உள்ளூர் செய்திகள்

நாடகத்துக்கு அனுமதி தந்த, சோ!

டிசம்பர் 7 சோ நினைவு நாள்பிரபல நாடக நடிகரும், சோவுடன் பல ஆண்டுகள் நெருங்கி பழகியவருமான, 'டிவி' வரதராஜன், சோவை பற்றிய இனிய நினைவுகளை, 'தினமலர் - வாரமலர்' வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்:சென்னை, திருவல்லிக்கேணியில், இந்து உயர்நிலை பள்ளியில் படித்தபோது, எங்கள் பள்ளியில், நகைச்சுவை நாடகத்தை நடத்தினார், சோ. அன்று முதல் நான், அவரின் தீவிர ரசிகன். சோ எழுதி, நடித்த எல்லா நாடகங்களையும் பார்த்து, ரசித்து பிரமித்துப் போகும் வாய்ப்பு, எனக்கு கிடைத்தது.அதே பள்ளியில், சமஸ்கிருத ஆசிரியராக பணிபுரிந்தார், என் தந்தை, டி.வி.சீனிவாச அய்யங்கார்; அவர், என்னை பல நாடகங்களுக்கு அழைத்து சென்றதால், நாடகத்தின் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது.கடந்த, 2004ல், சோ எழுதி, இயக்கி, நடித்த, பல நாடகங்களை, குட் பை ஸ்டேஜ் என்று, கடைசி முறையாக மேடையேற்றினார். அனைத்து நாடகங்களையும் பார்த்து ரசித்தேன். 2006ம் ஆண்டிலிருந்து, சோவை அடிக்கடி சந்திக்கும் நபர்களில், நானும் முக்கியமானவனாக ஆனேன். 'அடிக்கடி நாடகங்களை தொடர்ந்து நடத்தணும்ன்னு என்னை கேட்கிறாயே... உனக்கு ஒரு நாடகம் கொடுக்கிறேன், நீ போடறியா...' என்று, ஒருமுறை என்னிடம் கேட்டார், சோ. எனக்கு இன்ப அதிர்ச்சி! 'போடறேன் சார். ஆனால், ஒரு நாள் மட்டும் அவகாசம் கொடுங்க...' என்றேன்.உடனே, 'அல்லயன்ஸ்' பதிப்பகத்திற்கு சென்றேன். சோவின் அனைத்து நாடகங்களையும், அப்பதிப்பகத்தார், புத்தகங்களாக வெளியிட்டிருந்தனர். அவரது, 15 நாடக புத்தகங்களை வாங்கினேன். இரவு துாங்காமல், விடிய விடிய படித்தேன். என்று தணியும் இந்த சுதந்திர தாகம், சம்பவாமி யுகே யுகே மற்றும் சரஸ்வதியின் சபதம் ஆகிய மூன்று புத்தகங்களை, தனியாக எடுத்து வைத்தேன். ஆழ்வார்பேட்டையில் உள்ள, ஏ.வி.எம்., ஆடியோ கடையில் விசாரித்ததில், 'என்று தணியும் நாடகம் மட்டும், 'வீடியோ'வாக இல்லை' என்றனர். ஆர்.எஸ்.மனோகர் பாணியில், பிரமாண்டமாக, சோ எழுதிய நாடகம் அது. அதில், எமன், இந்திரன், நாரதர், காந்தி, நேரு, பாரதி, அவ்வையார் என்று பல கதாபாத்திரங்களும் உள்ளன. பகல், 11:30க்கு, சோவை சந்தித்து, 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்ற நாடகத்தை போட விரும்புகிறேன்...' என்றேன். 'என் சகோதரரும், நடிகருமான அம்பியிடம் கேட்டு சொல்கிறேன்...' என்றார். மறுநாள், ஒன்றிரண்டு நிபந்தனையுடன் ஒப்புதல் அளித்தார். புது நாடகத்திற்கு, வழக்கமாக, 20 நாட்கள் ஒத்திகை பார்ப்போம். ஆனால், இந்த நாடகத்திற்கு, 60 நாட்கள் ஒத்திகை பார்த்தோம். ஏனெனில், சோவின் நாடகத்தை மேடையேற்றும் வாய்ப்பு, எங்களுக்கு கிடைத்திருக்கிறது; அதை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான்.சோ குழுவினர், அதே நாடகத்தை போட்ட போது ஏற்பட்ட அனுபவங்களை பற்றி, ஏழு நிமிடம் சோ பேசியதை, படமாக்கி, நாடகம் ஆரம்பிப்பதற்கு முன், அதை மேடையில் திரையிட்டோம். மார்ச் 21, 2012ல், சென்னை ஆழ்வார்பேட்டை, நாரதகான சபாவில், நாடகம் அரங்கேறியது; அரங்கம், 'ஹவுஸ்புல்!' சோ, உள்ளே நுழையும்போதே பலத்த கரகோஷம். நாடகம் முழுவதையும் பார்த்தார். மறுநாள் சந்தித்தபோது, சில திருத்தங்கள் மற்றும் ஆலோசனைகளை கூறினார். அவற்றை உடனேயே செயல்படுத்தினோம். இதுவரை, 99 முறை, இந்த நாடகத்தை மேடையேற்றி இருக்கிறோம். 100வது முறை நடத்தும்போது, சிறப்பான விழாவாக செய்ய, திட்டம் உள்ளது.என் அனைத்து நாடகங்களையும் பார்த்து விடும், இயக்குனர், கே.பாலசந்தர், என்று தணியும் இந்த சுதந்திர தாகம் நாடகத்தை மட்டும், நான் பலமுறை அழைத்தும், பார்க்க வரவில்லை. நட்பின் உரிமையில், 50வது காட்சிக்கு, அனுமதியின்றி அவர் பெயரை அழைப்பிதழில் போட்டு சொன்னேன்.அக்., 2, 2012ல், காந்தி ஜெயந்தி அன்று, 'இந்த நாடகத்தை நான் பார்க்க வரவில்லை என்றாலும், நாடகத்தை பற்றி விசாரித்தபடி தான் இருந்தேன். சோ நடித்த நாடகத்தையும், இன்று வரதராஜன் நடித்த நாடகத்தையும் பார்த்தேன். சோ, 100 சதவீதம் சிறப்பாக பண்ணியிருந்தார். ஆனால், வரதராஜனோ...' என்று சொல்லி, சற்று இடைவெளியில், '101 சதவீதம் சிறப்பாக செய்திருக்கிறார்... இனி, நல்ல கருத்துள்ள நாடகங்களையே, வரதராஜன் போட வேண்டும்...' என்று வாழ்த்தினார்.என் எல்லா நாடகங்களின், 'ஸ்கிரிப்ட்'களையும், பாலசந்தர் சாரிடம் முதலில் கொடுத்து, ஆசி பெறுவது வழக்கம். தியாகராஜர் நாடகம் ஆரம்பிக்கும்போது, கே.பி., சார், உயிருடன் இல்லை என்பதால், அப்போது, 'அப்பல்லோ' மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோவிடம், புது நாடகம் போட இருப்பதை சொல்லி, 'ஸ்கிரிப்ட்'டை கொடுத்து ஆசி வழங்க சொன்னேன். தொண்டையில், 'டியூப்' பொருத்தப்பட்டிருந்ததால், சோவால் பேச முடியவில்லை; கையை உயர்த்தி, ஆசி வழங்கினார்.மற்றொரு முறை, அப்பல்லோவில் அவரை பார்க்க சென்றபோது, 'வரது... காபி சாப்பிடறேளா...' என்று கேட்டார். தயக்கத்துடன், 'இல்லை சார்... வேண்டாம்...' என்றேன். 'நான் காபி சாப்பிட்டேன், நல்லா இருக்கு. அது தான் உங்களை கேட்டேன். பயப்படாதீங்க, உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா...' என்றவர், பக்கத்திலிருந்த படுக்கையை காட்டி, 'நீங்க அதிலே படுத்துக்கலாம். நான் பார்த்துக்கறேன்...' என்றார், சிரித்தபடி. டிச., 7, 2016ல், துபாயில் நாடகம் போடுவதற்காக, அதிகாலை, விமானத்தில் சென்றேன். அங்கு சென்றதும், பெரிய அதிர்ச்சி. 'சோ, காலமானார்' என்ற செய்தி கிடைத்தது. என் வாழ்க்கையில் மிகச்சிறந்த நண்பரை, வழிகாட்டியை, குருவை இழந்து விட்டேன். துபாய், 'எப்எம்' ரேடியோவில், சோவிற்கு அஞ்சலி செய்யும் வகையில், அவரை பற்றிய சிறப்புகளை, சாதனைகளை பேசி, என் அஞ்சலியை செலுத்தினேன்.கடந்த, 1977 முதல் 1996 வரை, 20 ஆண்டுகள் துார்தர்ஷனிலும், பின், 10 ஆண்டுகள், தனியார், 'டிவி'களிலும் செய்தி வாசிப்பாளராக, நிகழ்ச்சி தொகுப்பாளராக, தமிழர்களிடையே நன்கு அறியப்பட்டவர், 'டிவி' வரதராஜன். 'யுனைடெட் விஷுவல்' என்ற பெயரில், நாடக குழுவை அமைத்து, 18 நாடகங்களை, 3,000 முறைக்கு மேல் மேடை ஏற்றியிருக்கிறார். சோ எழுதிய நாடகத்தை, அவரின் அனுமதியுடன் மேடையேற்றிய, ஒரே நாடக குழு என்ற பெருமையும், இவருக்கு உண்டு 'நகரம் முழுவதும் நாள்தோறும் நாடகம்' என்ற முயற்சியில், பல குழுக்களின் நாடகங்களை, சென்னை நகரின் பல பகுதிகளிலும் தொடர்ந்து, 25 நாட்களில், 28 நாடகங்கள் நடத்தப் பட்டன. அவற்றில், 'யுனைடெட் விஷுவல்' நாடகங்கள் இரண்டு. அந்நிகழ்ச்சியின் நிறைவு நாளில், சோ, கவிஞர் வாலி மற்றும் மனோரமா ஆகியோர் வந்து, பாராட்டினர்சோவை தினமும் சந்திக்கும் நபர், நடிகர் ஜெய்சங்கரின் மகன், விஜய்சங்கர்; பிரபல கண் டாக்டர். விழித்திரை அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டியிருந்தது, சோவிற்கு. விஜய்சங்கரை செய்ய சொன்னார். இளம் டாக்டர் என்ற முறையில், பெரிய, வி.ஐ.பி.,க்கு ஆபரேஷன் செய்ய தயங்கினார். 'தைரியமாக பண்ணுப்பா, தப்பாகி விட்டால் மறுபடியும் பண்ணு...' என்றார், நகைச்சுவையாக. அவர் செய்த ஆபரேஷன், வெற்றி அடைந்ததுமனதில் தோன்றியதை, பட்டென்று பேசி விடுவார், சோ. யாரிடமும், எந்த எதிர்பார்ப்பும் சோவிற்கு கிடையாது. விருது, பட்டம், அரசிடமிருந்தோ, சபாக்கள், 'லயன், ரோட்டரி' சங்கங்களிடமோ, அவர் எதுவும் பெற்றது கிடையாது. அவர், இறந்த பின், 2017ல், சோவிற்கு, பத்மபூஷன் விருதை அளித்து கவுரவித்தது, மோடி அரசு. எஸ்.ரஜத்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !