அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள சகோதரி -எங்கள் குடும்ப பிரச்னைக்கு தீர்வு காண, வழி கூறுமாறு வேண்டுகிறேன். எங்களுக்கு மூன்று பெண்களும், ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். பையன் தான் கடைசி. மூத்த மகளுக்கு, திருமணமாகி, வாழ்க்கையை இனிது நடத்துகிறாள். இரண்டாவது மகளுக்கு திருமணம் நிச்சயமாகி விட்டது.இரண்டாவது மகள், யாரையும் எளிதில் சிரிக்க வைத்து விடும் பேச்சாற்றல் மிக்கவள். எந்நேரமும் பேசுவாள்; அவள் பேசுவதை, கேட்டுக் கொண்டே இருக்கலாம். அப்படிப்பட்டவளுக்கு, திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடினோம். சில நிபந்தனைகள் போட்டாள்.பையன் குட்டையாக இருக்கக் கூடாது. ஏனென்றால், அவளது பாட்டி, அதாவது, என் மாமியார் ரொம்ப குட்டை. இவளும், ரொம்ப வளர்த்தி இல்லை. மாப்பிள்ளை குட்டையாக இருந்தால், சர்க்கஸ் கம்பெனி தான் நடத்த வேண்டும் என்று, ஜாலியாகச் சொல்வாள்.'ஸ்மார்ட்' ஆக, முற்போக்கு சிந்தனை உள்ளவராக,தன்னை வேலைக்கு அனுப்பாதவராக இருக்க வேண்டும்; 'டிவி'களில் வரும் முகங்கள் போன்று இருக்க வேண்டும் என்று, நினைத்திருப்பாள் போலும். அதை, அவள்,வெளிப்படையாக சொல்லவில்லை. தற்போது, பேசும் பேச்சுகளிலிருந்து புரிந்து கொண்டோம்.நாங்கள் பார்த்த பையன், அமைதியானவர், அதிர்ந்து பேசாதவர், நல்ல உழைப்பாளி; பணம் சம்பாதிப்பதில் சாமர்த்தியசாலி. சிகரெட், குடி பழக்கம் இல்லாத நல்ல குணசாலி. ஆனால், பையன் கொஞ்சம் புது நிறமானவர். எங்கள் மகள் நல்ல நிறம். பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்தனர். இவளுக்கு, பையனைப் பார்த்ததும், அவரது வெளித் தோற்றம் பிடிக்கவில்லை. ஆனால், நாங்கள் பையனின் நல்ல குணங்கள் பிடித்துப் போனதால், 'சரி'யென்று சொல்லி, இவளையும் சம்மதிக்க வைத்தோம். இப்படிப்பட்ட நல்ல பையன், கிடைப்பது அரிது என்பது, எங்கள் எண்ணம். ஆனால், அவள் எண்ணங்களுக்கு எதிரானவனாக உள்ளான் என்பது, அவளது வாதம்.இவளுக்கு, ஜீன்ஸ் போட இஷ்டம். அது, மாப்பிள்ளைக்கு இஷ்டம் இல்லை. இதுபோன்று சில சின்ன சின்ன முரண்பாடுகள்.தற்போது,சரிவர பேசுவது இல்லை; எப்போதாவது தான் பேசுவாள். அதுவும், அவளுக்கு இஷ்டம் இருந்தால். மற்றபடி, அவளது குதூகல பேச்சு நின்று விட்டது. திருமண பேச்சை எடுத்தாலே, எரிந்து விழுகிறாள். தற்போது, திருமண வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. 'நீங்கள் சொல்கிறதால் திருமணம் செய்வேன். பின்பு, என் இஷ்டம் போல் தான் வாழ்வேன். எனக்காக யாரும் கவலைப்பட வேண்டாம்...' என்று, கத்துகிறாள்.திருமணத்திற்குப் பின், நிச்சயமாக நன்றாக இருப்பாள். தற்போது, எந்த ஆலோசனையும் சொல்ல இயலவில்லை. நீங்கள் தான், ஆலோசனை சொல்ல வேண்டும்.இந்தப் பெரிய கண்டத்திலிருந்து மீட்ட மகிழ்ச்சி, உங்களுடையதாய் இருக்கட்டும்.- இப்படிக்கு,உங்கள் சகோதரி.அன்புள்ள சகோதரி -தங்கள் கடிதம் கண்டேன். எப்பொழுதும், 'கலகல'வென, சிரித்து வளைய வரும் மகள், சோர்ந்து துவண்டு போய் உட்கார்ந்திருந்தால், நிச்சயம், தாயுள்ளம் பரிதவிக்கும் தான். அதிலும், கல்யாணத்துக்கு இருக்கிற பெண், இப்படி இருந்தால், கண்டிப்பாய் மனசு வலிக்கும் தான்.ஆனால், அம்மா... எனக்கென்னவோ, நீங்கள், அவளுக்காக, இன்னும் சிறிது காலம், விட்டுப் பிடித்திருக்கலாமோ என்று தான் தோன்றுகிறது. உங்கள் காலம் மாதிரி, பெற்றோர் பார்த்து வைக்கிற வரனை, குனிந்த தலை நிமிராமல், இந்தக் காலப் பெண்கள் ஏற்றுக் கொள்வதில்லை.மேலும், காதல் திருமணத்தில் சில பிரச்னைகள் இருப்பது போலவே, பெற்றோர் பார்த்து முடித்து வைக்கும் திருமணங்களிலும், பிரச்னைகள் இருக்கின்றன.முதல் வகையாக இருந்தால், மண வாழ்வில் எத்தனை கஷ்டம் வந்தாலும், அது, சம்பந்தப்பட்ட இருவரோடு போய் விடுகிறது. பையனும், பெண்ணும் தாங்கள் தேர்ந்தெடுத்த வாழ்க்கைக்கு, தாங்களே பொறுப்பாளிகளாகி விடுகின்றனர். 'உன்னால் தான் இப்படி' என்று, யாரையும், விரல் நீட்டி, குற்றம் சாட்ட முடியாது.பெற்றோர் பார்த்து முடித்து வைக்கும் திருமணத்தில், மணமகனோ, மணமகளோ குற்றம், குறை சொல்ல முடியாதவர்களாய் இருந்தாலும் கூட, வற்புறுத்தலின் பேரில், கழுத்தை நீட்டிய கசப்பு, காலமெல்லாம் இருக்கும். சம்பந்தப்பட்ட பெண்ணோ, பையனோ, எதுடா சாக்கு என்று காத்துக் கொண்டிருப்பர். எல்லாமே நல்லபடியாக இருந்து விட்டால் கூட, அதை வெளிப்படையாய் பாராட்டிச் சொல்ல மாட்டார்கள்.அடி மனசில், ஒரு வருத்தம் இருந்து கொண்டே இருக்கும்.உங்கள் பெண்ணோ நிறைய படித்திருக்கிறாள். தனக்கு இப்படிப்பட்டவன் தான் கணவனாக வர வேண்டும் என்று, ஒரு பெண் ஆசைப்படுவதில், என்ன தவறு இருக்க முடியும்?உங்கள் விருப்பத்துக்காக, உங்கள் மகள் இரட்டைப் பின்னலை ஒற்றையாக்கலாம்; சுரிதார் தவிர்த்து புடவையாக்கலாம். (அதுவே கூட, என்னிஷ்டம் என்கிற பெண்கள் தான் அதிகம்.) அப்படியிருக்க, காலம் முழுக்க, வாழப் போகிற பெண், தனக்கு வரவேண்டிய மாப்பிள்ளை இப்படி இப்படியிருக்க வேண்டும் என்று, எதிர்பார்ப்பதில் என்ன தவறு?சாதாரணமாகவே, திருமணம் நிச்சயித்த பிறகு, மணப்பெண், இனம் புரியாத பயத்தில் இருப்பது சகஜம்.புது வீடு, புதுக் குடும்பம், புதிய சூழ்நிலை, முன்பின் பழகியிராத கணவன்... எப்படி இருக்குமோ என்கிற கவலை, நிச்சயம் இருக்கும். இப்பொழுது, பெற்றோரின் வற்புறுத்தல் என்கிற சுமையும் சேரும் போது, அவள் மூலையில் உட்காருவதும், காரணமின்றி அழுவதும், எரிச்சலடைவதும் இயல்பான ஒன்று தானே!நீங்கள், அதிகம் வற்புறுத்தாமல் விட்டிருந்தால் கூட, அவளுக்கு இந்த மாப்பிள்ளையைப் பிடித்துப் போயிருக்கலாம் இல்லையா?உங்களுடைய பாசமும், அன்பும், பெண்ணுக்கு தைரியம் கொடுத்து நல்ல வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க வழிகாட்ட வேண்டுமே தவிர, பாசமே கழுத்தை இறுக்கும் கயிறாகி விடக் கூடாது.என்னிடம் யோசனை கேட்டிருக்கிறீர்கள்... எனக்கென்னவோ, தனக்கேற்ற துணைவனை, ஒரு பெண், தானே தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று, தோன்றுகிறது. அந்தக்கால பழக்கவழக்கங்களில் ஊறிய உங்களைப் போன்றோருக்கு, என் பதில், அதிர்ச்சியைத் தரலாம். ஆனாலும், யோசித்துப் பாருங்கள் உண்மை புரியும்!நீங்கள் தேடித் தேடி, சல்லடை போட்டு சலித்து, அமைதியானவராய், அதிர்ந்து பேசாத வராய், பணம் சம்பாதிப்பதில் சாமர்த்தியசாலியாய், மது, சிகரெட் பழக்கமே இல்லாத வராய் மொத்தத்தில் அந்த நாளைய காந்திஜி, நேரு, வ.உ.சி., வல்லபாய் பட்டேல் இவர்களை சம விகிதத்தில் கலந்த மொத்த உருவமாய், ஒருவரை கொண்டு வரலாம்...ஆனால், உங்கள் பெண்ணுக்கு ஒரு அஜித்தையோ, சூர்யாவையோ பிடித்திருந்தால், அதை தவறு என்று கூற முடியாதே!எனவே, உங்கள் மகளே, ஒரு முடிவுக்கு வரும்படி விட்டு விடுங்கள். எல்லாமே இனிதாய் முடியும்!- என்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்.