சிறுநீர் கழித்தால் அபராதமா?
பிரபல ஜவுளி கடைகளிலும், நகை கடைகளிலும் பணியாற்றும் பெண்களுக்கு, விடுதலை பெற்று தந்தவர், படத்தில் இருக்கும், பி.விஜி என்ற பெண் சமூக சேவகி. காலை, 9:00 மணிக்கு கடைக்குள் புகுந்தால், பணி முடித்து, இரவு, 7:00 - 8:00 மணிக்கு வீடு திரும்பிய பின்தான், இப்பெண்களால் சிறுநீர் கழிக்க முடிகிறது என்றால் நம்ப முடிகிறதா... இந்த கொடுமை, கடவுளின் சொந்த நாடு என்று பெருமை பேசும், கேரளாவில் தான் நடந்திருக்கிறது. இதற்கு எதிராக குரல் கொடுத்தால், பெண்கள் வேலை இழப்பர். நிர்வாகத்தின் கட்டுப்பாடுகளை மீறி கட்டுப்படுத்த முடியாமல், சிறுநீர் கழிக்கச் செல்லும் ஊழியரை கடுமையாக திட்டுவதுடன், அபராதமும் வசூலிப்பர். இந்த கொடுமைக்கு எதிராக போராடுவதற்கு, 2015ல், ஏ.எம்.டி.யூ., என்ற அமைப்பை நிறுவினார், விஜி. 'கடைகளில் பணியாற்றும் பெண்களுக்கு, உட்கார மூக்காலி அல்லது நாற்காலி போட வேண்டும் மற்றும் சிறுநீர் கழிக்க அனுமதிக்க வேண்டும்' என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, ஜூலை 4, 2018ல், போராட்டம் வெற்றி பெற்றது.— ஜோல்னாபையன்.