பொறுமையின் பிறந்தநாள்!
ஜூலை 22 - ஆடிப் பூரம்பொறுமையின் பெருமையைப் பற்றி நமக்கு போதிக்கிறது, ஆடிப்பூர நன்னாள். இந்நாளில் தான், பூமாதேவியே, இந்த உலகில் அவதரித்தாள்.முந்தைய யுகங்களில் சீதையாகவும், சத்யபாமாவாகவும் பிறந்தவள், கலியுகத்தில் ஆண்டாளாக அவதரித்தாள். மூவருமே பொறுமைசாலிகள், தைரியசாலிகள்; விஷ்ணுவை துணைவராக அடைந்தவர்கள்.இதில் ஆண்டாள், மிக மிக பொறுமைசாலி. அவள் கடவுளை அடைவதற்காக, தவமே இருந்தவள். இதை பிடிவாதம் என்றும் சொல்லலாம்.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிடிவாதமும், பொறுமையும் அதிகம் என்பது பொதுவான விஷயம். மேலும், இவர்களது ராசி சிம்மம். இதனால் தைரியசாலிகளாகவும் இருப்பர். அதுவும், பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.இந்த அரிய குணங்களைக் கொண்ட பூமாதேவியை, அரக்கன் இரண்யாட்சன் கடத்திச் சென்று, பாதாள லோகத்தில் சிறை வைத்தான். வராக அவதாரம் எடுத்து, பூமியைப் பிளந்து சென்று, அவளை மீட்டு வந்தார், விஷ்ணு. தன்னை மீட்ட விஷ்ணுவையே கணவராக அடைந்தாள், பூமாதேவி. பூமாதேவிக்கு, மங்களன், சீதா, பவுமன் ஆகிய குழந்தைகள் உண்டு. செவ்வாய் என்னும் கிரக அந்தஸ்தைப் பெற்றவன் தான், மங்களன். ராமாவதாரத்தின் போது, ராமரை மணக்க பூமியிலிருந்து வெளிப்பட்டவள், சீதா.விஷ்ணுவுக்கும், பூமாதேவிக்கும் பிறந்த மகன், பவுமன். ஆனால், திசை மாறி சென்றவன். இவன் செய்த அட்டூழியங்களால், இயற்பெயரான பவுமன் என்பதையே மறந்து, நரகாசுரன் என அழைக்க ஆரம்பித்து விட்டனர், மக்கள்.பூமாதேவி, சத்யபாமாவாக அவதாரம் எடுத்த காலத்தில், பெற்றவள் கையாலேயே உயிரை இழந்தவன். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு, சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற தத்துவத்தை இது உணர்த்துகிறது.பூமாதேவியின் மீது, நாம் மலம் கழிக்கிறோம், துப்புகிறோம், சாக்கடையை பரவ விடுகிறோம், வீடு கட்ட, மரம் நட என்று பல வகைக்கும் குழி தோண்டுகிறோம். இப்படி, எல்லா வகைக்கும் அவளை நாம் பயன்படுத்தினாலும், அவள் பொறுமையைக் கடைபிடிக்கிறாள்.ஆனால், இந்த பூமியில் வசித்துக் கொண்டே, அநியாயமும் அட்டூழியமும் செய்தால் மட்டும் பொறுக்க மாட்டாள். அந்த பாவ பாரத்தைக் குறைக்க, பூகம்பம், சுனாமி என, இயற்கை சீற்றங்களைத் தந்து, நம்மை ஒரு கை பார்த்து விடுவாள். இதனால் தான், பொறுமையாக இருப்பவர்களை சீண்டக் கூடாது என்பர்.கடவுளின் கருணையைப் பெறவும் பொறுமை வேண்டும். நாம் வேண்டியதை, ஒரே நாளில் அவர் தந்து விடுவதில்லை. பூமாதேவி ஆண்டாளாக அவதரித்த காலத்தில், அவள் விஷ்ணுவை அடைய கடைப்பிடித்த பொறுமை, கொஞ்ச நஞ்சமல்ல. இறுதியில், திருமாலே நேரில் வந்து அவளை ஏற்றுக் கொண்டார்.ஆடிப்பூர நன்னாளில், பொறுமையைக் கடைபிடிக்கவும், பொறுமைசாலிகளுக்கு துன்பம் விளைவிக்காமல் இருக்கவும் உறுதி எடுப்போம்.தி. செல்லப்பா