உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அக்கா,என் வயது 52. நான் பள்ளி ஆசிரியர். கிறிஸ்தவன். என் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவம் இது. முப்பது ஆண்டுகளுக்கு முன், நான் பட்டப் படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது, அவள் என்னை காதலித்தாள்; நானும், அவளை உயிருக்கு உயிராக நேசித்தேன். இருவரும் கடிதங்கள் பரிமாறிக் கொண்டோம். அவள் வீட்டில் எங்கள் காதலுக்கு எதிர்ப்பு. என்னை மறந்து விடும்படி அவள் பெற்றோர் கூறினர். அவளை அடித்துத் துன்புறுத்தினர். அவளோ என்னை மறக்கவில்லை; மணந்தால் என்னையே மணப்பேன் என்ற உறுதியுடன் இருந்தாள். எனக்கு எழுதிய கடிதத்திலும், 'ஓர் அனாதை என்ற முறையில் என்னை மனைவியாக ஏற்றுக் கொள்ளுங்கள்...' என்று எழுதினாள். எங்கள் காதல் புனிதமானது. அவளும், நானும் மனம் விட்டுப் பேசியிருக்கிறோம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எனக்காகக் காத்திருப்பதாகக் கூறினாள். மூன்று ஆண்டுகள் எங்கள் காதல் தொடர்ந்தது. ஆனால், திடீரென கடிதம் எழுதுவதை நிறுத்தி விட்டாள்.என்னை எப்படித்தான் மறந்தாளோ? அவள் வீட்டார் அவளுக்குத் திருமணம் செய்து வைத்தனர். ஊரை விட்டே அவள் போய் விட்டாள். எங்கு இருக்கிறாளோ தெரியவில்லை. எங்கோ ஆசிரியையாகப் பணிபுரிவாள் என்று நினைக்கிறேன். காதலில் தோல்வியுற்ற நான், என் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டேன். இன்று எனக்கு திருமண வயதில் இரண்டு மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர். ஆனால், இன்னும் என்னால் என் பழைய காதலியை மறக்க முடியவில்லை. அவள் நினைவு வரும்போதெல்லாம், அவள் தந்த கடிதங்களை எடுத்துப் படிப்பேன். இதெல்லாம் என் மனைவிக்கு தெரியாது. நான் இறப்பதற்குள் என் பழைய காதலியை தூரத்தில் இருந்தாவது ஒரே ஒருமுறை பார்க்க மனம் ஏங்குகிறது. என் எண்ணம் தவறா? அவள் அனுப்பிய கடிதங்களை தீயில் போடவோ, கிழித்து எறியவோ என் மனம் மறுக்கிறது; அவற்றை ஒரு பொக்கிஷமாகக் கருதிப் பாதுகாத்து வருகிறேன். அவளுக்கும் இப்போது ஐம்பது வயது இருக்கும். அவளையும், அவள் குழந்தைகளையும் பார்க்க மனம் ஆசைப்படுகிறது. எனக்கு நீங்கள் தான் ஒரு வழி கூற வேண்டும்.— இப்படிக்கு,உங்கள் அன்புத் தம்பி.அன்பிற்குரிய சகோதரருக்கு,உங்கள் கடிதம் கிடைத்தது. முப்பது வருடங்களுக்கு முன் காதலித்த பெண்ணை, இன்னமும் மறக்காது மனசுக்குள் வைத்து, அவளது கடிதங்களை பத்திரமாக பாதுகாத்து வருவதாக எழுதியிருக்கிறீர்கள். கிட்டத்தட்ட வாழ்க்கையில் அரை நூற்றாண்டைத் தாண்டிய உங்களுக்கு, நான் புதுசாக எதையும் சொல்லப் போவதில்லை. ஆனாலும், புனித பைபிளில் வருவது போல, 'பெரியோர் எல்லாம் ஞானிகள் அல்ல; முதியோர் எல்லாம் நீதியை அறிந்தவர் அல்ல' என்பது போல், மனச்சலனம் என்பதும், தாபம் என்பதும், எல்லா வயதினரிடையேயும் சகஜம்.யார் கண்டது சகோதரரே... நீங்கள் காதலித்த பெண்ணே உங்களுக்கு மனைவியாக அமைந்திருந்தால், சில வருடங்களுக்குப் பின்னால், அந்த மணவாழ்க்கையே உங்களுக்கு கசந்திருக்கலாம் அல்லது சுமையாகிப் போயிருக்கலாம். 'காதல் ஜெயிப்பதே - அது தோல்வியுறும் போது தான்' என்று கூட சொல்வதுண்டு. மறுபடியும் அவளையும், அவள் குழந்தைகளையும், ஒரு முறையேனும் தள்ளி இருந்தாவது நீங்கள் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்; இந்த ஆசை ஒன்றும் தப்பானதல்ல.ஆனால், உங்கள் மனசுக்குள் உருவாக்கி வைத்திருக்கும் பழைய காதலிக்கும், தற்போதைய ஐம்பது வயதுப் பெண்மணிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும்.அன்றைக்கு சின்ன விஷயங்களுக்குக் கூட கன்னம் குழிய சிரித்தப் பெண்— இன்றைய வாழ்க்கையில் எந்திர கதியில் சிக்கி, சிரிப்பையே தொலைத்திருக்கலாம். அன்றைக்கு சின்னஞ்சிறு குழந்தைகளைப் பார்த்தவுடன் முகமலர்ந்து, அள்ளி அணைத்து விளையாடிய சிறு பெண் — இன்று குழந்தைகள் பெற்று, பேரன் பேத்திகளைப் பார்த்து, சதா சிடுசிடுத்த முகமுடையவளாக மாறியிருக்கலாம் அல்லது உங்களை விட்டுப் பிரிந்து, இன்னொருவரை மணந்தவள், நீங்கள் எதிர்பார்த்தபடி, பழைய காதலனையே நினைத்து, நொந்து நூலாகாமல், அன்பான கணவரின் அரவணைப்பில் பழசை மறந்து, புதிய வாழ்க்கையில் மிகவும் ஒன்றிப் போயிருக்கலாம். அதைப் பார்த்தால் உங்களுக்கு ஏமாற்றமாகவும், 'ச்சீ இவ்வளவு தானா...' என்பது போலவும் மனசு சங்கடப்படலாம்.வாழ்க்கை என்பது ரயில் பயணம் போலதான். யாரோ வருவர்... யாரோ போவர். நேற்று நடந்ததை நேற்றுடன் விட்டுவிட்டு, நாளை நடக்கப் போவதைப்பற்றி அநாவசிய கற்பனைக் கோட்டைகளைக் கட்டிக் கொண்டிராமல், இந்த நிமிடம் நமக்கு என்ன இருக்கிறதோ, அதில் சந்தோஷமாக இருப்பதே நல்லது.நீங்களாக உங்கள் பழைய காதலியை தேடிப்பார்க்க முயற்சி செய்யாதீர். தேடலின் முடிவில் ஏமாற்றமும், வருத்தமும், தர்மசங்கடமும் உங்களுக்கு நேரிடலாம். அப்படியொரு சந்திப்பு உண்டென்று கடவுளின் சித்தமாக இருந்தால் அது நடக்கும்.ஆனாலும் சகோதரரே... தற்போதைய வாழ்க்கையில், ஒவ்வொரு மனிதனும் தன் இதய சாம்ராஜ்யத்தில் - கடவுளின் முன் சத்ய வாக்கு கொடுத்து, கை பிடித்த ஒருத்தியை மட்டுமே வீற்றிருக்க வைத்து, அவளுக்கு உண்மையான வனாகவும், தோழனாகவும் இருக்க வேண்டும் என்பதே கர்த்தரின் வாக்கு. ஆதலால் —பைபிளில் மத்தேயு 18ம் அதிகாரத்தில் 8,9 வது வசனங்களில் கூறியிருப்பது போல...'உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு. நீ இரண்டு கையுடயவனாய் அல்லது இரண்டு காலுடையவனாய் நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைப் பார்க்கிலும், சப்பாணியாய், அல்லது ஊனனாய், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.'உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; இரண்டு கண்ணுடையவனாய் எரிநரகத்தில் தள்ளப்படு வதைப் பார்க்கிலும், ஒற்றைக் கண்ணனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது எனக்கு நலமாயிருக்கும்!'— இதை அப்படியே உங்கள் வாழ்க்கையிலும் எடுத்துக் கொள்ளலாமே... எது ஒன்று நமக்கு துன்பத்தையும், மனகிலேசத்தையும் கொடுத்து, அந்த ஒன்றை சுமந்தபடி, நாம் காலம் முழுக்க பாரம் சுமப்பதைக் காட்டிலும், அந்த ஒன்றை தூக்கிப் போட்டுவிட்டு அமைதியுடன் வாழலாமே...ஆதலால், தரிசனம் கிடைக்காதா என்று ஏங்க வேண்டாம். கடவுளின் கரிசனம் எப்படியோ - அப்படியே நடக்கட்டும் என்று கடவுளிடமே விட்டுவிடுங்கள்.— என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !