அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மா —என் தோழியின் வயது: 28. கறுப்பு நிறமாக இருப்பாள். கல்லுாரியில் படிக்கும்போதே, தன் நிறத்தை பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்தாள். நாங்கள் தான் அவ்வப்போது, அவளுக்கு ஆதரவாக பேசி, சமாதானப்படுத்துவோம்.'திருமணம் செய்தால், என்னை விட கலரா, சிவப்பா இருப்பவரைத் தான் மணப்பேன்...' என்று கூறுவாள்.அதற்கேற்றாற் போல், ஒரு வரன் அமைந்தது. அவனது படிப்பு, வேலை, குடும்ப பின்னணி என்று எதையும் விசாரிக்காமல் உடனே சம்மதித்ததோடு, திருமணத்தை உடனடியாக முடிக்க வற்புறுத்தினாள். அவளது பெற்றோருக்கும் விசாரிக்க நேரம் தரவில்லை. திருமண நாளும் நிச்சயிக்கப்பட்டது.தனக்கு பார்த்த வரனுடன் போனில், பேச பேச, அவனது சுயரூபம் தெரிய ஆரம்பித்துள்ளது, என் தோழிக்கு. சரியான படிப்பு இல்லை, வேலையும் இல்லை. பெற்றோருக்கு ஒரே பிள்ளை. அப்பா சம்பாத்தியத்தை எடுத்து, ஆடம்பரமாக செலவு செய்கிறவன்.திருமணத்தை நிறுத்த முடிவு செய்தாள், தோழி. ஆனால், அவனோ, 'நீ போனால் என்ன, அதே முகூர்த்தத்தில், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து காட்டுகிறேன்... திருமணம் நின்றால், உன்னை, வேறு யாரும் திருமணம் செய்ய விடமாட்டேன்...' என்று சவால் விட்டுள்ளான்.அப்போதாவது, உஷாராகி இருக்கலாம், தோழி. திருமணம் நின்று விட்டால், பெற்றோருக்கு தலைகுனிவு. மீண்டும் திருமணம் நடத்த முடியாதோ என்று எண்ணி, பெற்றோரிடமும், எங்களிடமும் எல்லாவற்றையும் மறைத்து, அவனையே திருமணம் செய்து கொண்டாள்.திருமணம் ஆனதிலிருந்து, தோழியை கொடுமைப்படுத்தி உள்ளான், அவன். இரண்டு ஆண்டுகளுக்கு பின், சமீபத்தில், அவளை சந்தித்தபோது, உருக்குலைந்து காணப்பட்டாள். என்னவென்று விசாரித்தால், இதையெல்லாம் சொல்லி அழுதாள். 'அவனை விட்டு வந்து விடு...' என்று கூறினால், 'பெற்றோரின் ஆலோசனையை கேட்காமல், நானாக முடிவெடுத்து, படுகுழியில் விழுந்து விட்டேன். மீண்டும் அவர்களிடம் அடைக்கலம் தேடி, எப்படி செல்வது...' என்று தயங்குகிறாள்.இன்னும் காலம் கடத்தினால், மனநோயாளியாகி விடுவாளோ என்று பயமாக இருக்கிறது. தோழிக்கு, தகுந்த ஆலோசனை வழங்குங்கள் அம்மா.— இப்படிக்கு,அன்பு மகள்.அன்பு மகளுக்கு —சாமுத்ரிகா லட்சணம் பொருந்திய ஒரு ஆணை, கணவராய் பெறுவது, கோடி ரூபாய் தங்க நகையுடன், புறநகர் தனி வீட்டில் வசிப்பதற்கு சமம். தோழியின் கணவர், யோக்கியமாய் இருந்தாலும், ஆயிரம் கன்னிப்பெண்கள், வலை வீசுவர். அழகான கணவர்கள் திமிராகவும், கர்வமாகவும் செயல்படுவர். இளமையில் ஒழுங்காக படித்திருக்க மாட்டார்கள்; கடமை உணர்வுடன் வேலைக்கு போக மாட்டார்கள்; மகாராஜா தோரணையில், உலா வருவர். புத்திசாலி பெண்கள், 'சுமார் மூஞ்சி குமார்'களை தான், கணவனாய் தேர்ந்தெடுப்பர்.திருமணம் என்பது என்ன... குறைந்தது, 40 ஆண்டு, நம்முடன் இருந்து குப்பை கொட்டப்போகும் ஆணை தேர்ந்தெடுப்பதே, திருமணம். நாம் ஏதோ சினிமா எடுக்கப் போவதாய் பாவித்து, கணவனாக ஒரு ஹீரோவை தேட வேண்டாம்... 'நீ, அரிசி எடுத்து வா... நான், உமி எடுத்து வருகிறேன்... இருவரும், ஊதி ஊதி தின்னலாம்...' என்கிறவன், ஆண் மகனா... மனைவி, அரிசி எடுத்து வந்தால், கணவன் அதே அளவுக்கு கோதுமையாவது எடுத்து வர வேண்டும். ஆண்மை என்பது சம்பாதிப்பதும், தன்னை சார்ந்திருக்கும் பெண்ணை, குழந்தைகளை, ஆல மர நிழல் போல் விரிந்து பாதுகாப்பதும் ஆகும்.திருமணத்திற்கு முன்பே, தனக்கு கணவராய் வருபவனின் சுயரூபம் தெரிந்திருக்கிறது, உன் தோழிக்கு. அவனது மிரட்டலுக்கு பயப்படாமல், துணிச்சலாய் அவனை கை கழுவி இருக்க வேண்டும்.ஒரு சோம்பேறியை திருமணம் செய்து, இரண்டாண்டு போராடி ஓய்ந்து, களைத்து விட்டாள், உன் தோழி. இப்போதும், அவள், வீண் பிடிவாதம் பிடிப்பது சரியல்ல.பெற்றோரின் ஆலோசனையை கேட்காமல், ஒரு முட்டாளை மணந்து கொண்டது, பெரும் தவறு தான். மகள் செய்த தவறுகளை, ஆயிரம் முறை மன்னிப்பர், நல்ல பெற்றோர். உன் தோழிக்கு தயக்கம் தேவையில்லை.'அப்பா... அப்பா... என்னை காப்பாற்றுங்கள்...' என்றபடி, ஓடி, அவர்களிடம் தஞ்சமடையட்டும். அவர்கள், உன் தோழியின் காயங்களுக்கு மருந்திடுவர். உருக்குலைந்து போன உன் தோழியை, உள்ளும்புறமும் புணரமைப்பர். மகளின் கணவர் என்ற நோயை, மருந்து கொடுத்து குணப்படுத்த முடியுமா அல்லது அறுவை சிகிச்சை தான் தேவையா என, ஆக்கப்பூர்வமாக முடிவெடுப்பர்.உன் தோழி வேலை செய்கிறாளா, இல்லையா என்பதையும், அவளுக்கு குழந்தை இருக்கிறதா, இல்லையா என்பதையும் குறிப்பிடவில்லை. கணவரிடம், 'கட்டி கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த படிப்பும் எத்தனை நாளைக்கு என்பர். சுயமாய் சம்பாதிக்காமல், பெற்றோரின் நிழலிலும், மனைவியின் நிழலிலும் வாழ்வது, ஒரு ஆண் மகனுக்கு அழகல்ல. உங்களின் இரண்டாண்டு சித்ரவதையை மன்னிக்க தயாராய் உள்ளேன்.'புற அழகு நிலையற்றது. உழைத்து, சம்பாதித்து உண்ணவே நம்மை படைத்தான், இறைவன். வேலைக்கு போங்கள்... சொற்ப சம்பளம் என்றாலும் பரவாயில்லை... கோவில் காளையாய் சுற்றியது போதும், உழவு மாடு ஆகுங்கள். 'கறுப்பு என்பது, திராவிட நிறம். நிறத்துக்காக நீங்கள் என்னை இழிவுபடுத்துவது, நம் இனத்தை இழிவுபடுத்துவதற்கு சமம். சிக்கனம், கஞ்சத்தனம் அல்ல. விரலுக்கு தகுந்த வீக்கம் தேவை. நீங்கள் மனம் மாறி, ஒரு நல்ல கணவராய் நடக்காவிட்டால், விவாகரத்து செய்து கொள்வோம். சட்ட உதவியை நாடுவேன்...' எனக் கூறு.எப்போது பார்த்தாலும், மறுமணம் செய்து கொள்ளவே, சகுந்தலா கோபிநாத் ஆலோசனை தருகிறாளே என, நீங்கள் யோசிக்கக் கூடும். பொருந்தா துணையை ஆயுளுக்கும் கட்டி அழுதது, அந்த காலம். காலுக்கு பொருந்தாத செருப்பை கழற்றி எறிந்து, புதிய செருப்பை அணிந்து கொள்வது, இந்த காலம். திருமணம் பற்றிய பார்வைகள் முற்றிலும் மாறி விட்டன. புரிதல், பரஸ்பரம், அங்கீகரித்தல், சந்தோஷங்களையும், துக்கங்களையும் சமமாய் பகிர்ந்து கொள்ளுதல், இன்றைய இல்லறத்தின் இன்றியமையா தேவை. இல்லறத்தின் அகபுற நுட்பங்களை புரிந்து செயல்படுவோம்!— என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்.