உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புச் சகோதரிக்கு —என் வயது, 32; சுயதொழில் செய்து வரும் நான், நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டேன்; இரு அழகான ஆண் குழந்தைகள் உள்ளனர். படிப்பறிவு இல்லாதவள், என் மனைவி. கொஞ்சமும் அனுசரித்து நடந்து கொள்ளத் தெரியாதவள். மற்றபடி, என் மேல் உயிரையே வைத்துள்ளாள். நான் மட்டுமே அவளின் உலகம்.என் மனைவியின் அக்கா, யாரையும் திரும்பி பார்க்க வைக்கக்கூடிய அழகானவர். குழந்தைகள் உண்டு; கணவர் உடல் நலமற்றவர்.இரு குடும்பங்களும், எவ்வித பேதமும் இல்லாமல் பரஸ்பர அன்பில், திளைத்திருந்தோம். நான், அவர்கள் வீட்டுக்கு செல்வதும், அவர்கள், என் வீட்டிற்கு வருவதுமாக, தூய நட்புடன் பழகி வந்தோம்.என் மனைவியின் அக்கா கணவர், தாழ்வு மனப்பான்மையால், தன் மனைவியை வெளியில் எங்கும் அழைத்துச் செல்வது கிடையாது. அதனால், கோவில், சினிமா, சர்க்கஸ் என்று எங்களுடன் தான் வெளியில் வருவார்.ஒரு சந்தர்ப்பத்தில், இருவரும் ஒருவரை ஒருவர் ஜெயித்துக் கொண்டோம். அதற்காக, இன்றுவரை இருவருமே வருத்தப்படவில்லை.அவள் என் மீது வைத்துள்ள அன்பு, காதல், அளவிட முடியாதது. ஒரு பெண் கேட்கக் கூடாத சொல் எல்லாம், எனக்காக தாங்கிக் கொண்டாள்.அவள் கணவர் மற்றும் என் மனைவியின் குடும்பத்தினர் உட்பட எல்லாருக்கும், எங்கள் இருவர் மீது சந்தேகம் இருந்தாலும், யாரும் என்னிடம் இதுவரை நேராகக் கேட்டதில்லை. என்னையும், அவளையும் இணைத்து, பக்கத்து வீடுகளில் பேசியதாகவும், அதைக்கேட்டு, அவளுக்கு கோபம் வரவில்லை; சந்தோஷம் வந்ததாக கூறினாள்.'ஒருவேளை உன் கணவன் என்னுடன் பேசக் கூடாது; வரக்கூடாது என்று சொன்னால், என்ன செய்வாய்?' என கேட்ட போது, 'செத்துப் போய் விடுவேன்...' என்கிறாள். இதுவே போதும்... அவள், என் மீது காட்டும் அன்பிற்கு!என் மனசாட்சி உறுத்த, என் மனைவியிடம் உண்மையை சொல்லி விட்டேன். புயல் வீசும் என எதிர்பார்த்தேன்; ஆனால், அவளோ, 'என் கணவர் ஆசைப்பட்டது எல்லாம் கிடைக்கட்டும்...' என்றபோது நொறுங்கிப் போனேன்.மச்சினிச்சியின் குழந்தைகளும் என் மீது உயிரையே வைத்துள்ளனர்; அவளாலும், என் குழந்தைகளை தொடர்ந்து பத்து நாட்கள் கூட பார்க்காமல் இருக்க முடியாது. என் மனைவியின் நிலையோ தர்மசங்கடம். அவ்வப்போது, சிறு சிறு சண்டை வந்தாலும், 'அக்கா ஏன் வரவில்லை?' எனக் கேட்கும் அப்பாவி. எனக்காக எதையும் விட்டுக் கொடுக்கும் என் மனைவியும், அவளும், என் இரு கண்கள். இதில், எந்தக் கண்ணில் காயம்பட்டாலும், சேதம் எனக்குத் தான். எந்தக் கண்ணை சேதப்படுத்திக் கொள்வது. சொல்லுங்கள் சகோதரி...— என்றென்றும் அன்புடன்,அன்புச் சகோதரன்.அன்பு சகோதரருக்கு —பந்தியில் அமர்ந்து சாப்பிடும் நீ, பக்கத்து இலை பதார்த்தங்களையும் எடுத்து உண்கிறாய். உன் பட்டியில் போதுமான ஆடுகள் இருக்க, பக்கத்து பட்டி ஆட்டை, குற்ற உணர்வில்லாமல் திருடி, உன் பட்டியில் சேர்க்கிறாய். கள்ள உறவை, ஒலிம்பிக் சாதனையாய் கருதுகிறாய்.நொடிக்கணக்கில் சந்தோஷத்தையும், யுக கணக்கில் துக்கத்தையும் பரிசளிக்கக் கூடியது, கள்ள உறவு. மனித வெடிகுண்டாய் செயல்படுபவன், எப்படி, தன்னையும் சிதறடித்து, தான் பாய்ந்த இடத்தில் உள்ளவர்களையும் சிதறடிக்கிறானோ, அதைப்போல, கள்ள உறவில் ஈடுபடுவோர், தங்களையும் அழித்து, இரு தரப்பு குடும்பங்களின் எதிர்காலங்களையும் சிதைத்து விடுகின்றனர்.கள்ள உறவு என்பது, விட்டில் பூச்சி, விளக்கில் விழுந்து சாவதற்கு சமம்; சிறிதளவும் தாகத்தை தீர்க்காத கானல் நீர்; லட்சுமணக் கோட்டை தாண்ட வைக்கும் மாயமான். அவ்வுறவின் விளைவு, கொலை அல்லது தற்கொலை.பொருளாதார சுதந்திரம் இல்லாத உன் மனைவி, உனக்கெதிராக கலக குரல் எழுப்பாதது பெரிய அதிசயமில்லை. ஆனால், உள்ளுக்குள் அவள் இதயத்தில், ரத்தம் கசியும்; ஊமையாய், ஒப்பாரி வைப்பாள்.சேற்றில் விழுந்து புரளும் பன்றிகளைப் போல், எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல், அதை சந்தோஷமாக உணர்ந்து, உங்கள் தவறுகளை நியாயப்படுத்தி, மென்மேலும் தவறுகள் செய்கிறீர்கள். கள்ள உறவில் வீழ்ந்தவர் கோடி; அவர்களில் நீயும் ஒருவனாகி விடாதே!உன் மனைவியும், கள்ளக் காதலியும் இரு கண்கள் என கூறியுள்ளாய். ஒருவேளை, உன் மனைவி இதே தவறை செய்து, உன்னையும், கள்ளக் காதலனையும் இரு கண்கள் என்று கூறினால், அதை, அப்படியே மனம் குளிர்ந்து ஏற்றுக் கொள்வாயா... உன் அந்திம காலம் வரை துணை வரும் உன் மனைவி மட்டுமே கண்; கள்ளக் காதலி சீழ் வடியும், துன்பத்தை தரும் புண்.நான் சொல்வதை நீ கேட்டாலும், கேட்காவிட்டாலும், சொல்வதை சொல்லி விட்டேன்... மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டு, கள்ள உறவுக்கு தலை மூழ்கு. சகலை குடும்பத்தை விட்டு விலகிப் போ. உன் குடும்பத்துடன், குலதெய்வம் கோவிலுக்குச் சென்று, கெட்டதிலிருந்து ஒதுங்கும் மன திடம் பெறு. அலைபாயும் மனதை நங்கூரமிடு; இனிவரும் காலங்களில், புதிதாய் கள்ள உறவு ஏற்படும் சாத்தியங்களை ஏற்படுத்திக் கொள்ளாதே!தவறு செய்தால், அதை ஒப்புக் கொண்டு, மன்னிப்பு கேட்கும் உயரிய குணம் பெறு. மாறாக, அதை நியாயப்படுத்தி, உன் மனசாட்சியை கோமாவில் ஆழ்த்தாதே!எந்த பிரிவும், சிறிது காலம் வலிக்கும்; பின், அதுவே, நிலைத்து விடும். குடிபோதையில் ஒருவன் உளறுவதை போன்று தான், கள்ளக் காதலில் ஈடுபடுவோர், பேசும் காதல் மொழிகள். போதை தெளிந்ததும், அந்த வார்த்தைகள் அர்த்தமற்றதாகி, காற்றில் கரைந்து விடும். இனிமேலாவது, நல்ல கணவனாகவும், நல்ல தந்தையாகவும் திகழப்பார்.கடலளவு நீர் இருந்தாலும், உனக்கான பிராப்தம், கையளவே சகோதரா!— என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !