உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு —நான், 25 வயது பெண்; திருமணமாகி, இரு ஆண்டுகள் ஆகின்றன. பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் எங்களுடையது! எங்கள் திருமணத்திற்கு முன், என் கணவர் காதல் திருமணம் செய்துள்ளார்; அப்பெண் விதவை. அவளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. அவளுடைய முதல் திருமணத்திற்கு முன், இருவரும் காதலித்துள்ளனர். ஆனால், அவளுடைய தந்தையின் கட்டாயத்தினால், வேறு ஒருவரை திருமணம் செய்திருக்கிறாள். இரண்டு ஆண்டுகளுக்கு பின், அவள் கணவன் விஷம் குடித்து இறந்து விட்டார். அதன்பின், அப்பெண் என் கணவரை சந்தித்து பேசி, இருவரும் திருமணம் செய்துள்ளனர். ஆனால், அப்பெண்ணின் மகனை மட்டும் என் கணவர் ஏற்க மறுத்துள்ளார். அப்போது இவர்கள் சேர்ந்து வாழவில்லை என்பதால், இவர், வேறு திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்; அவளும் சம்மதித்து விட்டாள்.இவர் தன் அம்மாவின் விருப்பப்படி, என்னை திருமணம் செய்தார். ஆனால், என்னை திருமணம் செய்த பின்பும், அவளை அடிக்கடி சந்திக்க சென்றிருக்கிறார். இவை அனைத்தும், ஓர் ஆண்டிற்கு பின்பே எனக்கு தெரிய வந்தது. இப்போது, எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அப்பெண்ணிற்கும், இவர் மூலம் பிறந்த பெண் குழந்தை உள்ளது.அந்த பெண் ஒருமுறை எங்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாள். எங்களை அழைத்து பேசினர் போலீசார். 'அவளுடன் வாழ விருப்பம் இல்லை; என்னுடன் தான் வாழ விருப்பம்...' என்று கூறி, 'இனிமேல் அவளை பார்க்க செல்ல மாட்டேன்...' என வாக்கு கொடுத்தார், என் கணவர். பின், 'அவளையும், குழந்தையையும் அம்போன்னு விட முடியாது; இருவரையும் பார்த்துக் கொள்கிறேன்...' என்று கூறி, மாதம் ஒரு முறை அங்கு சென்று வருகிறார். அவர் அங்கு சென்று வருவதில், எனக்கு விருப்பம் இல்லை.நானும், என் பெண்ணும் கறுப்பு; அவளும், அவளுடைய பெண்ணும் சிவப்பு. இதுவே, எனக்குள் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது. அதேசமயம், என் வாழ்க்கையை பங்கு போட்டு வாழ முடியாது. முதலிலேயே கூறியிருந்தால் விலகியிருப்பேன். இந்த விஷயம் என் பெற்றோருக்கு தெரியாது; அவர்கள் வயதானவர்கள். அதேசமயம், என் குழந்தையின் எதிர்காலம் பற்றிய பயமும், வேதனையை தருகிறது.இவ்விஷயம் தெரிய வந்த போது, என்னையும், குழந்தையையும் பார்த்துக் கொள்வதாக கூறினார் என் மாமியார்; அதனால், இவ்விஷயத்தைப் பற்றி என் வீட்டில் கூறவில்லை. ஆனால், இப்போது என் மாமியார், என்னுடன் அடிக்கடி சண்டை போடுகிறார். வாழவே பிடிக்கவில்லை. என் கணவரோ முன் கோபக்காரர்; சாதாரண விஷயத்திற்கு கூட கோபப் படுகிறார்.சட்டப்படி, முதல் மனைவிக்கு தான் உரிமையும், அதிகாரமும் உள்ளதா, எனக்கு இல்லையா? முதல் திருமணம் பதிவு திருமணம் இல்லை.என் பிரச்னை தீர நல்ல வழியை கூறுங்களேன்.— இப்படிக்கு,அன்புள்ள வாசகி.அன்புள்ள மகளுக்கு —உன் வயது முதிர்ந்த பெற்றோர், உனக்கு பார்த்த வரன், ஏற்கனவே திருமணமானவனா, இல்லையா என்பதை தீர விசாரிக்கவில்லை. அதனால், இப்போது பிரச்னைகள் பூதாகரமாய் உருவாகி, அவதிப்படுகிறாய்.முதலிலேயே தான் காதலித்த பெண்ணையே, உன் கணவன் திருமணம் செய்திருந்தால், காதலியின் முதல் கணவன் விஷம் குடித்து இறந்திருக்க மாட்டான்; நீயும் ஒரு செகன்ட் ஹாண்டை திருமணம் செய்து, அல்லலுற்றிருக்க மாட்டாய்.நீ எந்த மதத்தை சேர்ந்தவள், உன் கணவன் அரசு துறையில் பணி புரிகிறாரா அல்லது தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறாரா இல்லை சுயதொழில் புரிகிறாரா போன்ற விவரங்கள் உன் கடிதத்தில் இல்லை.உன் மாமியாரின் பொய் உத்தரவாதத்தை நம்பி, உன் கணவரின் கயமைதனத்தை உன் பெற்றோரிடமும், உறவினர்களிடமும் தெரிவிக்காதது தவறு.நீயும், உன் மகளும் கறுப்பு என்ற தாழ்வு மனப்பான்மை தேவையில்லாதது. கறுப்பு, திராவிட நிறம்; ஆரோக்கியமான கறுப்பில், மாய வசீகரம் இருக்கிறது.முதல் திருமணம் பதிவு செய்யப்படா விட்டாலும், அது, சட்டப்படி செல்லத்தக்கதே! முதல் மனைவி, உன் கணவன் மேல் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு போடலாம். நீ அதிகம் படிக்காத இல்லத்தரசியாக இருக்கிறாய். இந்நிலையில், நீ, உன் கணவனின், முதல் மனைவியுடன் சமரசம் செய்து கொள்வது நல்லது. முதல் மனைவி, வீட்டுக்கு மாதம் ஒரு முறை தானே, உன் கணவன் போகிறார்... போய் வரட்டும் என விட்டு விடு.'வாழ்க்கையை பங்கு போட விரும்பவில்லை...' என்று கூறுகிறாய். மகளே... யோசித்துப் பார்... முதல் மனைவியும் இதே மனப்பான்மையுடன் தானே இருப்பாள்.நீ ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். முதல் மனைவி கொடுக்கும் இடத்திலும், நீ வாங்கும் இடத்திலும் இருக்கிறீர்கள். சமரசம் செய்து கொள்ள மனம் ஒப்பா விட்டால், விலகி விடு. உன் கணவர் அவரின் முதல் மனைவியுடன் வாழட்டும். நீயும், உன் மகளும் சொந்தக் காலில் நில்லுங்கள்.இரண்டு மனைவிகளுமே, யதார்த்தத்தை புரிந்து, ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்து வாழ்வது தான் சிறந்தது.என் ஆலோசனை, உணர்வுப்பூர்வமானதல்ல, அறிவுப்பூர்வமானது. முடிவு உன் கையில் தான் உள்ளது. நீ என்ன முடிவு எடுத்தாலும், வாழ்க்கையை ஜெயிக்கப் பார்! வாழ்த்துகள்.— என்றென்றும் தாய்மையுடன்சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !