பிக்கல் பிடுங்கல்!
காம்பவுண்டு கதவு திறக்கும் சப்தம் கேட்டதும், யார் என்று சகுந்தலா எட்டிப் பார்த்தாள். கணவர், ராகவன் தான் வந்து கொண்டிருந்தார். அவர், வீட்டுக்குள் நுழையும் முன்பே, சகுந்தாலாவுக்கு ஆவல் அடக்க முடியவில்லை.''என்னங்க...கோவில் நாராயணனை பாத்தீங்களா... ஜாதகம் கொடுத்தாரா?''''கொடுத்தார் சகுந்தலா. சுகி எங்க? அவளையும் கூப்பிடு,'' என்றார் ராகவன்.''என்னப்பா,'' என்று, கேட்டுக்கொண்டே அறையில் இருந்து வெளியில் வந்தாள், சுகன்யா.''சுகி, கோவில் நாராயணன், உனக்கு ஏத்தாப்ல, ஒரு ஜாதகம் இருக்குன்னு சொன்னாருல்ல, அதை வாங்கிட்டு வந்தேன். அவர் பார்த்த அளவுல, உன் ஜாதகத்துக்கு நல்லா பொருந்தியிருக்காம். எதுக்கும், உங்க ஜோசியர் கிட்ட கேட்டுக்கங்கன்னாரு,'' என்றார் ராகவன்.''ஏங்க... மாப்பிள்ளை போட்டோ கொடுத்தாரா,'' என்றாள், சகுந்தலா அடுத்த ஆவலுடன்.''ஆமாம்.... இந்தா ரெண்டு பேரும் பாருங்க,'' என்றபடி, கவரை எடுத்து. மகள் கையில் கொடுத்தார் ராகவன்.மகளை, ஒட்டி நின்று எட்டிப்பார்த்த, சகுந்தலா, ''பையன் நல்லா தான் இருக்கான். ஆமா... எங்க வேலை பாக்குறானாம்?''''சொல்றேன். எல்லாத்தையும் அவங்களே விவரமா எழுதியிருக்காங்க. சொந்த ஊர் கும்பகோணம் பக்கத்துல இருக்கற, ஸ்ரீவாஞ்சியம். பையனோட அப்பா, அம்மா ரெண்டுபேருமே டீச்சர். அவங்க, ஸ்ரீவாஞ்சியத்துல தான் இருக்காங்க. பையன், பெங்களூரு மான்யதால இருக்கற, ஐ.பி.எம்.,ல வேலை பார்க்குறான். நல்ல சம்பளம், பெங்களூரு பனாரஸ்வாடில, ப்ளாட் வாங்கியிருக்கான்.''ஒவ்வொன்றாக சொல்லச் சொல்ல, தன் மகள் முகத்தில் மலர்ச்சியை பார்த்தார் ராகவன்.''எல்லாத்துக்கும் மேல ஒரே பையன். பிக்கல், பிடுங்கல் எதுவும் கிடையாது. அப்பா - அம்மாவும் ஸ்ரீவாஞ்சியத்துல தான் இருப்பாங்க. பெரிய அளவுல எதிர்பார்க்கமாட்டாங்கன்னு, நாராயணன் சொன்னார். ஒரு வேளை எதிர்பார்த்தாலும், கேட்டத கொடுத்து, இந்த இடத்தை முடிச்சிடலாம்ன்னு பாக்குறேன். என்னடா சுகி, உனக்கு ஒ.கே., தானே...'' மிகுந்த எதிர்பார்ப்புடன், மகளை பார்த்து கேட்டார்.அதுவரை பளிச்சென்று இருந்த மகளின் முகம், திடீரென இருண்டு கிடப்பதை பார்த்து, லேசாக அதிர்ச்சி ஏற்பட்டது. இருந்தும், அதை வெளிக்காட்டவில்லை ராகவன்.''இல்லப்பா...எனக்கு இந்த இடம் வேண்டாம். வேற இடம் பாருங்க,'' என்று முகத்தில் அடித்தாற்போல் சொன்ன மகளைப் பார்த்ததும், கோபம் பொத்துக் கொண்டு வந்தது சகுந்தலாவுக்கு.''ஏண்டி... உனக்கென்ன பைத்தியமா? நல்ல இடம், நல்ல வேலை, நல்ல பையன்ங்கிறாங்க. எல்லாத்துக்கும் மேல, எந்தப் பிக்கல், பிடுங்கலும் இல்லை. இதவிட, நல்ல இடம் எங்கிருந்துடி கிடைக்கும்,'' என்று மகளிடம் பொரிந்து தள்ளினாள்.''அதான்... அதான் வேண்டாங்குறேன்,'' அதே வேகத்தில், சுகன்யாவிடம் இருந்து பதில் வந்தது. ஒருகணம் ராகவன், சகுந்தலா இருவருமே ஆடிப்போயினர்.சகுந்தலாவைப் சாந்தப்படுத்திய ராகவன், சுகன்யாவிடம் கேட்டார், ''என்னம்மா சொல்ற?''''ஆமாம்பா. பிக்கல், பிடுங்கல் இல்லன்னீங்களே... அதுனால தான் வேண்டாங்குறேன். நீங்க, ஒங்க குடும்பத்துக்கு ஒரே பையன். அம்மா, அவங்க வீட்ல ஒரே பொண்ணு. நான், உங்களுக்கு ஒரே பொண்ணு. அந்த மாப்பிள்ளையும், ஒரே பையன்னா, என்னோட பிள்ளைகளுக்கு மாமா, அத்தை, சித்தப்பா மாதிரி உறவுகளே தெரியாம போயிடும்பா. ஆரம்பத்தில, ஒரே பொண்ணுங்கறது எனக்கும் சந்தோஷமாகத்தான் இருந்துச்சு. ஆனா, கொஞ்சம் வளர வளரத்தான், பல விஷயங்களை நான் இழந்தது தெரிஞ்சுது. ஸ்கூலுக்கு, மற்ற பிள்ளைகள அண்ணன் கொண்டு வந்து விடுவாங்க. ஆனா, என்னய நீங்க தான் கொண்டு வந்து விடுவீங்க. கிளாஸ்ல, என் பிரண்ட்ஸ் நோட்டு, புத்தகங்கள் திடீர்ன்னு கிழிஞ்சு போயிருக்கும். கோடு கோடா பேனாவால கிறுக்கியிருக்கும். என்னன்னு கேட்டா... என் தம்பி கிழிச்சுட்டான், தங்கை கோடு போட்டுட்டான்னு சொல்வாங்க. அப்பல்லாம், எனக்கு தம்பியோ, தங்கையோ இல்லன்னு, எவ்வளவு ஏங்கியிருக்கேன் தெரியுமா?''காலேஜ் லெவல் வந்தப்போ, ஜெராக்ஸ் எடுக்கணும்னாலும், பிரண்ட்ஸ் கிட்டயிருந்து நோட்டு வாங்கிட்டு வரணும்னாலும், நானோ அல்லது நீங்களோ தான், போக வேண்டி வந்தது. விடுமுறை நாட்களிலே என் பிரண்ட்ஸ்க எல்லாம், 'அத்தை வீட்டுக்கு போனோம். மாமா வீட்டுக்கு போனோம்'பாங்க. ஆனா... எனக்கு எந்த உறவும் கிடையாதுன்னு நினைக்கும் போது, கோபம் கோபமா வரும். இப்படி, எவ்வளவோ சந்தோஷங்கள நான் இழந்திருக்கேன்பா. அதுக்காக, நீங்க எனக்கு குறை வச்சீங்கன்னு சொல்லல. என் பிரண்ட்ஸ் யாருமே பார்க்காத, குலுமணாலி, நேபாள், டில்லின்னு நீங்க எல்லா இடத்துக்கும் கூட்டிட்டு போயிருக்கீங்க. நான் எது கேட்டாலும் உடனே வாங்கித் கொடுத்திருக்கீங்க.''அதெல்லாத்தையும் விடுங்க. என்னோட ஒரு வயசுல காதுகுத்தி, மொட்டையடிக்கும் போது, தாய்மாமன் இல்லாம, அப்ப குடியிருந்த வீட்டு மாடில இருந்த அங்கிளோட மடியில தான் என்ன உட்கார வச்சு, காது குத்தினீங்கன்னு நீங்களே சொல்லியிருக்கீங்க.''நாளைக்கு, கல்யாணத்தின் போதும், தாலி முடியுற நாத்தனார், மோதிரம் போடுற மச்சினன், வெற்றிலை மடிச்சுத்தர, பொரியிடற மச்சினனுக்கெல்லாம் எங்க போவீங்க...''அந்தப் பக்கத்துலேயும் உறவுகள் கிடையாது. இந்த பக்கத்துலேயும் உறவுகள் கிடையாதுன்னா, நாளைக்கு என் குழந்தைகளுக்கும் மாமா, அத்தையெல்லாம் இருக்காதுப்பா. அதனால், இந்த இடம் வேணாம்பா. தயவு செய்து குறைஞ்சது ஒரு அண்ணன் அல்லது தம்பி, தங்கையாவது இருக்கற இடமா பாருங்கப்பா. ''உங்க காலத்துல, அது பிக்கல் பிடுங்கலா இருந்திருக்கலாம். ஆனா, இப்ப அவங்கவங்க வேலை அவங்கவங்களுக்கு. லீவுநாள், நல்லநாள்ல தான், எல்லாரும் ஒண்ணாக சேர முடியுது. அப்பயாவது சொந்தங்கள்ன்னு சொல்லிக்க உறவுகள் வேணும்பா,'' என்று கண்ணில் முட்டிக் கொண்டு நின்ற கண்ணீருடன், மூச்சு வாங்க சொல்லி முடித்த மகளை கட்டிக் கொண்டார் ராகவன்.''ஓகேடா கண்ணு... நீ சொல்றது நூறு சதவீதம் கரெக்ட். நீ கேக்குற மாதிரியான இடமே பார்ப்போம். ஓ.கே., தானே,'' என்று கூறிவிட்டு, ஜாதகத்தை எடுத்துக் கொண்டு, நாராயணனை பார்க்க புறப்பட்டார்.நாராயணனிடம் ஜாதகத்தை கொடுத்து, மகள் வேண்டாம் என்று சொன்னதற்கான காரணத்தையும் சொன்னார்.''ஓ... உங்க பொண்ணும், அப்படி சொல்லிட்டாளா?'' என்றார்.''ஏன்? ஏற்கனவே வேற யாரும் அப்படி சொல்லியிருந்தாங்களா?''''ஆமாம்... இந்த ஒரு பெண், ஒரு பையன் வைத்திருக்கிற வீட்டு குழந்தைகள் இப்படித்தான் சொல்லிகிட்டு இருக்காங்க... என்கிட்ட, இந்த மாதிரி சொன்ன ஜாதகங்களே பத்து இருக்கு,'' என்றார்.ஒருவரிடமே, பத்து ஜாதகம் இருக்கிறதென்றால், இந்தக் கால இளைஞர்கள், சொந்தங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகின்றனர் என்பது புரிந்தது. மகள் சொன்ன பின் தான், நாமும் எவ்வளவு சந்தோஷத்தை இழந்துள்ளோம் என்று, அசைபோட்டபடி வீடு நோக்கி நடந்தார் ராகவன்.***கே. ஸ்ரீவித்யா