் ஆனந்த கண்ணீர். ஜீவனுக்கு ஒன்று புரிந்தது... நாம் போக நினைக்கும் ஊருக்கு, பல பாதைகள் இருக்கும். சில பாதைகள், சீக்கிரம் கொண்டு போய்ச் சேர்க்கும். சிலது, தாமதமாகும்.ஆனா, அதனாலே என்ன ஆகுமோன்னு கவலைப்பட்டுகிட்டே இருக்கக்கூடாது; உடம்பு தான் கெடும். இறைவன் மேல் பாரத்தை போட்டு, மனதை, ஒரு நிலைப்படுத்தி, ஊர் வர்ற வரைக்கும் சிரமங்களை, ஒரு பக்கம் தள்ளி வைச்சிட்டு, போய்கிட்டே இருக்கணும். ஒருநாள், நிச்சயம் நம் கனவு பலிக்கும்; நல்லது நடக்கும் என நினைத்து, நிம்மதி பெருமூச்சு விட்டார்.எல்.வி.வாசுதேவன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !