அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மாவிற்கு —என் வயது 29; வீட்டிற்கு ஒரே பையன். அம்மா அரசு ஊழியர்; அப்பா இல்லை. எவ்வித சிரமமின்றி சந்தோஷமாக வாழ்கிறோம்.அம்மா, நான் செய்த தவறுக்காக, தினமும் நரக வேதனை அனுபவிக்கிறேன். ஏழு ஆண்டுகளுக்கு முன், திருமணமான பெண் ஒருவரிடம் பழக்கம் ஏற்பட்டது. அதன் விளைவாக, பிறப்புறுப்பில் பருக்கள் போன்ற சிறு சிறு கொப்பளங்கள் ஏற்பட்டது. அதை, பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், மனதிற்குள் சிறு சந்தேகம் ஏற்படவே, சில மாதங்கள் கழித்து, ரத்த பரிசோதனை செய்து பார்த்தேன். எச்.ஐ.வி., இல்லையென்று தெரிந்தது. அதனால், அப்பெண்ணுடான தொடர்பு நீடித்தது. ஆனாலும் இப்பருக்கள் எதனால் வந்தது என்ற சந்தேகம் நீங்காததால், மீண்டும் பரிசோதனை செய்தேன். அதிலும், எச்.ஐ.வி., இல்லையென்று ரிசல்ட் வந்தது. அதன்பின், எச்.ஐ.வி., பற்றிய விழிப்புணர்வு தெரிந்து, அப்பெண்ணுடனான உறவை துண்டித்தேன். இந்நிலையில், கடந்த ஆண்டு அரசு மருத்துவமனை, பால்வினை நோய் பிரிவில், என் பிரச்னையை தெரிவித்தேன். பரிசோதித்து பார்த்ததில், எனக்கு பால்வினை நோய் இருப்பது தெரிந்தது.அங்கு பணிபுரியும் நல்ல மனிதர் ஒருவர், அதே மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரிடம் என்னை அனுப்பி வைத்தார். அவர் என்னை பரிசோதித்து, தனியார் லேபில் மீண்டும் ரத்த பரிசோதனை எடுக்க சொன்னார். அதில், நோய் இருப்பது உறுதியானது.இதற்காக, வாரம் ஒன்று என்று, மூன்று வாரங்களாக ஊசி மற்றும் மருந்துகளை எடுத்துக் கொண்டேன். சில நாட்களுக்கு பின், மீண்டும், 'டெஸ்ட்' எடுக்க சொன்னார். அதன்பின் சத்து மாத்திரைகளை சாப்பிடச் சொன்னவர், இரண்டு மாதம் சென்றதும், மீண்டும் ஒரு, 'டெஸ்ட்' எடுக்க சொன்னார். அதைப் பார்த்த பின், 'இனி, எந்த பிரச்னையும் இல்ல; நீங்க திருமணம் செய்துக்கலாம்; சத்து மாத்திரைகள மட்டும் விடாம சாப்பிடுங்க...' என்றார்.ஆனாலும், எனக்கு ஒரே மனக்குழப்பமாக உள்ளது. தினமும் இதை நினைத்து, நரகவேதனை அனுபவிக்கிறேன். வீட்டில் உள்ளோரிடம் கோபப்படுகிறேன்; வேலைக்கும் ஒழுங்காக செல்வதில்லை. எதையோ பறிகொடுத்தவன் போல் இருக்கிறேன். எனக்கு சிகரெட், மது போன்ற எந்த பழக்கமும் இல்லை.தற்போது, என் அம்மா, எனக்கு பெண் பார்த்து விட்டார். கூடிய விரைவில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது.அம்மா... எனக்கு திருமணம் நடக்குமா? நான், இதே மருத்துவரிடம் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளலாமா அல்லது வேறு சிறந்த மருத்துவரை அணுக வேண்டுமா? இந்நோயை முற்றிலும் குணப்படுத்த முடியுமா, திருமணத்திற்கு பின், என் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு இதனால், ஏதாவது பிரச்னை ஏற்படுமா? எங்கே சென்றால் இந்நோய் முற்றிலும் குணமாகும்?உங்கள் பதிலில் தான், என் எதிர்காலம் இருக்கிறது. அம்மா... என்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கை கெட்டுப் போய்விடக் கூடாது. நீங்கள் பெற்ற பிள்ளையாக நினைத்து, எனக்கு நல்வழி கூறுங்கள்.— இப்படிக்கு,அன்பு மகன்.அன்புள்ள மகனுக்கு —'ஒன் நைட் ஸ்டாண்ட்' என, ஆங்கிலத்தில் கூறுவர். அதற்கு தமிழில், 'ஓரிரவு கூடல்' என, அர்த்தம். முன்பின் தெரியாத ஆண், பெண் ஒரே ஒருநாள் உறவு வைத்துக் கொள்வது. இத்தகைய உறவுகள் மிக மிக ஆபத்தானவை; எயிட்ஸ் நோயையும், பலவித பால்வினை நோய்களையும் பரிசாக தரும்.நீயும், இவ்வாறு திருமணமான பெண்ணிடம் உறவு கொண்டு பால்வினை நோயை பரிசாக பெற்றுள்ளாய். தற்போது, பல்வேறு சிகிச்சைகளுக்கு பின்பும், உன் ரத்த பரிசோதனை ரிசல்ட் பாசிடிவாக தான் உள்ளது. இந்நிலையில், திருமணம் செய்து கொள்ளலாமா, திருமணம் நடக்குமா என கேட்டுள்ளாய். நடக்கும்; ஆனால், திருமணத்திற்கு பின், உன் மனைவிக்கும் பால்வினை நோய் தொற்றும்; இது தேவையா? அதனால், திருமணத்தை மேலும் ஒரு ஆண்டுக்கு தள்ளிப் போடு.அதே மருத்துவரிடமோ அல்லது வேறு ஏதாவது பிரபல பால்வினை நோய் மருத்துவரிடமோ சென்று ஆலோசனைகளை பெற்று சிகிச்சை பெறு. தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு, மாதம் ஒருமுறை ரத்த பரிசோதனை செய்து கொள். ரிசல்ட் நெகடீவ் என்று வரும் வரை தொடர்ந்து சிகிச்சையும், ரத்த பரிசோதனையும் செய்து கொள்வது மிக நல்லது.மகனே... நிச்சயமாய் இந்நோயை முற்றிலும் குணமாக்கலாம். அதனால், பூரணமாய் குணமாகாமல் திருமணம் செய்து கொள்ளாதே! இதனால், உன் மனைவிக்கும், குழந்தைக்கும் பிரச்னை ஏற்பட, 100 சதவீத வாய்ப்புண்டு.அரசு மருத்துவமனையையோ அல்லது பால்வினை நோய் சிறப்பு மருத்துவரையோ சந்தித்து, நிவாரணம் பெறு. திருமணத்திற்கு முன், விழித்தது நல்ல விஷயம். தவறான பெண்கள் விஷயத்தில் ஒருமுறை சூடுபட்ட நீ, இனி அப்பக்கம் போக மாட்டாய் என நம்புகிறேன். நீ பெற்ற விழிப்புணர்வை உன் திருமணமாகாத நண்பர்களுக்கும் எடுத்துச் சொல். அந்தரங்க உறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்.பூரண குணம் பெற்றபின் திருமணம் செய்து, அழகான, ஆரோக்கியமான குழந்தை பெற வாழ்த்துகிறேன்.— என்றென்றும் தாய்மையுடன் சகுந்தலா கோபிநாத்