உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மா —நான், 24 வயது பெண். படிப்பு: பி.இ., பணி: ஐ.டி., நிறுவனத்தில்! பெற்றோருக்கு ஒரே பெண். தற்சமயம், எனக்கு மாப்பிள்ளை பார்க்கின்றனர். ஆனால், என் அத்தை மகனை விரும்புகிறேன்; அவனும் என்னை விரும்புகிறான். ஆனால், என்னை விட, மூன்று வயது சிறியவன்.சிறுவயது முதலே, நாங்கள் இருவரும் ஒன்றாக சாப்பிட்டு, விளையாடி, ஒரே வீட்டில் வளர்ந்தோம். அவனும் இன்ஜினியரிங் முடித்து இருக்கிறான்.எங்கள் காதல் விஷயம், வீட்டில் யாருக்கும் இதுவரை தெரியாது. வயதில் குறைந்தவனை திருமணம் செய்து கொள்ள, நிச்சயமாக வீட்டில் சம்மதிக்க மாட்டர்.'நான், வேலைக்கு சென்று, சம்பாதிக்க ஆரம்பித்தவுடன், திருமணம் செய்துக் கொள்ளலாம்; அதுவரை பொறுத்திரு...' என்கிறான், காதலன். ஆனால், என் பெற்றோரோ, இன்னும் ஓர் ஆண்டுக்குள் எப்படியாவது திருமணம் செய்தே ஆக வேண்டும் என்ற முடிவுடன் உள்ளனர்.என் மீது அதிக நம்பிக்கையும், பாசமும் வைத்துள்ளவர்களை எதிர்த்து, எந்த முடிவும் எடுக்க இயலவில்லை; என் காதலை தெரிவிக்கவும் தயக்கமாக உள்ளது. இதனால், அத்தை குடும்பத்துக்கும், என் பெற்றோருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்படுமே என்று அஞ்சுகிறேன்.நான் என்ன செய்ய வேண்டும்... தக்க ஆலோசனை தாருங்கள் அம்மா.— இப்படிக்கு,உங்கள் மகள்.அன்பு மகளுக்கு —உண்மையான காதலுக்கு பணமோ, வயதோ, இனமோ, மொழியோ, நிறமோ, உணவோ மற்றும் கல்வியோ எதுவுமே தடையாய் நிற்காது. மெய்யான காதல், நிபந்தனையற்ற முழு அர்ப்பணிப்புடன் கூடிய சுயநலமில்லாதது. இந்து மதம், காமம் சார்ந்த ஈர்ப்பை, 'காமா' என்றும், உடல் இச்சை இல்லாத ஈர்ப்பை, 'பிரேமா' என்று வகை பிரிக்கிறது.'காதல்... அமைதியானது, பெருந்தன்மையானது, பொறாமைப்படாதது, தற்பெருமை கொள்ளாதது, முரட்டுத்தனம் இல்லாதது, சுயநலத்தை தொலைப்பது, எளிதில் கோபம் கொள்ளாதது, தவறான வழி போகாதது மற்றும் தானும் நம்பி, நேசிப்பவருக்கு நம்பிக்கை தருவது...' என்பர்.நம் உடலில் சுரக்கும், ஆக்சிடோசின், நியூரோட்ராபின்ஸ் மற்றும் பிரோமோன்ஸ் இவற்றின், காக்டெயில் சாகசமே காதல் என்கிறது விஞ்ஞானம். 'காமத்தின் மாறுவேஷமே காதல்...' என்கிறான், ஓர் கவிஞன்.நெருங்கிய சொந்தத்தில் மணந்து கொண்டால், ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கும் என உன்னை பயமுறுத்த மாட்டேன். 45 வயதில், நீ, 'மெனோபாஸ்' காலத்தை அடையும்போது, உன் அத்தை மகன், 42 வயதில், ஆண்மையின் உச்சத்தில் இருப்பான். அந்த, காலக் கட்டத்தில் உன் காதல் தோற்றுப் போகும் என எச்சரிக்க மாட்டேன். பல கோடி ஆண்களில், அத்தை மகன் தான் எனக்கு பொருத்தமானவன் என நீ கருதினால், பல கோடி பெண்களில் நீதான் உன் அத்தை மகனுக்கு பொருத்தமானவள் என, அவன் கருதினால், உங்கள் காதலை யாராலும் தடுக்க முடியாது. மேலும், நீங்கள் இருவரும் மேஜராகி விட்டீர்கள்.இருதரப்பு பெற்றோருக்கும் மனஸ்தாபம் ஏற்படும் என, இருவரும் தயங்காதீர்கள். அத்தை மகன், அவன் பெற்றோரிடமும், நீ, உன் பெற்றோரிடமும் விஷயத்தை போட்டு உடையுங்கள். 'வயது வித்தியாசத்தை பற்றி நாங்களே கவலைப்படாத போது, நீங்கள் எதற்கு கவலைப்பட வேண்டும்... இருவரும் படித்திருக்கிறோம்... நான் வேலைக்கு போகிறேன்... அவனும் விரைவில் வேலைக்கு போவான்... எங்கள் திருமணம், இருதரப்பு குடும்பங்களுக்கும் சந்தோஷத்தை பரிசளிக்கும்... 'சொந்த பந்தங்கள் ஏதாவது கூறுவர் என சங்கடப்படாதீர்கள்... நாங்கள் வாழும் வாழ்க்கையை பார்த்து, அவர்கள் வாயடைத்து போவர்... 'நீங்கள் சம்மதிக்காவிட்டால், தக்க சமயம் பார்த்து, நாங்கள் பதிவுத் திருமணம் செய்துக் கொள்வோம்... பெரியவர்கள் பார்த்து செய்ய வேண்டிய திருமணத்தை, சிறுவர்களே நடத்திக் கொண்டனர் என்கிற ஆவலாதி உங்களுக்கு வரக்கூடாது... 'நான் ஒரு வெளி நபரை காதலித்து, அவன் ஒரு வெளி நபரை காதலித்து உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தினோமா... இரு குடும்பங்களுக்குள் உறவை இன்னும் பலப்படுத்தி இருக்கிறோம்...'அத்தை மகனை நேசிக்கும்போது, அவன் குடும்பத்தையும் நேசிக்கிறேன்... அவன் முறைப்பெண்ணை காதலிக்கும்போது, முறைப்பெண்ணின் குடும்பத்தையும் நேசிக்கிறான்... எங்கள் சுயநலமில்லாத காதலை அங்கீகரியுங்கள்...' என, இதம் பதமாய் இருதரப்பு பெற்றோரிடமும் பேசுங்கள்.யார் இதயமும் இரும்பால் ஆனது அல்ல. உங்களின் உணர்ச்சிபூர்வ இறைஞ்சல்கள் அவர்களின் இதயங்களை நெகிழச் செய்யும். பிடிவாதத்தை தளர்த்தி, உங்கள் திருமணத்திற்கு சம்மதிப்பர். உணர்வு கலந்த, அறிவுப்பூர்வமான முயற்சிகள் தோற்கவே தோற்காது கண்மணி!— என்றென்றும் தாய்மையுடன் சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !